மனசே மனசே... குழப்பம் என்ன!
அதீத மன அழுத்தத்தில் இருந்த, 24 வயது இளம்பெண்ணை, அவரது பெற்றோர், என்னிடம் அழைத்து வந்தனர். பொறியியல் படிப்பு முடித்திருந்த அவருக்கு, வரன் பார்த்தனர் பெற்றோர். 'என்னை யாருக்கும் பிடிக்காது; தேவையில்லாமல், இந்த ஏற்பாடெல்லாம் செய்யாதீங்க' எனச் சொல்லி, எந்த ஆர்வமும் காட்டாமல் இருந்த நிலையில் தான், என்னிடம் அழைத்து வந்தனர்.நான் பேசத் துவங்கிய உடன், 'சார்... என் வாழ்க்கையில், இதுவரை எந்த நல்ல விஷயமும் நடந்ததே இல்லை' என்றார். 'ஏன் இப்படி ஒரு முடிவுக்கு வந்தீங்க?' என்றவுடன், 'நீங்களே பார்க்குறீங்க தானே... நான் எவ்வளவு கறுப்பாக இருக்கிறேன்; என், 'சிஸ்டர்ஸ்' எல்லாம் நல்ல கலராக இருப்பாங்க. 'பொறியியல் படிப்பில் எல்லாரும், 90 சதவீத மார்க் வாங்குறாங்க; நான், 75 சதவீத மார்க் வாங்கி இருக்கேன்... காரணம், தமிழ் மீடியத்தில் படித்ததால், கல்லுாரியில் நடத்தும் பாடங்களை புரிந்து கொள்ள, எனக்கு சிரமமாக இருந்தது. எனக்கு எல்லாம், 'நெகடிவ்'வாகவே நடக்கும்' என்றார்.நம் மனதில் இருப்பது தான், வார்த்தைகளில் வெளிப்படும். நாம், எதிர்காலத்தில் என்னவாக போகிறோம் என்பது குறித்த எண்ணம், ஏழு வயதிற்குள் தீர்மானமாகி விடும் என்பது, அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை. தாயின் கருவில் இருக்கும் போதே, தாயின் எண்ணங்கள், சிந்தனை, சாப்பிடும் உணவு, நம்பிக்கைகள், பயங்கள் மற்றும் எதிர்மறை எண்ணங்கள் என அனைத்தும், கருவில் வளரும் குழந்தையை பாதிக்கிறது. இதுவும், அறிவியல் உண்மை. நம்மில், வெளிமனம், ஆழ்மனம் என்ற இரண்டு உள்ளன. வெளிமனம் என்பது, புலன்கள் சார்ந்தது; ஆழ்மனம் என்பது, ஒரு கம்ப்யூட்டரின், 'ஹார்ட் டிஸ்க்' போன்றது. பல தலைமுறைகளாக நம் முன்னோரிடம் இருந்து, மரபணுக்கள் வருவதை போலவே, ஆழ்மன நம்பிக்கைகளும், எண்ணங்களும் வருகின்றன. இந்த பெண்ணை, குழந்தை பருவத்தில் இருந்தே, வீட்டிலும், வெளியிலும், உடன் பிறந்தவர்களுடன் ஒப்பிட்டு பேசுவது, பெண் குழந்தை கறுப்பாக இருந்தால், கல்யாண சந்தையில் விலை போகாது போன்ற சமுதாய நம்பிக்கைகள், அவரையும் அறியாமல், அடி மனதில் ஆழமாகப் பதிந்து விட்டன. 'எப்படி பெற்றோரை தேர்வு செய்யும் உரிமை நம்மிடம் இல்லையோ, அதை போலவே, நம்முடைய நிறம் இப்படி இருக்க வேண்டும்; முக அமைப்பு, மூக்கு மற்றும் கண்கள், இப்படி இருக்க வேண்டும் என, நாம் முடிவு செய்து பிறக்க முடியாது. 'தமிழ் மீடியத்தில் படித்து, பொறியியல் கல்லுாரியில், 75 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பது நல்ல விஷயம். பாடங்கள் புரியாமல், எப்படி இவ்வளவு மதிப்பெண்கள் பெற முடியும்? மொழி என்பது, தொடர்பு சாதனமே தவிர, அறிவை நிர்ணயம் செய்யும் அளவுகோல் இல்லை. 'நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை, ஓரிரு நிமிடங்களில், அழகாக சொல்ல முடிகிறது...' என, அவரிடம் இருந்த, 'பிளஸ் பாயின்டு'களை சொன்னவுடன், அவர் கண்களில் ஒரு வியப்பு தெரிந்தது.குழந்தையில் இருந்தே, அவரின் அடி மனதில், ஆழமாக பதிந்து விட்ட அவநம்பிக்கைகளை போக்க, 'கவுன்சிலிங்' மட்டும் போதாது.'நியூரோ லிங்விஸ்டிக் புரோகிராமிங்' எனப்படும், சைக்கோ தெரபி முறையில், ஆழ்மன நினைவு களில், ஐந்து ஆண்டு குழந்தையாக இருந்த கால கட்டத்திற்கு அழைத்துச் சென்று, சிகிச்சை தந்தேன்; நல்ல பலன் கிடைத்தது.டாக்டர் ஜே.விக்னேஷ் சங்கர் உளவியல் நிபுணர், மதுரைunitedsoulfoundation@gmail.com