உள்ளூர் செய்திகள்

கனவு தவிர்... நிஜமாய் நில்!: சுரப்பி சுருங்கும் இடைவெளியில்...

பெண்களுக்கு, 40 வயதானால் வரும் பிரச்னை, மார்பகங்களில் வரும் நீர்க் கட்டிகள்! அதாவது, 'பிரஸ்ட் சிஸ்ட்!' வயது ஆக ஆக, இனி குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதில்லை; பால் கொடுக்கும் அவசியம் இல்லை எனும் போது, ஹார்மோன் செயல்பாடு குறைய ஆரம்பிக்கும். எனவே, பால் சுரப்பிகள் சுருங்கத் துவங்கும். எல்லா சுரப்பிகளும் ஒரே நேரத்தில் சுருங்காது; கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கும். சுருங்கும் போது, சுருங்குகிற இடைவெளியில், நீர் கோர்ப்பது தான், 'சிஸ்ட்!' இது பொதுவாக வரக் கூடியது தான். இந்த, 'சிஸ்ட்' எல்லாம் கேன்சர் என, அர்த்தம் கிடையாது. கேன்சராக மாறி விடுமோ என்ற பயமும் தேவையில்லை; சிகிச்சையும் தேவையில்லை. சில சமயம், நிறைய நீர் கோர்த்து, பெரிதாகி விடும்; அப்போது வலிக்கும். நீர் கோர்க்க கோர்க்க, விரியும் போது வலியைக் கொடுக்கும். சமயங்களில் தொற்று ஏற்படலாம். கைகளால் தொட்டாலே தெரியும். இப்படி இருந்தால், 'மேமோகிராம், ஸ்கேன்' எடுத்துப் பார்த்தால், நீர்க்கட்டி தானா என்பது தெரிந்துவிடும். இந்த நீர்க்கட்டியில் வேறு வளர்ச்சி எதுவும் இல்லை; வேறு பிரச்னையும் இல்லை; வெறும் நீர் தான் என தெரிந்தால், அப்படியே விட்டு விடலாம். நீர்க்கட்டிக்குள் வளர்ச்சி இருந்து, அதில் உள்ள திரவம், ரத்த நிறத்தில் இருந்தால், 'பயாப்சி' செய்து பார்க்க வேண்டும்.நீர் கட்டி, கேன்சராக மாற வாய்ப்பில்லை; ஆனால், 'மெனோபாஸ்' பருவத்தில், இது போன்ற கட்டிகள் வருகின்றன. நீர்க்கட்டி இல்லாமல், புதிதாக கட்டிகள் வந்தால், இது நீர்க்கட்டியாகத் தான் இருக்கும் என, அலட்சியமாக இருக்கக் கூடாது. மார்பில், புதிதாக ஏதாவது கட்டி இருப்பது தெரிந்தால், அவசியம் பரிசோதனை செய்ய வேண்டும்.டாக்டர் செல்வி. ராதாகிருஷ்ணா மார்பக அறுவை சிகிச்சை சிறப்பு நிபுணர், சென்னை.selvi.breastclinic@gmail.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்