உள்ளூர் செய்திகள்

மனசே மனசே... குழப்பம் என்ன!

அந்த இளம் பெண்ணிற்கு வயது, 25 முதல், 30க்குள் இருக்கும். எல்லாவற்றையும் இழந்து, தனக்கென்று எதுவும் இல்லை என்ற விரக்தியான மனநிலையில் இருந்தார். இவரும், கணவரும் ஐ.டி., துறையில் வேலை பார்க்கின்றனர். திருமணம் முடிந்து, மூன்று மாதத்திற்குள் முதல் குழந்தை கர்ப்பம். வேலையை தற்காலிகமாக விட்டு விட்டு, குழந்தையை பார்த்துக் கொண்டார். ஓராண்டுக்குப் பின், வேலையில் சேர்ந்தார். முதல் குழந்தைக்கு இரண்டு வயதாவதற்குள், இரண்டாவது குழந்தை கர்ப்பம். மீண்டும் வேலையை விட வேண்டிய சூழல். திருமணத்திற்கு முன், அம்மா இவரை தனியாக வளர்த்தார். கல்லுாரியில் படிக்கும் போதே, பகுதி நேர வேலை பார்த்த அனுபவமும் இருக்கிறது; ஆனால், அப்போது வாழ்க்கை இப்படி இல்லை. படிப்பு, வேலையை தவிர, வேறு எந்தப் பொறுப்பும் இவருக்கு கிடையாது. உட்கார்ந்த இடத்தில் சாப்பாடு தருவது, கேட்ட இடத்திற்கு காபியை கொண்டு வந்து கொடுப்பது என, அம்மா பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டார். ஆனால் தற்போது, குழந்தைகள், கணவர், வீட்டுப் பொறுப்பு என, அனைத்தையும் இவரே பார்க்க வேண்டியுள்ளது. ஒரு நாளில், ஒரு மணி நேரம் கூட தனக்கென, எதுவும் செய்ய முடிவதில்லை. இன்னொரு விஷயம், திருமணத்திற்கு முன் விழுந்து விழுந்து கவனித்த அம்மா, இப்போது, குழந்தைகளுக்கு என, ஏதாவது கேட்டால் கூட, 'என்னால் முடியாது' என, சொல்லி எரிந்து விழுகிறார். இரண்டாவது பிரசவத்திற்காக அம்மா வீட்டிற்கு போன போது, இவர் எதிர்பார்த்தது போல, அம்மா இவரை கவனிக்கவில்லை. இதனால், அம்மா மீதும் வெறுப்பாக இருந்தது. 'ஒவ்வொரு நாளையும் நகர்த்துவதை நினைத்தாலே மூச்சு முட்டுது' என்றார்.திருமணம் ஆனவுடன் குழந்தை பெற்றுக் கொள்ளும் எண்ணம் இல்லாமல் இருந்தார். எதிர்பாராத விதமாக கர்ப்பம் தரித்து விட்டது. இரண்டாவது குழந்தையும் அப்படித் தான். சரி, 'அபார்ஷன்' செய்து விடலாம் என, நினைத்த போது, 'வேலையை விட்டு விடு; குழந்தை வேண்டும்...' என, சொல்லி விட்டார் கணவர். 'அம்மா, கணவர் என, யாருமே என்னைப் பற்றி யோசிக்கவில்லை; அவரவரின் நலத்தை மட்டுமே பார்க்கின்றனர்' என்ற கோபம் வேறு இருந்தது. தான் எதிர்பார்த்தது போல, திருமண வாழ்க்கை இல்லையே என, ஏங்கினார்.'குடும்ப வாழ்க்கை, குழந்தை என்பது, ஒரு பெண்ணிற்கு அவசியம்; பாதுகாப்பானதும் கூட. 30 வயதிற்கு மேல் என்றால், குழந்தை பெற்றுக் கொள்வதில் பல சிக்கல்கள் வரும்.'கடந்த, 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் கருத்தரிப்பு மையங்கள், காளான்கள் போல பெருகி இருப்பதற்கு, குழந்தை பெறும் வயது அதிகரித்து இருப்பதும் ஒரு காரணம். வேலை எப்போது வேண்டுமானாலும் கிடைக்கும்; ஆனால், தாய்மை அப்படி இல்லை.'இயற்கை, ஒரு பெண்ணின் உடம்பையும், மனதையும் தாய்மைக்காக படைத்திருக்கிறது. அது ஒரு வரம். கிடைக்கும் போது, அதை ரசித்து அனுபவிக்க வேண்டும்...' என, பல உதாரணங்களுடன், அவருக்கு விளக்கினேன். அவ்வளவு எளிதில் அவர், 'கன்வின்ஸ்' ஆகவில்லை. ஒவ்வொரு முறை வரும் போதும், அதிக நேரம் பேச வேண்டியிருந்தது. பெண்கள் அனைவரும், தங்கள் உடல்நிலையை கவனத்தில் கொள்ள வேண்டும்.செல்லம் நரேந்திரன், மனநல ஆலோசகர், கோவை.econtact.srijan@gmail.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்