உள்ளூர் செய்திகள்

ருசிக்க மறந்த உணவுகள் - அத்திக்காய் வடை செய்வது எப்படி?

இன்றைய காலகட்டத்தில், உறவுகளை மறந்தது போலவே பாரம்பரிய உணவுகளை மறந்துவிட்டு துரித உணவுகளால் ஈர்க்கப்பட்டு விட்டோம். ஆனால், பாரம்பரிய உணவுகள் எவ்வளவு சத்தானவை தெரியுமா? தமிழர் மருத்துவத்தில் உணவு என்பது அனைத்து நோய்களையும் தீர்க்கக்கூடிய அருமருந்தாக கருதப்படுகிறது.தற்போது, சத்துக்காக அன்றி, சுவைக்காக உண்ணும் நடைமுறை மிகுந்துவிட்டது. உயிர், உடலோடு ஒன்றி, சுற்றுச்சூழலோடு போராடி வெற்றியடைவதே உடல் நலமாகும். இதில் தோல்வியடைந்தால், நோய் வந்து சேரும். இந்தவகையில், இப்போராட்ட வெற்றிக்கு வலுசேர்க்கும் உணவு... அத்திக்காய் வடை.தேவையானவை: அத்திக்காய் - 1 கப் (அரைவேக்காடு), கடலை பருப்பு - 1 கப் (அரை மணி நேரம் ஊற வைத்தது), கடலை எண்ணெய் - தேவையான அளவு, வெங்காயம் - 2 பெரியது, சீரகம் - 1 மேஜைக்கரண்டி, இஞ்சி - சிறு துண்டு, காய்ந்த மிளகாய் - 4, கறிவேப்பிலை - சிறிது, பெருங்காயம் - சிறிது, உப்பு - தேவையான அளவு.செய்முறை: ஊற வைத்த கடலை பருப்புடன், வேக வைத்த அத்திக்காயை சேர்த்து, வடைக்கான பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். இதனுடன், பொடியாக நறுக்கிய வெங்காயம், சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயம் சேர்த்து தட்டையாக தட்டி, கடலை எண்ணெயில் பொன்னிறமாக பொறித்து எடுத்தால், 'அத்திக்காய் வடை' ரெடி!பலன்: பொதுவாகவே, காய்கள் துவர்ப்பு தன்மையுடன் இருக்கும். அத்திக்காயில் துவர்ப்பு தன்மை சற்று அதிகம். இதை, பழமாக சாப்பிடுவதை விட, காயாக சாப்பிடுவது நல்லது. அத்திக்காய் வடை, ஜீரண உறுப்புகளான கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். சிறுநீரகக்கற்கள் வராமல் தடுக்கும். மலச்சிக்கலையும் விரட்டும்.- காந்திமதி, ஊட்டச்சத்து ஆலோசகர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்