பணம் சம்பாதிக்க, 1,000 வழிகள் உள்ளன. ஆனால், நியாயமாக, நேர்மையாக, நெடுங்கால நன்மைக்கும், நல்ல பெயருக்கும் என, சில பழைய முறைகள் உள்ளன. இவற்றை தான் நாம் விவாதிக்கப் போகிறோம்.செல்வம் சேர்ப்பது பற்றி நிறைய நுால்கள் படித்திருக்கிறேன். குறிப்பாக, சில இனத்தவர்கள், மற்றவர்களை விட பணம் விஷயத்தில், புத்திசாலித்தனமாக உள்ளதை, வரலாற்றில் தொடர்ந்து படிக்கிறோம். 'பாபிலோன்' வியாபாரிகள் பற்றி புத்தகமே உள்ளது. யூதர்கள் மிகச் சிறிய மக்கள் தொகையாக வாழ்ந்த போதும், என்றுமே செல்வந்தராக இருந்திருக்கின்றனர். வட மாநில மார்வாடிகளும், நம் மாநில நகரத்தார் சமூகமும், செல்வம் சேர்ப்பதில் தங்களை நிரூபித்தவர்கள்.தீர்க்கமான பார்வைநாம், இவர்கள் எல்லாரிடமும் உள்ள பொது அம்சம் என்ன என்பதை மட்டும் பார்ப்போம்; அதை, நாம் பின்பற்ற முடியுமா என்று யோசிப்போம்.இவர்கள் அனைவருக்கும் உள்ள பொது குணம், சேமிக்கும் குணம். இன்னமும் தெளிவாகச் சொன்னால், சேமிப்பு மேலுள்ள நம்பிக்கை. நம் வருமானத்தின் முதல் செலவு, சேமிப்பாக இருக்க வேண்டும் என்ற நம்பிக்கை. எவ்வளவு சிறிய தொகையாக இருந்தாலும், அதை தொடர்ந்து செய்யும்போது உள்ள கணக்கையும், காலப்போக்கில் ஏற்படும் மதிப்பு கூட்டலையும் உணர்ந்தவர்கள்.சேமிப்பு என்பது, எளியவர்களுக்கு என்ற எண்ணத்தை உடையவர்கள். அதை, ஒரு எளிய முதலீடாக செய்பவர்கள் இவர்கள். மற்ற செலவுகள், மற்ற முதலீடுகள் எல்லாம் தனி. இன்றைய வருமானம் எவ்வளவு, எவ்வளவு சேமிப்பு என்று தெளிவாக யோசிப்பவர்கள்.சேமிப்பை, பணத்தில் மட்டுமில்லாமல், எல்லா வளங்களையும் சேமிக்க வேண்டும் என்ற தீர்க்கமான பார்வை உள்ளவர்கள்.கொஞ்சம் பொதுப்படையாக யோசித்தால், நம் நாட்டில் அனைத்து மத்திய வர்க்க மக்களிடம், ஒரு காலத்தில் சேமிக்கும் பழக்கம் இருந்தது.குழந்தைகளுக்கு உண்டி இருந்தது; எல்லா பெண்களும், அஞ்சறைப் பெட்டிகளில் கொஞ்சம் தனிக் கணக்கு வைத்திருப்பர்.நல்லது, கெட்டது என்றால், சொந்தங்கள் முறை செய்து, பெரிய செலவுகளை சமன் செய்யும். ஒரு வீடு முக்கியம் என்பது, ஏதோ ஒரு வடிவத்தில், சேமிப்பு தொடர்ந்தபடியே இருக்கும். வேலைக்கு செல்பவர்கள், மாதா மாதம் சேமித்து ஒரு பொருள் வாங்குவது அன்றைய இயல்பு.கடன் என்பது, நெருக்கடி நிலையில் மட்டுமே கையாளப்பட்ட ஒரு விஷயம். மேற்கத்திய கலாசாரம், கடன் அட்டையை அறிமுகப்படுத்தியது. சம்பாதித்த பணத்தில், செலவு செய்வது போய், செலவு செய்த பணத்தை திருப்பிக் கட்ட சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டோம்.
