உள்ளூர் செய்திகள்

நோய்கள் ஜாக்கிரதை - அக்கறை காட்டுங்கள்!

குழந்தைப் பருவம் என்பது, ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் முக்கியமான காலகட்டம். குழந்தை பருவத்தில் செய்கின்ற தவறுகள், பிற்காலத்தில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். தற்போது இருக்கும் குழந்தைகள், பெரும்பாலும் தனிக்குடும்பச் சூழலில்தான் வளர்கின்றனர். குறிப்பாக, அடுக்குமாடி குடியிருப்புகளில், விளையாட இடமும், விளையாட்டுக்காட்ட ஆளும் இல்லை என்பதால் ஏங்கிப் போகின்றனர். இந்த ஏக்கத்தைப் போக்கிக் கொள்ள, தொலைக்காட்சி பெட்டியோடும், வீடியோ கேம்ஸ், மொபைல் கேம்ஸ்களோடும் ஒன்றிப்போய் விடுகின்றனர். இது ஆரோக்கியமான விஷயமல்ல!துடிதுடிப்பாக இருத்தல், திறமையும் வேகமும் அதிகமாக இருத்தல், ஒருவரை பார்த்து செயல்களை கற்றுக்கொள்ளுதல் போன்ற குணம் கொண்டவர்கள் குழந்தைகள். ஆனால், எலக்ட்ரானிக் கருவிகளில் விளையாட அவர்களை அனுமதித்தால், மற்ற குழந்தைகளோடு கூடி விளையாடக்கூடிய ஆற்றல் தவிர்க்கப்படும். ஆளுமை குறைபாடுகள் ஏற்படும்.பொதுவாகவே, தனித்து விடப்பட்ட குழந்தைகளின் மனம் தெளிவாக இருக்காது. அங்கு, கற்பனை வளமும் இருக்காது. கருவிகளோடு ஒன்றிப்போய் இருக்கும் குழந்தைகள் அடிப்படையில் கோழைகளாக இருப்பார்கள். கவனக்குறைவுடனே காணப்படுவார்கள்.அவர்களின் நினைவாற்றல் மந்தப்படும். அவர்களுக்கு தனித்து இயங்கத் தெரியாது. எப்போதும் மற்றவர்களை சார்ந்தே இருப்பார்கள். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிப்படி, 'தொலைக்காட்சி அதிகமாக பார்க்கும் குழந்தைகளும், வீடியோ/மொபைல் கேம்ஸ்களில் விளையாடும் குழந்தைகளும், சக மனிதர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள மாட்டார்கள் என்றும், சமூகத்தோடு பரஸ்பர தொடர்புகள் இன்றி இருப்பார்கள்' என்றும் கண்டறியப்பட்டுள்ளது.பெற்றோரே... உங்கள் குழந்தைகளை கருவிகளுக்கு அடிமைகளாக்காதீர்கள்! வீடியோ விளையாட்டுகளுக்கு பதிலாக ஓவியம் மற்றும் இசைத்துறையில் ஈடுபடுத்துங்கள். குழந்தைகளை குழந்தையாகவே இருக்க விடுங்கள். முதியோர் ஆக்காதீர்கள். குழந்தைகள் மீதான நம் அக்கறை குறைந்தால், பிரச்னைகளும் குவியும்.- ஜெயந்தினி, குழந்தைகள் மனநல மருத்துவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்