அன்பு காட்டுவது ஆபத்து
அன்பை வெளிப்படுத்துவதும், பெறுவதும்தான், மனித இனத்தின் சிறப்பே! அதீத அன்பை வெளிப்படுத்துபவர்களை, இறைவனுக்கு சமமாக ஒப்பிடுகிறோம். ஒருவர் வெளிப்படுத்தும் உணர்வுகள், அதை பெறுபவர்க்கு இதம் தரும் எனில், அது, 'அன்பு' என புரியப்படுகிறது. இத்தகைய உணர்வுகளை ஏற்படுத்துபவர்களை, அன்பானவர்கள், நல்லவர்கள் என, நாம் தீர்மானிக்கிறோம். இதனால்தான், நாம் என்ன செய்தாலும், எப்படிச் செய்தாலும், இதமான உணர்வையே நமக்குத் திரும்ப அளிக்கும் தாயினுடைய அன்பை சிலாகிக்கிறோம்.ஆனால், இந்த அன்பு என்பது அளவுக்கு மீறும்போது ஆபத்தாகிறது. பொதுவாக, எந்த ஒரு உணர்வையும், சில எதிர்பார்ப்புகளோடுதான் மனித இனம் வெளிப்படுத்தும். அன்பும் அப்படித்தான்! ஆனால், அன்பின் எதிர்பார்ப்புகள் பொய்த்து விடும் நேரத்தில், மனதில் வன்மம் துளிர் விடத் துவங்கும். இது ஆபத்தின் அறிகுறி!பொதுவாக, இனிமையான சூழலை மட்டுமே மனித மனம் விரும்பும்; அது, இறுக்கத்தை நேசிக்காது! இந்த அடிப்படையில்தான், ஒருவருக்கொருவர் அன்பை எதிர்பார்க்கிறோம்; பரிமாறுகிறோம்! இதனாலேயே, பிரச்னைகளை சந்திக்கிறோம். 'உனக்கு செல்லம் கொடுத்து கெடுத்து விட்டேன்' என்று புலம்புவது இதனால்தான்! 'நீ என்னை ஏமாற்றி விட்டாய்' என கொந்தளிப்பதும் இதனால்தான்! எனவே, அன்பு காட்டுங்கள்; ஆனால், அளவோடு, கட்டுப்பாடோடு, காரணத்தோடு, எதிர்பார்ப்பில்லாமல் அன்பு செலுத்துங்கள். இல்லையேல், அது ஆபத்திற்குதான் வழிவகுக்கும்!மனநல சந்தேகங்களுக்கு: 94440 34647- மா.திருநாவுக்கரசு, மனநல மருத்துவர்.