உள்ளூர் செய்திகள்

மனசே மனசே... குழப்பம் என்ன!

திருமணமான இளம்பெண் அவர். கணவர், மும்பையில் வேலை செய்கிறார். இவர், இரு குழந்தைகளோடு, தமிழகத்தின், வட மாவட்டத்தில் உள்ள நகரம் ஒன்றில், அம்மா வீட்டில் வசிக்கிறார். சில மாதங்களாக, வீட்டை விட்டு எங்கேயும் வெளியில் செல்வதில்லை. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு, அவர்கள் மாலை திரும்பி வரும் வரை, பதற்றத்துடன் காத்திருப்பார். வீட்டின் வெளியே, லேசாக சத்தம் கேட்டால் கூட, பயந்தபடியே எட்டிப் பார்ப்பார். மாதம் ஒருமுறை, மனைவி, குழந்தைகளை பார்க்க, மும்பையில் இருந்து வரும் இவரது கணவருக்கு, கடந்த இருமுறை வந்த போதும், மனைவியின் நடத்தையில், பெரிய வித்தியாசம் இருப்பதாக தெரிந்தது. என்னவென்று புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், மனதளவில், மனைவி ஏதோ பிரச்னையில் இருப்பது மட்டும், அவருக்கு புரிந்தது. உளவியல் தொடர்பான என்னுடைய புத்தகங்கள், இணையதளம் ஆகியவற்றில், என்னை பற்றி ஏற்கனவே படித்து, அழைத்து வந்தார்.'என் மனைவி ஏதோ பயம், குழப்பத்தில் இருப்பதாக தெரிகிறது' என்றார்.அந்த பெண்ணிடம் தனியாக பேசினேன். 'குழந்தைகள் வெளியில் போனால், அவர்களுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என, பயமாக உள்ளது. ஸ்கூலில் எல்லாருடனும் சேர்ந்து இருந்தால், தொற்று ஏற்பட்டு விடும். பஸ் மற்றும் ரயிலில் பயணம் செய்தால், யார் யாரோ வருவர்; அவர்களிடம் இருந்து நோய் தொற்று ஏற்படும். அவர் வெளியூரில் இருந்து வருகிறார்; அதனால், வீட்டில் எந்த பொருளையும் அவர் தொட முடியாதபடி, பரண் மேலே வச்சிடுவேன். அவர் தொட்டா அழுக்காயிடும். தினமும், 45 நிமிடம் குளிப்பேன்...' என்றார்.இரண்டாவது முறை வந்த போது, இன்னும் கூடுதல் சகஜமாக என்னிடம், 'இப்பல்லாம், 'டிவி' பார்க்குறதே இல்லை. அதில் வர்ற காதல் காட்சிகளை பார்த்தா, வேண்டாத எண்ணங்கள் என் மனசில் வருது. 'இது, தப்புன்னு தெரிந்தாலும், என்னால் கட்டுப்படுத்த முடியலை. கோவிலுக்கு போனாலும் அபத்தமாக ஏதாவது தோணுது; அதனால, கோவிலுக்கும் போறதில்லை' என்றார். இவருடைய பிரச்னையே, கணவன் இல்லாத சமயத்தில் வரும் பாலியல் உணர்வுகள் தான். இது தவறு என நினைத்து பயந்தார். வெளியில் செல்லவும் தயங்கினார். அந்த அழுத்தம், எல்லா விதத்திலும், அதீத சுத்தம் பார்ப்பது என்ற வேறு விதத்தில் வெளிப்பட்டு இருக்கிறது. ஒரு விஷயத்தை திரும்பத் திரும்ப செய்வது, கட்டுப்படுத்த நினைத்தாலும், சில எண்ணங்களை கட்டுப்படுத்த முடியாமல் போவது, இதற்கு, 'அப்செசிவ் கம்பல்சிவ் டிஸ்சாடர்' என, பெயர். 'இதெல்லாம் இயற்கையான உணர்வுகள். இதில், எந்த தவறும் இல்லை. நம் உணர்வுகளுக்கு அதீத கற்பனை செய்து, மிகுதியான அர்த்தம் கொடுப்பது தவறு' என, விளக்கினேன். கணவருக்கு, இவர் மேல் அன்பும், அக்கறையும் இருப்பதால் தான், சரியாக புரிந்து கொண்டு, மனைவியை ஆலோசனைக்கு அழைத்து வந்துள்ளார். பாலியல் உணர்வுகள் தவறு என பயந்து, அந்த எண்ணங்கள் வராமல் இருப்பதற்காகவே, எப்போதும் நோய் குறித்த சிந்தனை என, வேறு விதமாக வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த பிரச்னை இருந்தால், தாங்கள் செய்வதும், நினைப்பதும் தவறு என, தெரியும்; ஆனால், கட்டுப்படுத்த முடியாது. பிரச்னையின் தன்மை அப்படி. ஐந்து செஷன்கள் வந்தார். கவுன்சிலிங் தவிர, அறிவாற்றல் மற்றும் நடத்தை சிகிச்சையுடன், பதற்றத்தை குறைக்க, 'ஆட்டோ ஜெனிக் ரிலாக்சேஷன் தெரபி' கொடுத்தேன்; இயல்பாகி வருகிறார். ஒரு விஷயத்தை திரும்பத் திரும்ப செய்வது, கட்டுப்படுத்த நினைத்தாலும், சில எண்ணங்களை கட்டுப்படுத்த முடியாமல் போவது, இதற்கு, 'அப்செசிவ் கம்பல்சிவ் டிஸ்சாடர்' என பெயர்.டாக்டர் சித்ரா அரவிந்த், உளவியல் நிபுணர், சென்னைhellomanasconsultancy@gmail.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !