உள்ளூர் செய்திகள்

கேள்வி - பதில்

எனக்கு வயது 30; தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். குறைவாகவே நடப்பேன்; எங்கு சென்றாலும் இருசக்கர வாகனம் தான். ஆனாலும் கால் பாதங்கள் வலிக்கின்றன. காரணம் என்ன?பிரபாகர், அரக்கோணம்.கால் பாதங்கள் வலிக்க காரணம், தைராய்டு பிரச்னை இருக்கலாம். தைராய்டு பிரச்னை இருந்தால், கால்கள் வலிக்கும்; உடல் சோர்வடையும். மேலும், பாதங்களிலுள்ள திசுக்கள் சேதமடைந்து இருந்தாலும், பாதங்கள் வலிக்க துவங்கும்.அதோடு, நீரிழிவு நோய்க்கான பரிசோதனை செய்து கொள்வதும் நல்லது. நீரிழிவு நோய் இருந்தாலும், கால் பாதங்கள் வலிக்கும். அல்லது ஊசி குத்துவது போன்ற உணர்வு இருக்கும். குதிகால் எலும்பிலிருந்து, 'பிளான்டர் அப்போனீரோசிஸ்' எனும் திசுக்கொத்து, கால் கட்டை விரலை நோக்கிச் செல்கிறது. குதிகால் எலும்பும் இந்தத் திசுக்கொத்தும் இணையும் இடத்தில், ஒருவித அழற்சி ஏற்பட்டு, வீக்கம் உண்டாகும். அதனாலும் குதிகால் வலி ஏற்படும்.விவேகானந்தன், எலும்பு நிபுணர், சென்னை.என் மகளுக்கு வயது 19; ஒல்லியாக இருக்கிறாள். அதற்கு என்ன காரணம்?உமா மகேஷ்வரி, திருச்சி.பொதுவாக, உடல்வாகு என்பது அவரவர் பரம்பரை தன்மையைப் பொறுத்தது. அப்பா, அம்மா ஒல்லியாக இருந்தால், அவர்களின் வாரிசுகளும் ஒல்லியாக இருக்க அதிக வாய்ப்புண்டு. ஆனால், அவர்களுக்கு, ஆரோக்கியத்தில் எந்தக் குறையும் இருக்காது. ஆகவே, அதற்காக கவலைப்பட அவசியமே இல்லை.சத்துக் குறைவால், உடல் ஒல்லியாக இருப்போர் தான் அதிகம். எனவே ஊட்டச்சத்துள்ள உணவுகளான பால், பழம், முட்டை, மீன், இறைச்சி போன்றவற்றை தினமும் கொடுத்து வந்தால் சத்துக் குறைவு நோய்கள், இவர்களை எளிதில் தாக்காது. போதிய ஊட்டச்சத்தில்லாமல் ஒல்லியாக இருப்போர், சத்தான உணவுகளை சாப்பிட்டால் ஆரோக்கியமானவர்களாக ஆகிவிடுவர்.தில்லைநாதர், பொது மருத்துவர், திருநெல்வேலி.துாக்க மாத்திரை சாப்பிடுவது நல்லதா?சந்தோஷ், மயிலாப்பூர், சென்னை.நன்றாகத் துாங்கி எழுவதற்கு, தினமும் துாக்க மாத்திரையைச் சாப்பிடும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. ஆனால், அது ஒரு நிரந்தரத் தீர்வு அல்ல. மாத்திரையின் வீரியம் குறையக் குறைய, அதன் அளவை அதிகரிக்க வேண்டியிருக்கும். அதனால், உடலில் வேறு பல பாதிப்புகள் ஏற்படலாம். துாக்க மாத்திரையைச் சாப்பிட்டுப் பழகிவிட்டால், திடீரென அதை நிறுத்தவும் முடியாது. அப்படி நிறுத்தினால் துாக்கம் பாதிக்கப்படும்.சுரேந்திரன், பொது மருத்துவர், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !