உள்ளூர் செய்திகள்

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: இதயத்தை காக்கும் தொழில்நுட்பம்

'அழகு என்பது பார்ப்பவரது கண்ணில் உள்ளது' எனச் சொல்வதைப் போல, 'ஆன்ஜியோகிராம்' பரிசோதனையில், இதய ரத்தக் குழாய் சுருக்கமும், பார்ப்பவரின் கண்களை பொருத்தே அமைகிறது. சில சமயங்களில், 'ஆன்ஜியோகிராம்' பரிசோதனை அடிப்படையில் சிகிச்சை மேற்கொள்வது, நாணயத்தில், பூவா, தலையா போட்டு பார்ப்பது போல் அமைந்து விடும். இது தேவையற்ற வகையில், 'ஸ்டென்ட்' பொருத்துதல் உள்ளிட்டவற்றுக்கு வழிவகுக்கும். 'ப்ராக் ஷனல் ப்ளோ ரிசர்வ்' என்பது, இதய ரத்தக் குழாய் சுருக்கங்கள் காரணமாக, 'ஸ்டென்ட்' வைக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை, துல்லியமாக ஆய்வு செய்வதற்கான நடைமுறை. ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதற்கு, 'ஆதெரோஸ்லெரோசிஸ்' என, பெயர். 45 வயதுக்கு மேற்பட்ட பலர், 'ஆன்ஜியோகிராம்' பரிசோதனை மேற்கொள்ளும் போது, ரத்தக் குழாயில் சுருக்கம் இருந்தால், எளிதாக கண்டுபிடிக்கலாம்; ஆனால், சுருக்கம் இருக்கும் அனைவருக்கும், 'ஸ்டென்ட்' பொருத்துவது மற்றும் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வது தேவை இல்லை. 'ஆன்ஜியோகிராம்' பரிசோதனை செய்வதற்கு முன், 50 சதவீதம் பேருக்கு, 'ட்ரெட் மில்' சோதனை, 'ஸ்ட்ரெஸ் எக்கோ' சோதனை, 'மையோ கார்டியல் பெர்ப்யூஷன் இமேஜிங்' என, பல்வேறு சோதனைகள் செய்யப்படுகின்றன; இவை எதுவும், தெளிவான, துல்லியமான முடிவை தருவதில்லை.சமீபத்தில், என்னிடம் வந்த இரு நோயாளிகளைப் பற்றி சொல்ல வேண்டும். முதல் நோயாளி, நடுத்தர வயதுடைய பெண். வழக்கமான பரிசோதனைகள் செய்ததில், இடது பக்க பிரதான ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தது தெரிந்தது; இது, திடீர் மரணத்தை ஏற்படுத்தக் கூடிய தன்மை உடையது. அவருக்கு, 'ப்ராக் ஷனல் ப்ளோ ரிசர்வ் வயர்' மற்றும் 'இன்ட்ரா வாஸ்குலர் அல்ட்ரா சவுண்ட்' எனப்படும் சோதனை செய்தோம். இதன் மூலம், இதய ரத்தக் குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பு, பெரிதானதல்ல என்பது தெரிய வந்தது. இதனால், அவருக்கு மருந்துகள் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டது.இரண்டாவது நோயாளி, நடுத்தர வயதுடைய ஆண்; நெஞ்சு வலியால் வந்தார். 'ஆன்ஜியோகிராம்' முறையில் துல்லியமாக கண்டறிய முடியாது என்பதால், இவருக்கு, 'ப்ராக் ஷனல் ப்ளோ ரிசர்வ்' முறையில், பாதிக்கப்பட்ட பகுதிக்கு இடையில், ரத்த அழுத்த பரிசோதனை செய்தோம். மேலும், ஐ.வி.யு.எஸ்., முறைப்படி பரிசோதனை செய்ததில், மிக முக்கிய, பிரதான ரத்தக் குழாயில், அதிக கொழுப்பு படிந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது; இதை, வழக்கமான மற்ற பரிசோதனைகளின் மூலம் கண்டுபிடிக்க முடியவில்லை. அதைத் தொடர்ந்து, 'பைபாஸ்' அறுவை சிகிச்சை செய்து, அவர் உயிரைக் காப்பாற்றினோம்.இந்த இரண்டு நோயாளிகளின் அனுபவங்களில் இருந்து, அதிநவீன பரிசோதனைகளின் உதவியால், துல்லியமாக பிரச்னைகளை தெரிந்து, சரியான சிகிச்சை அளிக்க முடிந்தது, மகிழ்ச்சியான விஷயம்.- டாக்டர் செங்கோட்டு வேலு இதய நோய் சிகிச்சை சிறப்பு நிபுணர், சென்னை. healthyheartchennai@gmail.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்