உள்ளூர் செய்திகள்

தண்டு வட அலர்ஜி கண், இதயத்தை பாதிக்கும்; கவனமா இருங்க...!

'தண்டு வட அலர்ஜி பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தடுக்க வேண்டும். இல்லையெனில், கண், இதயம், நுரையீரலையும் பாதிக்க வாய்ப்புள்ளது. நோய் பாதிப்புள்ளோர், திருமணத்திற்கு முன், டாக்டர்களில் ஆலோசனை பெறுவது அவசியம்' என, சென்னை, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, டாக்டர்கள் வலியுறுத்தி உள்ளனர்.இந்தியாவில், 15 சதவீதம் பேர் மூட்டு அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. அக்., 12ம் தேதி மூட்டு அழற்சி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 'ஆரோக்கியமான வாழ்வு, ஆரோக்கியமான முதிர்வு' கருப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக, சென்னை அரசு பொது மருத்துவமனை, மூட்டு தசை, இணைப்புத் திசு நோய்களில் துறைத் தலைவர், ராஜேஸ்வரி குழுவினர், 'தண்டு வட அலர்ஜி நோய்' குறித்து, விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்டுள்ளனர்.1 தண்டு வட அலர்ஜி என்றால் என்ன? முதுகுத்தண்டை மட்டும் பாதிக்குமா?முதுகுத்தண்டில் ஏற்படும் பாதிப்பே தண்டு வட அலர்ஜி எனப்படுகிறது. ஆண்களுக்கு, 20, 30 வயதுகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால், அவர்களின் அன்றாட வேலைகளை செய்ய முடியாமல், குடும்ப பொருளாதார நிலை பாதிக்கும் அளவுக்கு சென்று விடும் என்பதால், கவனமாக இருப்பது நல்லது. தண்டு வட அலர்ஜி என்பது, தண்டு வடத்தை மட்டுமே பாதிக்கும் நோய் என, கருதப்படுகிறது. ஆனால், தண்டு வடம் அல்லாத பிற மூட்டுகளையும் பாதிக்கும். சோரியாசிஸ் மற்றும் குடல் அலர்ஜி நோயும், தண்டு வட அலர்ஜி பாதிப்பை ஏற்படுத்தும்.2 இதற்கான அறிகுறிகள் என்ன? கண்களையும் பாதிக்குமா?முதுகு வலி, மூட்டு வலி, பாத வலி, பாத வீக்கம், விரல் வீக்கம் ஆரம்ப கால அறிகுறிகள். இவை வந்து வந்து போகும். ஆரம்ப நிலையிலேயே பரிசோதனை செய்து, அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். நோயின் தாக்கத்தால், கண்களில் இனம்புரியாத எரிச்சல், கண் சிவக்கவும் வாய்ப்புள்ளது. இதற்கான சிகிச்சை எடுக்காவிட்டால், கண் பார்வை பறிபோகவும் வாய்ப்புள்ளது. இதயம், நுரையீரலையும் பாதிக்கும் வாய்ப்புள்ளது.3 இது பாரம்பரிய நோயா?; சிறு வயதினரையும் பாதிக்குமா?குடும்பத்தில் ஒருவரை பாதித்திருந்தால், அவரது சந்ததியினருக்கும் வர வாய்ப்புள்ளது. முன் கூட்டியே சில பரிசோதனைகள் செய்து, பாதிப்பைக் கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொண்டால், கட்டுப்பாட்டில் வைக்கலாம்.ஆறு வயதில் இருந்து, 45 வயது வரை இந்த பாதிப்பு வர வாய்ப்புள்ளது. சிறுவர்களையும் பாதிக்கும். மூட்டு, தசை, கண்கள், எலும்பு வளர்ச்சி என, பாதிப்பு ஏற்படும். சிறுவர்களுக்கு நினைவாற்றல் குறையாது. ஆனால், வலியால் பள்ளி செல்வது பாதிக்கும்; கவன சிதறலால் கல்வித்திறன் பாதிக்கும்.4 உணவு முறைக்கும் இந்த நோய்க்கும் தொடர்பு உண்டா? குழந்தை பேறு பாதிக்குமா?