உள்ளூர் செய்திகள்

நுரையீரல் பிரச்னைக்கு எக்கோ பரிசோதனையா?

எனக்கு I.L.D என்ற நுரையீரலில் தழும்பு பிரச்னை உள்ளது. கடந்த வாரம் கொடைக்கானல் சென்றபோது, மூச்சுவிடவே சிரமமாகி விட்டது. உடனடியாக ஆம்புலன்சில் கொண்டு வந்து, மதுரை மருத்துவமனையில் அனுமதித்தனர். நான் முறையாக மருந்து எடுத்தும் எதனால் இந்த பாதிப்பு ஏற்பட்டது?Interstitial Lung Disease என்பது நுரையீரலில் ஏற்படும் பைப்ரோடிக் நோய். அதாவது, நுரையீரலில் தழும்பு ஏற்படுவதால், அவற்றில் ஆக்ஸிஜன் பரிமாற்றம் தடைபட்டு, நுரையீரலில் ஆக்ஸிஜன் அளவு குறைந்துவிடும். இப்படி இருக்கும்பட்சத்தில் சமதளங்களில் உள்ள ஆக்ஸிஜன் அளவு நன்றாக இருக்கும்போதே, மூச்சுவிடுவதற்கு பிரச்னை இல்லாமல் மருந்துகள் எடுத்து, நாம் கவனமாக இருக்க வேண்டும். கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்களில், சுற்றுப்புற ஆக்ஸிஜன் சமதளத்தைவிட குறைவாகவே இருக்கும். அதுபோன்ற இடங்களில், இப்பிரச்னை இன்னும் அதிகமாகவே செய்யும். அதனால் தான், உங்களுக்கு மூச்சுவிடுவதில் அதிக சிரமம் உண்டாகி இருக்கும். முதலில் இதற்கு 'ஸ்டீராய்டு' கொடுக்க வேண்டும். அடுத்து மலைப்பிரதேசத்தில் இருந்து கீழே வரவேண்டும். பின், படிப்படியாக இப்பிரச்னை சரியாகி விடும்.சர்க்கரை நோயாளியான எனக்கு தொடர்ச்சியாக காய்ச்சல் இருந்தது. மருத்துவரிடம் சென்றேன். நுரையீரலில் சீழ் இருப்பதால், ஆறு வாரங்கள் மருந்து எடுக்க வேண்டும். குணமாகாவிட்டால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்கிறார். நான் என்ன செய்வது?நுரையீரலில் சீழ் வைப்பதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. உங்களுக்கு சர்க்கரை வியாதி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கு, ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. அதுபோன்ற சமயங்களில் ஏற்படும் நோய் தொற்று, இப்பிரச்னை உண்டாக காரணமாக இருக்கும். அத்துடன், 'டி.பி.,' போன்ற பிரச்னை இருந்தாலும், இது வரலாம். பாக்டீரியாவால் இப்பிரச்னை என்றால், ஆறு வாரங்கள் வரையும், டி.பி.,யால் பிரச்னை என்றால், ஓராண்டு காலம் மருந்துகள் எடுத்தால் சரியாகிவிடும். இல்லையெனில், பாதிக்கப்பட்ட நுரையீரலின் பகுதியை அறுவை சிகிச்சை மூலம் நீக்குவதே சிறந்தது. இல்லையெனில், இது, நுரையீரலின் மற்ற பகுதிகளையும் பாதிக்க வாய்ப்புள்ளது.எனக்கு நீண்ட நாட்களாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளது. சி.ஓ.பி.டி., பிரச்னையும் உள்ளது. டாக்டரிடம் சென்றபோது நுரையீரல் பரிசோதனைகளுடன், எக்கோ பரிசோதனையும் செய்தார். நுரையீரலுக்கும், எக்கோ பரிசோதனைக்கும் என்ன சம்பந்தம்?சி.ஓ.பி.டி., பிரச்னை நீண்ட நாட்களாக இருக்கும்போது, அது இதயத்தின் வலது 'ஏட்ரியம்' மற்றும் வலது 'வெண்ட்ரிக்கிள்' பகுதியை பாதிக்க வாய்ப்பு உள்ளது. அப்படி பாதித்தால், அது 'பல்மோனரி ஹபர்டென்ஷன்' எனும் பிரச்னையை உண்டாகும். அதுபோன்ற சமயங்களில் மூச்சு விடுவதில் பிரச்னை அதிகமாக இருக்கும். அதனால், அப்படி பிரச்னை ஏதும் உள்ளதா என்பதை தெரிந்து கொள்வதற்காகவே டாக்டர் எக்கோ பரிசோதனை செய்துள்ளார். பிரச்னை இருக்கும்பட்சத்தில் அதற்கான மருந்துகள் எடுத்துக் கொள்வதும் அவசியம்.டாக்டர் எம்.பழனியப்பன்,மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !