கர்வமும் கற்றுக்கொள்!
கர்வப்படுங்கள்; கர்வப்படுவதற்கு முயற்சி செய்யுங்கள்; தவறேதும் இல்லை! அதேசமயம், எச்சரிக்கை உணர்வோடும், மனிதாபிமானத்தோடும், சமூக உணர்வோடும் கர்வப்படக் கற்றுக்கொள்ளுங்கள். அப்போதுதான் கர்வம் கம்பீரமாகும்.இது எப்படி சாத்தியம்?பொதுவாகவே, எவ்வித களங்கமும் இல்லாமல், நிறைவாக முழுமையாக இருக்க வேண்டும் என்றுதான் நாம் ஆசைப்படுகிறோம். 'நம்மிடம் உள்ள குறைகள் மற்றவர்களுக்குத் தெரியாது, தெரிய வாய்ப்பில்லை' என்று நம்புகிறோம். இந்த நம்பிக்கைதான் நமக்கு அசாத்திய தைரியத்தை தருகிறது.'யாரும் நம்மிடமுள்ள வெற்றிடத்தை, வேண்டாதவற்றை அரிய வாய்ப்பில்லை' என்ற அறியாமையே, 'எத்தகைய சந்தர்ப்பத்தையும் எதிர்கொள்ள முடியும்' என்ற துணிச்சலைத் தருகிறது. நாளாவட்டத்தில், இத்தகைய அனுபவம் ஒரு மமதையை தருகிறது. பின் அதுவே, போதையாக மாறுகிறது. 'தன்னால் அனைத்தும் முடியும்' எனும் அசாத்திய நம்பிக்கை, இறுமாப்பை ஏற்படுத்துகிறது. களங்கமில்லாத, தெளிவான, நேர்மையான, நிதர்சனமான உன்னதநிலையை அடைந்ததாக கருத வைக்கிறது. இதைத்தான் 'கர்வம்' என்கிறோம்.இது ஒரு வரவேற்கத்தக்க, விரும்பத்தக்க, அதேசமயம் எளிதில் அடைய முடியாத நிலையாகும். எனவேதான் கர்வப்படுவதற்கு அனைவரும் ஆர்வம் கொள்கின்றனர்; ஆவேசப்படுகின்றனர்.அதேசமயம், கர்வம் தலைதூக்கியபின், துணிச்சல் என்பது அசாத்திய துணிச்சலாக மாறுகிறது. தைரியம் அதீத தைரியமாக உருப்பெறுகிறது. அத்தருணத்தில் நம் குறைகள், சறுக்கல்கள் மற்றும் தவறுகள் நம் கண்களுக்குத் தெரியாமல் போய்விடும். இதனால், 'இவை அனைத்தும் மற்றவர்களுக்கு புலப்படும்' என்பதும் அறியாமல் போய்விடும். இதுதான் வீழ்ச்சியின் ஆரம்பம்.இதை உணர்ந்து கொண்டாலே போதும்; கர்வப்பட அனைவரும் தகுதியானவர்களே!மனநல ஆலோசனைகளுக்கு: 94440 34647- மா.திருநாவுக்கரசு, மனநல மருத்துவர்