மனசே மனசே... குழப்பம் என்ன!
தனியார் தெலுங்கு சேனல் ஒன்றில், 'மேமு சேத்தாம்' - நாங்கள் செய்வோம் என்ற பெயரில், 'ரியாலிட்டி ஷோ' ஒளிபரப்பாகி வருகிறது. பொருளாதார நிலையில், பின் தங்கியுள்ள குடும்பங்களை அழைத்து, அவர்களின் பிரச்னைகளை, அவர்களே சொல்ல வைக்கும் நிகழ்ச்சி அது! பிரபலமானவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று, பாதிக்கப்பட்டவர்களின் குறைகளைக் கேட்டு, அவர்களால் ஆன உதவியை செய்கின்றனர். இதுவரையிலும், அனுபவம் இல்லாத வேலையை, ஒரு நாள் மட்டும் செய்து, அதில் கிடைக்கும் வருமானத்தையும், பிரபலங்கள், பாதிக்கப்பட்டவருக்கு தருகின்றனர். சமீபத்தில், இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்ற, பாகுபலி பட புகழ் நடிகர் ரானா, ஒருநாள் முழுக்க மார்க்கெட்டில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து கிடைத்த வருமானத்தை, நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு குடும்பத்திற்கு வழங்கினார். அந்த குடும்பத்தில் பார்வை இழந்த ஒரு பெண், தன் இரண்டு, சிறு வயது மகன்களுடன் பங்கு பெற்றார். இரு சிறுவர்களிடமும் ரானா பேசிய போது, சொன்ன விஷயம் தான் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 'உங்களுக்கு கடவுள் மீது நம்பிக்கை உள்ளதா? என் தாத்தா இறப்பதற்கு முன், என்னிடம், 'கடவுள் கஷ்டங்களை யாருக்கு கொடுப்பார் தெரியுமா? யார் தைரியமாக எதிர் கொள்கின்றனரோ அவர்களுக்கு தான்' என, கூறினார். 'உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? எனக்கு வலது கண்ணில் பார்வை கிடையாது. இறந்த பின், யாரோ ஒருவர் தானமாகக் கொடுத்த கண் தான் நீங்கள் பார்ப்பது; ஆனாலும் பார்வை திரும்ப வரவில்லை. 'இடது கண்ணை மூடினால், நீங்கள் யாரும் எனக்குத் தெரிய மாட்டீர்கள். ஒரு கண்ணோடு தான் வாழ்கிறேன்' என்றார். இந்த உண்மையை ரானாவே சொன்னவுடன், சில நிமிடங்கள், கனத்த அமைதிக்கு பின், நிகழ்ச்சியை நடத்தும் நடிகை லட்சுமி மன்ச்சு, 'உண்மை தான்... ரானாவுக்கு வலது கண்ணில் பார்வை கிடையாது' என்றார்.பாரம்பரியம் மிக்க, வசதியான குடும்பத்தில் பிறந்தவர், நடிகர் ரானா. தனக்கு எப்படி பார்வை இழப்பு ஏற்பட்டது என்பதையும் விளக்கினார். 'எனக்கு, 7 வயது இருக்கும் போது, சாலை விபத்து ஒன்றில், என் வலது கண்ணில் பார்வை பறி போனது; ஒரு கண் பார்வையோடு தான் இருக்கிறேன். 'நாம் என்ன பிரச்னை தந்தாலும் தைரியமாக எதிர் கொண்டு, இவன் வெளியில் வருவான்' என, கடவுளுக்குத் தெரியும். பரிசோதித்துப் பார்க்கவே பிரச்னைகளைத் தருவார். 'பார்வை இழந்ததால் ஏற்பட்ட விளைவுகளை, இன்று வரை வெற்றிகரமாக சமாளித்து வருகிறேன். என் குறையை புதிதாக கேட்பவர்கள் யாரும், என்னைப் பார்த்து பரிதாபப்பட்டதில்லை; மாறாக, ஒரு நடிகராக, பல சவாலான கதாபாத்திரங்களில் நடித்து, தேசிய அளவில் புகழ் பெற்றதை பாராட்டுகின்றனர். என், 'பிட்னெஸ்' குறித்தும், வியப்புடன் கேட்பதும் உண்டு.'பிரச்னைகளை தைரியமாக சந்தித்து வெற்றி பெறும் போது, நம்மிடம் இருந்து வரும் நேர்மறை உணர்வுகள், எல்லாரையும் திரும்பிப் பார்க்க வைக்கும்; மற்றவர்களுக்குநம்பிக்கையையும், தைரியத்தையும் தரும். 'என் தாத்தா சொன்னவார்த்தைகளை, முழுமையாக நம்புபவன் நான். என்ன பிரச்னை வந்தாலும், எப்படி இதை எதிர்கொள்வது என தான் யோசிப்பேன்' என்றவர், தொடர்ந்து, சிறுவர்களிடம், 'உங்கள் அம்மாவின் சிகிச்சைக்கும், உங்கள் கல்விக்கும் என்ன உதவி தேவை என்றாலும் நான் செய்கிறேன்; தைரியமாக சமாளியுங்கள். 'படித்து பெரியவனாகி, நிறைய சம்பாதித்து, அம்மாவை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். பிரச்னைகளை தைரியமாக சந்தித்தால், சிரமங்கள் சீக்கிரம் விலகி விடும்' என்றார். நீங்கள் தைரியமாக இருந்தால், சோகங்கள் எல்லாம் ஒரு நாள் பயந்து ஓடிவிடும். பிரச்னைகளை தைரியமாக சமாளிக்கும் போது தான், நம்மைச் சுற்றி இருப்பவர்களை, மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும்.'பிரச்னைகளை தைரியமாக சந்தித்து வெற்றி பெறும் போது, நம்மிடம் இருந்து வரும் நேர்மறை உணர்வுகள், எல்லாரையும் திரும்பிப் பார்க்க வைக்கும்; மற்றவர்களுக்கு நம்பிக்கையையும், தைரியத்தையும் தரும்'ரானா, தெலுங்கு நடிகர், ஐதராபாத்.