உணவு முறைக்கும் இந்த நோய்க்கும் எந்த தொடர்பும் இல்லை. கால்சியம் பற்றாக்குறையால் இந்த பாதிப்பு இல்லை. விளையாட்டுகளால் பாதிப்பில்லை. நேரடியாக மூளையை பாதிக்காது. ஆனால், மனச்சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. பெண்களுக்கு குழந்தை பேறு பாதிக்க வாய்ப்புண்டு. ஆனால், முழுமையான சிகிச்சை எடுத்துக் கொண்டால், எந்த சிக்கலும் இல்லை.5 இந்த பாதிப்பு உள்ளோர் திருமணம் செய்யலாமா? மாத்திரையால் ஆபத்து என்கிறார்களே?திருமணம் செய்து கொள்ளலாம்; சிக்கல் இல்லை. அதற்கு முன், டாக்டரின் ஆலோசனை பெறுவது நல்லது. காரணம், தண்டு வட அலர்ஜி பாதிப்புள்ளோர், சல்பாசாலசின் மாத்திரை சாப்பிடுவது வழக்கம். திருமணத்திற்கு, மூன்று மாதத்திற்கு முன் இந்த மாத்திரைகளை நிறுத்த வேண்டும். நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டால், விந்து அணு எண்ணிக்கை கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளதால், டாக்டரின் ஆலோசனை அவசியம்.6 அலர்ஜி நோய் துாக்கத்தை பாதிக்குமா? பயிற்சிகள் தேவையா?தண்டு வட அலர்ஜி காரணமாக, மார்பு பகுதியில் வலி இருக்கலாம். இவை தசை நார்கள் எலும்பினால் ஏற்படும் பிரச்னை. பொதுவாக, இதய நோயாக இருக்குமோ என, பயப்பட தேவையில்லை. அதேநேரத்தில், இந்த அலர்ஜி பாதிப்பு கண்டறியாவிட்டால், இதயத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. அலர்ஜி நோயால், முதுகு வலி வரும் என்பதால், துாக்கம் பாதிக்கும். வலியைக் குறைக்க வலி மாத்திரைகள் மற்றும் உடற்பயிற்சியாலும் வலியைக் குறைப்பதால், சிக்கலின்றி துாங்கலாம். நோய் பாதிப்பு உள்ளோர், தினமும் காலை, மாலை நேரங்களில் உடற்பயிற்சி செய்வது அவசியம்.7 தண்டு வட அலர்ஜி உள்ளோர் விளையாடக் கூடாது என்கிறார்களே?சைக்கிள் ஓட்டுதல், பூப்பந்து, இறகுப்பந்து போன்ற விளையாட்டுகளில் ஈடுபடலாம். கிரிக்கெட், ஹாக்கி போன்ற கடினமான விளையாட்டுகள் கூடாது. அதுபோன்று சாகச விளையாட்டு, கடினமான உடல் வேலைகள், வளைந்து, நெளிந்து செய்தல் கூடாது.8 இதற்காக நீண்ட காலம் மருந்து சாப்பிட வேண்டுமா? நிரந்த தீர்வு என்ன?இந்தநோய்க்கு, வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டும். எந்த பாதிப்பும் தெரியவில்லையே என, பாதியில் நிறுத்த விடக்கூடாது. மூட்டு வலிக்காக, மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது ரத்த பரிசோதனை செய்ய வேண்டும்.மாத்திரைகள் சாப்பிடுவதால், எலும்பு தின்மை நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. பயிற்சி சிகிச்சை மற்றும் கால்சியம், விட்டமின் டி-3 அதிகம் தரக்கூடிய மாத்திரைகளை, டாக்டர்களின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ள வேண்டும். பாதிப்பின் தன்மை அதிகம் இருந்தால், அறுவைச் சிகிச்சைதான் தீர்வு.எந்த முதுகு வலியையும் அலட்சியமாக விடாமல், டாக்டரிடம் ஆலோசனை செய்து, உரிய சிகிச்சை எடுத்தால், பாதிப்பின் பிடியில் இருந்து தப்பலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !