"ஆரோக்கிய வாழ்வுக்கு நடைப்பயிற்சி அவசியம்
மதுரையை விட்டு, சுத்தமான காற்று மற்றும் மாசு இல்லாத வேறு ஊருக்கு சென்றால், நுரையீரல் சம்பந்தமான நோய் வராமல் இருக்க வாய்ப்புள்ளதா?நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு, 50 சதவீதம் மாசு நிறைந்த சுற்றுச் சூழல்தான் காரணம். ஆனால், மீதமுள்ள 50 சதவீதம் மற்ற காரணிகளாலும், நுரையீரல் சம்பந்தமான நோய்கள் வருகின்றன. உதாரணமாக, குளிர்ந்த காற்றுகூட, நுரையீரல் சம்பந்தமான நோய்களை உருவாக்கலாம். அதுமட்டுமல்ல நாம் சாப்பிடும் உணவுகூட, நமக்கு அலர்ஜியை ஏற்படுத்தி, நுரையீரல் சம்பந்தமான நோயை உருவாக்க வாய்ப்பு உள்ளது. இதைப் போல, பல காரணங்கள் உள்ளன. அத்துடன் மாசு இல்லாத சுற்றுச்சூழல் கொண்ட வெளிநாடுகளிலும்கூட, இன்று, அலர்ஜி சம்பந்தமான நோய்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், நீங்கள் கேட்டதுபோல மாசு இல்லாத மதுரையை, நாம் உருவாக்கினால், இப்பிரச்னையில் இருந்து ஓரளவு தப்பிக்க இயலும்.எனது 80 வயது தாய், நுரையீரல் செயல்திறன் 30 சதவீதமாக உள்ளது. அவரது ஆயுளை அதிகரிக்க செய்யலாமா?உங்கள் தாயாருக்கு 30 சதவீதம் நுரையீரல் செயல்திறன் என்பது குறைவுதான். இதனால் இருதயமும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. முதலில் நுரையீரலில் என்ன தொந்தரவு உள்ளது என்பதை கண்டறிந்து, அதை சரிசெய்ய வேண்டும். நுரையீரல் செயல்திறனை அதிகரிக்க, 'பல்மோனரி ரிகேபிலிடேஷன்' பிசியோதெரபி பயிற்சிகள் மிகமிக அவசியம். உடலுக்கு உணவு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு உடற்பயிற்சியும் மிகமுக்கியம். உங்கள் தாயாருக்கு 80 வயது என்கிறபோது, முடிந்த அளவு நடைப்பயிற்சி, மூச்சுப் பயிற்சிகளை செய்யும்படி கூறுங்கள். பயிற்சிகள் மூலம் நுரையீரல் செயல்திறன் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. நுரையீரல் செயல் திறனை அதிகரித்தால், நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழலாம்.ஆஸ்துமா ஏற்படுத்தும் காரணிகள், மனித உடலில் உள்ள ஜீன்களில் உள்ளனவா? அவற்றை சரிசெய்தால், ஆஸ்துமாவை குணப்படுத்த முடியுமா?அந்தக் காலத்தில் நம்முன்னோர் கூறிய தலையெழுத்து என்பது இந்த ஜீன்கள்தானோ என்னவோ, இன்று நமக்கு ஏற்படும் ஒவ்வொரு நோயும் இந்த ஜீன்களால் ஏற்படுபவை தான். உதாரணமாக, இருவேறு நபர்கள், தொடர்ச்சியாக புகைபிடிக்கின்றனர் என்றால், அவர்கள் இருவருக்கும் சி.ஓ.பி.டி., எனும் நுரையீரல் நோய் வருவதில்லை. எவருக்கு அந்தநோய் உண்டாவதற்கு சாதகமான ஜீன்கள் உடலில் இருக்கிறதோ, அவர் மட்டுமே அந்நோயின் பாதிப்புக்குள்ளாகிறார். இன்று ஆய்வுகள் அனைத்துமே, இந்த ஜீன்கள் பற்றிதான் நடந்து கொண்டிருக்கின்றன. வரும் காலங்களில், புற்றுநோய் முதல் ஆஸ்துமா வரை, எந்த ஜீன்களால் நோய் உருவாகிறது, அதை தடுப்பது எப்படி, வந்தபின் அதை சரிசெய்வது எப்படி என்பது முற்றிலும், இந்த ஜீன்களை வைத்துதான் மருத்துவம் தீர்மானிக்கப்படும். எனவே, ஆஸ்துமா மட்டுமல்ல மனிதனுக்கு தோன்றும் பெரும்பாலான நோய்களுக்கு, ஜீன்களே ஒருமுக்கிய காரணியாக விளங்குகிறது.- டாக்டர் எம்.பழனியப்பன்,மதுரை. 94425-24147