கனவு தவிர்... நிஜமாய் நில்!: தாய் - சேய் இணைக்கும் சர்க்கரை!
கர்ப்ப காலத்தில் ஏற்படும் நீரிழிவு கோளாறுக்கு, முறையான சிகிச்சை எடுக்காவிட்டால், குழந்தைக்கு, 'டைப் 2' நீரிழிவு கோளாறு வரும் வாய்ப்புகள் அதிகம்.கர்ப்பத்தில் கரு தங்கி வளர்வதற்கு, சில வகை ஹார்மோன்கள் சுரக்கும்; ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இதை சமன் செய்ய கூடுதலாக இன்சுலின் ஹார்மோனை சுரக்கிறது, கணையம். இது இயல்பாக நடக்கும் விஷயம். இதுபோல, கூடுதலாக இன்சுலின் சுரக்காத பெண்களுக்கு, கர்ப்ப கால நீரிழிவு கோளாறு வருகிறது.கர்ப்ப காலத்தில், நீரிழிவு பிரச்னை இருந்தால், அம்மாவின் உடலில் உள்ள அதிகப்படியான சர்க்கரை, 'பிளசென்டா' வழியே, கருவுக்கும் செல்லும்; இதனால், சிசுவின் கணையம், கூடுதலாக இன்சுலினை சுரக்கும். குழந்தை, அதிக எடையுடன் பிறக்க வாய்ப்புகள் அதிகம். எதிர்காலத்தில், குழந்தைக்கு உடல் பருமன், 'டைப் 2' நீரிழிவு வரலாம்.பத்து ஆண்டுகளுக்கு முன், அதிக உடல் பருமன், மரபியல் உட்பட, நீரிழிவு வருவதற்கான காரணிகள் அதிகம் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு மட்டும், கர்ப்பம் தரித்த எட்டாவது வாரத்தில், நீரிழிவு பரிசோதனை செய்வோம். ஆனால், 'தற்போது கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின், எச்.ஐ.வி., பரிசோதனை எப்படி கட்டாயமோ, அப்படி, 10வது, 24 - 29வது வாரம் என, கர்ப்ப காலத்தில் மூன்று முறை ரத்த சர்க்கரையின் அளவை பரிசோதிக்க வேண்டும்' என, மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.கர்ப்ப காலத்தில் ஏற்படும் நீரிழிவு கோளாறுக்கு, முறையான சிகிக்சை செய்தால், டயட், உடற்பயிற்சி மூலமே நீரிழிவு கோளாறை கட்டுப்படுத்தலாம்.டாக்டர் மாதுரி பாலாஜி,மகளிர் நல சிறப்பு மருத்துவர், சென்னை.madhurisbalaji@gmail.com