மனசே மனசே... குழப்பம் என்ன!
என் அனுபவத்தில், என் வாழ்க்கையை முற்றிலும் மாற்றிய வழிமுறையை சொல்கிறேன். என் சினிமா கேரியரின் துவக்கத்தில், ஆண்டுக்கு மூன்று படங்கள் நடித்தேன். எனக்கு கிடைத்த, 'ஸ்டார் இமேஜ்' ஒருவித மயக்கத்தை தந்தது; அதன் பின்னாலேயே ஓடினேன். விளைவு, ஒரு கட்டத்தில் உடலில் கொழுப்பு சேர்ந்து, உடல், மனம் இரண்டும், 'ஸ்ட்ரெஸ்' ஆனது. ஆஸ்திரியா நாட்டில், 150 ஆண்டுகள் பழமையான, 'வெல்னஸ் கிளினிக்' உள்ளது; 15 நாட்கள் அங்கு சென்று பயிற்சி எடுத்தேன். 'நாங்கள் இந்தியாவில் கற்று வந்ததை, தெரிந்து கொள்ள வந்திருக்கிறீர்கள் மாதவன்...' என, வரவேற்றனர். அடுத்த நாள் காலை, 8:00 மணிக்கு, விளக்க வகுப்புகள் துவங்கின. புரூனே சுல்தான் உட்பட, உலகின் பல செல்வந்தர்கள் இருந்தனர்.காலை உணவிற்கு, எங்கள் முன், நான்கு துண்டுகள் பிரட்டும், சூப்பும் இருந்தன. 'இந்த பிரட்டையும், சூப்பையும், நாங்கள் சொல்கிறபடி சாப்பிட வேண்டும்...' என்றனர். ஒரு துண்டு பிரட்டை வாயில் வைத்து, பிரட் துண்டு மொத்தமும் நீராகும் வரை சுவைத்து, குடிக்க வேண்டும்; இதற்கு, குறைந்தது, 40 முறை சுவைக்க வேண்டியிருந்தது. அதே போல, சூப்பை நன்றாக மென்று, விழுங்க வேண்டும். 15 நிமிடத்தில், என்னால் பிரட்டையும், சூப்பையும் முடிக்க முடியவில்லை. எனக்கு மட்டுமல்ல, எல்லாருக்கும் இது தான் நடந்தது. உணவை நிதானமாக சுவைத்து, அது கூழாகும் வரை நன்றாக மெல்லும் போது, சர்க்கரையும், கார்போ ஹைட்ரேட்டும் வாயிலேயே ஜீரணம் ஆகிறது. நம் வயிற்றில், நிரந்தரமாக ரத்தம் ஓய்வில் இருக்கும். சீன புராணங்களிலும், இந்திய மருத்துவ அறிவியலும் சொல்லும் விஷயம், வயிறு தான் இரண்டாவது மூளை. வயிற்றுக்குத் தெரியும், உடம்பை எப்படி கவனமாக பாதுகாக்க வேண்டும் என்று...உணவை மெல்லாமல், அவசரமாக விழுங்கும் போது, மொத்தத்தையும் சிறுகுடலால் செரிமானம் செய்ய முடியாது; அப்படியே, வயிறு முழுக்க சுற்றி வந்து, சுரந்த அமிலங்கள் அதில் சேர்ந்து, உணவிலிருந்து, அரைகுறையாக ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, முழுவதும் செரிக்காத உணவை, பெருங்குடலுக்கு தள்ளி விடும். நாம் சாப்பிடும் எந்த உணவும் சமச்சீரானது இல்லை; ஆனால், சாப்பிடும் ஒவ்வொரு துளியும், கார்போ ஹைட்ரேட், புரதம், கொழுப்பு மற்றும் வைட்டமின்கள் என, அனைத்தும் வெவ்வேறு விகிதங்களில் நிறைந்தது.ஒரு காளை மாட்டின் மூளைக்குத் தெரியும், புல்லிருந்து, தேவையான புரதத்தை எப்படி எடுப்பது என்று... கடைசியில், இந்தியாவில் இருந்து அவர்கள் கற்றுக் கொண்டதாகக் கூறியது இது தான்:நம்முடைய சாஸ்திரங்கள் என்ன கூறுகிறது... நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ, அது தான் நீங்கள். இன்றைய வாழ்க்கையில், எல்லாரும் அதீத மன அழுத்தத்தில் இருக்கிறோம். ஒரு நாளில், 10 நிமிடங்கள், மொபைல் போன், 'டிவி' இல்லாமல் அமைதியாக, கவனம் சிதறாமல், சாப்பிட முடியவில்லை.அலெக்சாண்டர், மகாத்மா காந்திஜி... இந்த உலகத்தில், கற்பனைக்கு எட்டாத சாதனைகள் செய்தவர்கள் எல்லாம், ஒரு விஷயத்தில் ஒழுங்கை கடைப்பிடித்தனர்... அது, உணவுப் பழக்கம். உணவு, அவர்களுக்கு முக்கியமான ஒன்று. என்ன சாப்பிடுகிறோம்; எப்படி சாப்பிடுகிறோம்; எப்போது சாப்பிடுகிறோம் என்பதில், கவனமாக இருந்தனர். இந்த முறையை நான் பின்பற்றிய பின், 'ஸ்ட்ரெஸ்' குறைந்து, தலைமுடி நன்றாக வளர்ந்தது; தோல் ஆரோக்கியமாக மாறி விட்டது. உடலளவில் நாம் ஆரோக்கியமாக இல்லாமல், மனதளவில் ஆரோக்கியமாக இருக்க முடியாது.ஆர்.மாதவன், மோட்டிவேஷனல் ஸ்பீக்கர், நடிகர்.