மன நம்பிக்கை முக்கியம்
இன்றும் தெளிவாக யோசித்து, சேமிப்பவர்கள் இருக்கின்றனர். சேமிப்பு பழக்கம் இளைய வயதில் ஏற்பட்டு விட்டால், 20, 25 ஆண்டுகளில் அவர்களால் பெரிய முதலீடுகள் செய்ய இயலும்.கடன் வாங்குவதற்கு முன், சேமிக்கும் பழக்கம் இருக்க வேண்டும். சம்பாதிக்க துவங்கி, திருமணமாகும் வரை உள்ள பருவத்தில், ஆதார செலவுகள் தவிர, நல்ல தொகையை சேமிப்பவர்கள், பிற்காலத்தில் பெரிய நன்மைகள் பெறுவர்.சேமிப்பு பழக்கம் வர, சில அடிப்படை மனோபாவங்கள் ஏற்பட வேண்டும். சில தெளிவான உள் மன நம்பிக்கைகள் முக்கியம். சேமிப்பு எந்த பகட்டும் இல்லாத ஒரு விஷயம். செலவு செய்கையில், சமூக அங்கீகரிப்பு கிட்டும். புது காரை வாங்கி வாசலில் நிறுத்துங்கள். பக்கத்து வீட்டுக்காரர் புதிதாக, 'சார்...' என்று அழைக்கத் துவங்குவார்.நீங்கள் அணியும், 'பிராண்டட்' உடைகளை, உங்கள் நட்புகள் கொண்டாடும். தொலை துார சுற்றுலா சென்று படங்கள் பதிவிட்டால், சமூக வலைதளங்களில், 'லைக்'கும் அள்ளும். ஆனால், அனைத்தும் உங்களை அதிக வட்டி கடன் பழக்கத்திற்கு இட்டுச் செல்லும்.நான், 1998ல் முதன்முதலாக வெளிநாட்டு காரை, பெருமைஉடன் (கடனில்) வாங்கிய அதே நாளில், என் நண்பர், அதே விலைக்கு பெருங்குடியில், 1 கிரவுண்ட் வாங்கினார். இன்று, அது, 50 மடங்கு மதிப்பான சொத்து அவருக்கு. என் காரை, ஐந்து ஆண்டுகளில் பாதி விலைக்கு விற்று, அடுத்த பெரிய காரை, பன்மடங்கு கொடுத்து (மீண்டும் கடனில்) வாங்கினேன்.
எதிர்பாராத செலவு
ஒரு கார் கம்பெனியில் வேலை செய்யும் பகட்டான மேலாளரான எனக்கு, அந்த புதிய கார் மரியாதையை தந்ததாக நம்பினேன்.கம்பெனி பஸ்சில் பயணம் செய்த அந்த நண்பர், நான்கு ஆண்டுகள் கழித்து, அதே, 'சாண்ட்ரோ' காரை சேமித்த பணத்தில், கடனில்லாமல், முழுத் தொகை கொடுத்து வாங்கினார். யார் பண விஷயத்தில் அறிவாளி என, நீங்களே கணக்கு போட்டுக் கொள்ளுங்கள்.செலவு செய்வதற்கு, பல நேரங்களில், குடும்ப நிர்ப்பந்தங்கள் இருக்கும். உறவுப் பராமரிப்புகளுக்கே நிறைய செலவாகும். நம் வாழ்க்கையில், மனிதர்கள் அதிகமாக அதிகமாக, எதிர்பாராத செலவுகளும் அதிகமாகும்.அதனால் தான் சொல்கிறேன். குடும்ப வாழ்க்கை துவங்கும் முன், உங்கள் சேமிப்பு வாழ்க்கை துவங்கட்டும். தொகை சிறிதாக இருக்கலாம்; ஆனால், அந்த பழக்கம் முக்கியம்.மாதம், 10 ஆயிரம் ரூபாய் சம்பாதித்தால், 9,000 ரூபாய் மட்டுமே, வருமானம் வந்ததாக நினைத்து, அந்த, 1,000 ரூபாயை சேமியுங்கள். மாற்றத்தின் முதல் புள்ளி அது!
டாக்டர் ஆர். கார்த்திகேயன்கட்டுரையாளர், உளவியல் மற்றும் நிர்வாக ஆலோசகர்gemba.karthikeyan@gmail.com