நாங்க இப்படிதானுங்க! கடற்கரை ஈரத்தில் காலடி பதித்து...
நான் வசிப்பது நீலாங்கரையில். தினமும், ஒரு மணி நேரம் கடற்கரை மணலில் நடப்பேன். சாதாரணமாக நடப்பதை விட, மணலில் நடப்பது சிரமம். கால் பாதங்களுக்கு கிடைக்கும் மணல் அழுத்தம், உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை சீராக்கும். கடல் காற்றில் பிராணாயாமம் உட்பட சில மூச்சுப் பயிற்சிகளை தவறாமல் செய்கிறேன்; இது நுரையீரல் முழுவதையும் ஆக்சிஜன் நிரப்பி, புத்துணர்வைத் தருகிறது.பயணங்களின் போதும் நிறைய நடப்பேன். மூன்று, நான்கு மாடிகள் என்றாலும், 'லிப்ட்' பயன்படுத்தவே மாட்டேன். நடன நிகழ்ச்சி இருந்தாலும், இல்லாவிட்டாலும், சோர்வாக இருப்பதாக உணர்ந்தால், கிரீன் டீ குடிப்பேன். நடன நிகழ்ச்சிக்கு முன், மோர் கலந்த ஓட்ஸ் குடிப்பேன்; இது எனக்கு நிறைய, 'எனர்ஜி'யை தருகிறது. எப்போதும் வெதுவெதுப்பான நீர் மட்டுமே குடிக்கிறேன்.இதுதவிர, ஆண்டிற்கு ஒரு முறை, 14 நாட்கள், ஆயுர்வேத மருத்துவமனையில், 'அட்மிட்' ஆகி, உணவு கட்டுப்பாடுடன் கூடிய, சில சிகிச்சை முறைகளை, நான்கு ஆண்டுகளாக செய்து வருகிறேன். இந்த நாட்களில், மொபைல் போன், இன்டர்நெட், 'ஏசி' என, எதுவும் இல்லாமல், இயற்கையான சூழலில் இருப்பது வழக்கம். இந்த சமயத்தில், மின் விசிறிக்கு அடியில் படுப்பது கூட கிடையாது.- கோபிகா வர்மா, மோகினி ஆட்டக் கலைஞர்.