உள்ளூர் செய்திகள்

ஈயை சுத்தியால் அடிக்க வேண்டுமா?

கண்ணன் பிறந்த 25 நாட்களில், அவனுக்கு சளியுடன் மூச்சு முட்டல் ஏற்பட்டது. அவன் தந்தை, கார் ஓட்டுனராக ஒரு வீட்டில் பணிபுரிகிறார். பெற்றோர், குழந்தையை உடனே மருத்துவ மனைக்கு எடுத்து செல்ல, டாக்டர்கள் ஆன்டிபயாடிக் மருந்துகளால் சிகிச்சை அளித்தனர். குழந்தைக்கு, 45 நாட்களில், மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இம்முறை, அக்குழந் தைக்கு வீரியமுள்ள ஆங்கில மருந்துகள் வழங்கப்பட்டன. ஒரு நாளை க்கு மூன்று முறை, 'ஆஸ்தலின் இன்ஹேலர், மூன்று வேளை பேகலேட் இன்ஹேலர், மேலும் இரண்டு வேளை, 'மியூகோலைட்' வழங்கப்பட்டது. இக்குழந்தையின் மூத்த சகோதரனுக்கும் இதே நோய் இருந்ததால், தினமும், 'இன்ஹேலர்' உபயோகித்து வந்தான்.அக்குழந்தையின் தந்தை பணிபுரியும் வீட்டில் உள்ளவர்கள், குழந்தை நிலைமை பற்றி கேள்விப்பட்டு, அவனை இம்முறை ஆயுர் வேத சிகிச்சைக்கு எடுத்து செல்லுமாறு அறிவுறுத்தினர். அதன்படி முதன் முறையாக, ஆயுர்வேத வைத்திய சாலையில், அக்குழந்தைக்கு பரம்பரை வைத்திய மருந்துகள் கொடுக்கப்பட்டன. ரஜன்யாதி சூரணம், தான்வந்தர குளிகை என்ற இரண்டு மருந்துகளின் கலவை ஒரு சிட்டிகை, தேனும், நெய்யும் கலந்து, குழந்தைக்கு பலமுறை கொடுக்கப்பட்டது. தாய்ப்பால் குடிக்கும் பச்சிளங்குழந்தைக்கு, நோய் உண்டானால், குழந்தைக்கு மட்டுமன்றி, தாய்க்கும் மருந்தளிப்பது, பரம்பரை வைத்திய முறையின் சிறப்பான அம்சம்.இம்முறைப்படி, குழந்தை களின் வியாதிக்கு, தாயே மருந்து உட்கொண்டு, பத்தியமான உணவை மேற்கொள்வதால், தாய்ப்பால் வழியாக, குழந்தைக்குத் தேவையான மருந்தின் அம்சங்கள் போய் சேருவதுடன், நோய் உருவாகும் காரணங்களும் தவிர்க்கப்படுகின்றன. கண்ணனின் தாய்க்கு, பால் சுரப்பும் குறைவாக இருந்ததால், அதற்கும் சேர்த்து மருந்துகள் கொடுக்கப்பட்டன. வெகு விரைவில் குழந்தையின் மூச்சுத்திணறல் முற்றிலும் மாறியது. குழந்தையின் தாய்க்கும் சீராகப்பால் சுரக்கத் துவங்கியது. குழந்தைகளை நோயின்றி ஆரோக்கியமாகப் பராமரிப்பது அவசியம். சிறு வயதிலிருந்து குழந்தைகளை நலமாகப் பராமரிப்பது, அவர்களுக்கு எதிர்காலத்தில் நோயற்ற ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அஸ்திவாரம் இடும். மாறாக, இளம் வயதிலிருந்தே குழந்தை களுக்கு உண்டாகும் சிறு சிறு நோய்களுக்கு, பலத்த பக்க விளைவுகளை உண்டாக்கும் மருந்துகளைப் பயன்படுத்துவதால், குழந்தைகளின் ஆரோக்கியம் சீர் குலைந்து, ஜீரண சக்தி குன்றி, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியின்றி காணப்படுவர்.குழந்தைகளின் அனைத்து வியாதிகளுக்கும், மிருதுவான, ஜீரண சக்தியையும், ஊட்ட சக்தியையும் வளர்க்கக் கூடிய மருந்துகளையே பயன்படுத்த வேண்டும். முன் காலத்தில், வீடுகளில் பெரியவர்கள் குழந்தைகளின் பெரும்பாலான நோய்களுக்கு வீட்டிலேயே சீரான வைத்தியம் செய்தனர். வீட்டு வைத்தியத்திற்குக் கட்டுப்படாத நோய்களுக்கு ஆங்கில வைத்தியரிடம் சென்று, நோய் உபாதைகளை நீக்கும் முறையான மருந்துகளைப் பெற்றுக் கொண்டனர். இன்று பச்சிளங் குழந்தைகளின் சிறு சிறு வியாதிகளுக்கு கொடுக்கப்படும் ஆங்கில மருந்துகள், பெரும்பாலும் ஈயைச் சுத்தியால் அடிப்பது போன்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !