நீங்கள் பணத்திற்காக வேலை செய்கிறீர்களா அல்லது பணம் உங்களுக்கு வேலை செய்கிறதா? நீங்கள் பணத்திற்காக வேலை செய்வது, உங்களை ஓட வைத்துக் கொண்டே இருக்கும். பணம், உங்களுக்கு வேலை செய்தால், மாத வருமானத்துக்காக நீங்கள் ஓட வேண்டாம்.ராபர்ட் கியோசாகி இந்த கேள்வியை, தன், 'ரிச் டாட் புவர் டாட்' புத்தகத்தில் முன் வைத்தார். முதல் முறை படித்த போது தான் தெரிந்தது, நம்மில் பலர், வாழ்க்கை முழுவதையும் பணம் சம்பாதிப்பதற்கு மட்டுமே ஓடிக் கொண்டிருக்கிறோம் என்று!மாதச் சம்பளக்காரர்கள், வேலையில் இருக்கும் வரை வருமானம் வரும்; வேலை போனால், வருமானம் போய் விடும். சேமிப்பில்லாத பலர், வேலை இழக்கையில், நிர்கதியாய் நிற்க காரணம், இங்கு வருமானம் என்பது, தனி நபர் நேரத்தையும், உழைப்பையும் சார்ந்தது. அதற்கான அன்றாட உழைப்பு நிற்கும் போது, வருமானமும் நின்று விடுகிறது.
ஓய்வு எடுக்க முடியாது
சிறு தொழில் புரிபவர்கள் நிலையும், கிட்டத்தட்டஇப்படித் தான். ஒரு நெசவாளி நெய்ய நெய்ய, வருமானம் பெருகும்; நெய்தல் நிற்கையில், வருமானம் நிற்கும். தனியாக, 'பிராக்டீஸ்' செய்யும் டாக்டர்களின் வருமானமும் இப்படித் தான். 'கிளினிக்'கில் உட்கார உட்கார, வருமானம் வரும்; கிளினிக் வராத போது, வருமானம் இழக்கின்றனர்.இதனால் தான், இது போன்று சிறு தொழில் செய்பவர்கள், மாதச் சம்பளக்காரர்களை விட அதிகம் உழைக்கின்றனர். விடுமுறை எடுத்துக் கொள்ளாமல், உடல் உபாதைகள் பொருட்படுத்தாமல், குடும்பத்தை கவனிக்க முடியாமல், ஒரே இடமாக, தானே வருந்தி வேலை செய்யும் ரகம் இவர்கள்.அனைத்து சிறு வணிகர்களுக்கும் இது பொருந்தும். 80 சதவீத சிறு வியாபாரிகள், அடிப்படையில் தங்கள் தொழிலுக்காக உழைக்கும் தொழிலாளிகளே!இங்கு, பலருக்கும் பிரச்னை மாதாந்திர செலவுகள் தான். வருமான வரம்பு தெரிவதால் அதற்கான செலவு, கடன் என, ஏற்பட்டு விடுகின்றன. அதனால், ஒரு மாதம் கூட, இவர்களால் வேலையிலிருந்து ஓய்வு எடுக்க முடியாது.தினசரி வேலைகளிலேயே ஈடுபடுவதால், தங்கள் தொழிலை பன்மடங்காக பெருக்கும் எண்ணமோ, ஆலோசனையோ, முதலீடோ இவர்களால் செய்ய முடிவதில்லை.நள்ளிரவு வீடு திரும்பி உண்டு, உறங்கி, மறுநாள் காலை மீண்டும் ஓடும் வாழ்க்கை இயந்திரத் தன்மையாகி விடுகிறது. ஒரு வலைப்பின்னலில் சிக்கிய வாழ்க்கை போல, மீள வழி தெரியாமல் போகிறது. 10 ஆண்டுகளுக்கு மேல், ஒரு தொழில் ஒரே நிலையில் இருந்தால், அதை பெருக்கும் சாத்தியக் கூறுகள் குறைந்து விடுகின்றன.
சேமிப்பு மற்றும் முதலீட்டு
மேலே விரிவாக சொன்ன வாழ்க்கை முறையில் தான், உலகில், 90 சதவீத மக்கள் இயங்குகின்றனர். ஆனால், பணத்தை தனக்கு வேலை செய்யும் சூட்சுமத்தை, மிக இளம் வயதில் அறிந்து செயல்படுத்துபவன் தான், முதல் சந்ததி செல்வந்தராகிறான்.என்ன செய்ய வேண்டும் இதற்கு? உங்கள் வருமானம் முதலீடாக மாற வேண்டும். அது, மாதா மாதம் உங்களுக்கு வருமானம் தர வேண்டும். நீங்கள் வேலை செய்வதை விட, உங்கள் முதலீடு உங்களுக்கு வேலை செய்து, உங்கள் வருமானத்தை ஸ்திரமாக தந்து கொண்டிருக்க வேண்டும். இந்த வேலையை, சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் செய்ய வேண்டும்.நம் முன்னோர், இதை மிக இயல்பாகச் செய்தனர். ஒவ்வொரு குடும்பத்திற்கும், நிலம் அவசியம் என்று உணர்ந்தவர்கள் அவர்கள்.அதேபோல, தங்கம் சேமித்து வைப்பது, அடமானம் வைப்பதற்கு அல்ல. குடும்பச் சொத்து மதிப்பில் அது முக்கிய அம்சம் என்று. இந்தியா எந்த தேக்க நிலையிலும் பெரிதும் அடிபடாமல் இருந்ததற்கு காரணம், நம் சேமிப்பு மற்றும் முதலீட்டு பழக்கத்தால் தான்.என் உறவினர் ஒருவர் நல்ல வேலையில் சேர்ந்தார். முதல் மாதச் சம்பளத்தில், 1 சவரன் தங்கக் காசு வாங்கினார்; பின், அதை பழக்கமாக்கி, திருமணம் ஆகும் வரை, மாதம், 1 சவரன் காசு வாங்கினார். அது, பின்னாட்களில் அவர் தொழில் துவங்குகையில், முதலீட்டில் ஒரு பெரும் பங்காக கை கொடுத்தது.
வாழ்க்கையை மாற்றும் முதலீடு
நகைகளாக தங்கம் வாங்குவது வேறு, சேமிப்பிற்கு வாங்குவது வேறு. நகைகளை அழித்து, டிசைன் டிசைனாக வாங்குவது வாழ்க்கை முறைக்காக. தங்கத்தை காசாகவோ, பத்திரமாகவோ வாங்கி சேமிப்பது, உங்கள் முதலீட்டிற்கு உதவும்.எல்லா முதலீடுகளும், தொழில்களாக இருக்க வேண்டியதில்லை. நாலு கடைகள் கட்டி, வாடகைக்கு விடுவதும் முதலீடு தான். பங்குச் சந்தையில் ஓரளவு நிலையானவற்றில், நெடுங்கால முதலீடு செய்வதும் நல்லது தான். உங்கள் வசதிக்கும், நம்பிக்கைக்கும், திறனுக்கும் ஏற்ற பாதுகாப்பான முதலீடுகளை செய்யுங்கள்.ஓர் ஆண்டு வேலை செய்யாவிட்டாலும், 'என்னால் தாக்கு பிடிக்க முடியுமா?' என்று யோசியுங்கள். இல்லை என்பது பதிலானால், நீங்கள் ஒரு சுழலில் சிக்கியுள்ளீர்கள். ஐந்து ஆண்டுகளுக்குள், மாதாந்திர சேமிப்பில் முதலீடு செய்ய முடியுமா என்று கணக்கு போடுங்கள்; அதற்காக, சில தியாகங்கள் செய்ய நேரிடும்.ஆனால், தொடர் வருமானம் தரும் முதலீடு செய்ய தெரிந்து விட்டால், அது தான் உங்கள் வாழ்க்கையை மாற்றும். இதன் பொருள், ஒரு பெரிய தொழிற்கூடம் கட்டுவது என்பதல்ல. செலவை குறைத்து, சிறு முதலீடு செய்வது. அது, உடனே வருமானம் தராவிட்டாலும், நாளடைவில் தரத்தக்கதாக இருக்க வேண்டும்.இதை என்று துவங்குவது? இன்றே தான். அலை ஓய்ந்த பின் குளிக்கலாம் என்று காத்திருக்க முடியுமா என்ன? அடுத்த ஐந்தாண்டு திட்டம் தீட்ட அருமையான நேரம் இது!
டாக்டர் ஆர். கார்த்திகேயன்கட்டுரையாளர், உளவியல் மற்றும் நிர்வாக ஆலோசகர்gemba.karthikeyan@gmail.com