ருசிக்க மறந்த உணவுகள்
நம் உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளில் ஒன்றுதான் குடல். நாம் உண்ணும் உணவு உடலுக்கு தேவையான ஆற்றலைத்தர, குடல்கள் வழியாகத்தான் பயணப்படுகிறது. இதனால், குடல்களை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க வேண்டியது அவசியம். முறையற்ற உணவுப் பழக்கத்தாலும், மோசமான உணவுகளாலும், குடலானது பல்வேறு நோய்களுக்கு உள்ளாகிறது. அவற்றில் ஒன்றுதான், குடல்புழுக்கள் தரும் பிரச்னை. இந்த 'பச்சை சுண்டைக்காய் பருப்பு மசியல்' குடல் புழுக்கள் உருவாவதை தடுக்கும்.பச்சை சுண்டைக்காய் பருப்பு மசியல் செய்வது எப்படி?தேவையானவை: சுண்டைக்காய் - 1 கப், துவரம் பருப்பு - 100 கிராம், பெரிய வெங்காயம் - 2, வரமிளகாய் -4, தக்காளி - 2, எண்ணெய் - சிறிதளவு, பெருங்காயம் - ஒரு சிட்டிகை, கடுகு, சீரகம் - சிறிதளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்பசெய்முறை: துவரம் பருப்பை தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வந்ததும், வரமிளகாய் சேர்த்து, அதனுடன் நறுக்கிய தக்காளி, சுண்டைக்காய் சேர்த்து வதக்கி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். சுண்டைக்காய் வதங்கி வெந்ததும், துவரம்பருப்பு சேர்த்து கிளறி, பெருங்காயம் சேர்க்க வேண்டும். இறுதியாக, பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை தூவி இறக்கினால், சுவையான பச்சை சுண்டைக்காய் பருப்பு மசியல் தயார்.பலன்: வயிறு, இரைப்பை, குடல், கல்லீரல், நுரையீரல் முதலியவற்றில் காணப்படும் கபம், கோழையை நீக்கும். குடலில் தங்கியுள்ள கிருமிகள், நாக்குப் பூச்சிகளை நீக்கும். உடலில் தங்கியுள்ள வாய்வை விரட்டும்.காந்திமதி, ஊட்டச்சத்து ஆலோசகர்