தூக்க மாத்திரை சாப்பிட வேண்டாம்! - சில சந்தேகங்கள்... சில பதில்கள்!
கீதா, சென்னை: என் மகன், பிறக்கும் போது சாதாரணமாக இருந்தான். வளரும் போது, அவனுடைய ஆண் குறி ஒரு பக்கமாக வளைந்து விட்டது. இதை சீராக்க, அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என, டாக்டர்கள் கூறி விட்டனர். இது கவலையை ஏற்படுத்துகிறது. அறுவை சிகிச்சை செய்யவில்லை எனில், பின்னாளில் பிரச்னை உருவாகுமா? ஓமியோபதி மருந்து உள்ளதா?ஆண் குறியின் தண்டு வளைந்து காணப்படுவதற்கு, 'கார்டி' என்று பெயர். பிறப்பிலேயே உருவான பிரச்னை இது. இது ஏற்படுவதற்கான காரணம் தெரியவில்லை. குழந்தை பிறந்த ஆறு மாதத்திலிருந்து 1 வயது நிறைவதற்குள் இதற்கான அறுவை சிகிச்சை செய்யலாம். குழந்தை நல மருத்துவ நிபுணரிடம் காண்பித்து, அறுவை சிகிச்சை மேற்கொள்வது அவசியம். இல்லையெனில், குழந்தையால் சிறுநீர் வெளியேற்றுவது முதல், வளர்ந்த பின், தாம்பத்தியத்திலும் பிரச்னை ஏற்படும். உடல் அமைப்பில் ஏற்படும் குறைபாடு இது; மருந்து, மாத்திரைகள் மூலம் இதை சரி செய்ய முடியாது.ராஜா, நெல்லை: எனக்கு 6 வயதான போது, டான்சில்ஸ் மற்றும் அடினாய்டு பகுதிகள், அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு விட்டன. இப்போது எனக்கு, அடிக்கடி சளி, இருமல் ஏற்படுகிறது. தொண்டையில் பிரச்னை ஏற்படவில்லை என்றாலும், என் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தது போல் உணர்கிறேன்...'லிம்பாய்டு' தசையாலானது டான்சில்ஸ். பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றை தடுப்பது தான், டான்சில்ஸ் பணி. நுரையீரலுக்கு தொற்று பரவாமல், தொண்டையிலேயே தடுத்து நிறுத்துகிறது. அளவுக்கு அதிகமாக டான்சில்ஸ் வீங்கி, விழுங்குவதில் பிரச்னை, அடிக்கடி தொற்று ஏற்படும்போது, அது அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்படுகிறது. இதனால் எந்த பாதிப்பும் இல்லை. நோய் எதிர்ப்பு சக்தி, நிரந்தரமாக நீங்கி விடும் எனவும் சொல்வதற்கில்லை.லதா, மாம்பலம்: எனக்கு 76 வயதாகிறது. லேசாக, உயர்ரத்த அழுத்தம் உள்ளது. இரவில் தூங்க முடிவதில்லை. அதிகாலை 3 அல்லது 4 மணிக்கு, விழித்து விடுகிறேன். மற்றவர்கள் தூங்கும் நேரத்தில், நான் விழித்து விடுவதால், படுக்கையிலேயே படுத்துக் கிடக்க வேண்டியுள்ளது...வயதாகும் போது, தூக்கப் பழக்கமும் மாறி விடும். குறைந்த தூக்கமும், சீக்கிரம் விழிக்கும் பழக்கமும் ஏற்பட்டு விடும். மருந்து இல்லாமலேயே சமாளிக்க முயற்சி செய்யுங்கள். தூக்க மாத்திரைகள் சாப்பிட்டால், அதற்கு அடிமையாகி விடும் நிலை ஏற்படும். இரவில் தூங்க செல்லும் நேரத்தை, தள்ளிப் போடுங்கள். புத்தகம் படியுங்கள். மதிய நேரத்தில் தூங்குவதையும் தவிருங்கள். தினமும் காலை, மாலை வேளைகளில், 40 நிமிட நடைபயிற்சி மேற் கொள்ளுங்கள்.