மலையாளத்தில் எழுதிய தமிழ் எழுத்தாளர்
''பசங்களா, எல்லாரும் வாங்க, கதை கேட்கலாம்''என்று அழைத்தார் அவர்.மளமளவென்று குழந்தைகள் தந்தையைச் சுற்றி அமர்ந்தார்கள். ஆர்வத்தோடு அவருடைய முகத்தையே பார்த்தார்கள்.அவர் கதையைச் சொல்லத் தொடங்கினார். அவர்கள் வாழும் பகுதியில் தினமும் தென்படுகிற மனிதர்களின் கதைதான். ஆனால், அதைக் குழந்தைகள் விரும்பும் வகையில் சிறப்பாகச் சொன்னார்.குறிப்பாக, அந்தக் குழந்தைகளில் ஒருவனுக்குத் தன்னுடைய தந்தை சொல்லும் கதைகள் மிகவும் பிடித்தது. அவரைப்போல் தானும் கதைகள் சொல்லவேண்டும் என்று ஆசை எழுந்தது. பத்து, பன்னிரண்டு வயதிலேயே கதைகள் எழுதிப் பழகத்தொடங்கினான்.அப்போது அவனுக்குத் தமிழில் எழுத்து, வாசிப்புப் பயிற்சி இல்லை. கதைகளையெல்லாம் மலையாளத்தில்தான் எழுதினான். அவற்றைப் பத்திரிகைகளுக்கு அனுப்பிவைத்தான்.ஆனால், அந்தக் கதைகள் எதுவும் பிரசுரமாகவில்லை. அனுப்பிய சில நாட்களிலேயே திரும்பி வந்துவிட்டன.அந்தச் சிறுவன் இளைஞனான நேரம். அவர்கள் வசித்த பகுதியில் ஒரு கலவரம் நடந்தது. அதைக் கூர்ந்து கவனித்த அவன், நடந்த அனைத்தையும் எழுத்தில் பதிவுசெய்தான். அதை மலையாளப் பதிப்பகங்களுக்கு அனுப்பிவைத்தான்.ஆனால், இதுவும் பிரசுரமாகவில்லை; நிராகரிக்கப்பட்டுவிட்டது.பின்னர், கே. ஜி. சேதுநாத், கரமணை ஜனார்த்தனன் என்ற மலையாள எழுத்தாளர்கள் அந்தப் பதிவை வாசித்தார்கள். 'இது வெறும் வரலாற்றுப்பதிவு இல்லை; ஒரு சிறந்த நாவல்' என்று பாராட்டினார்கள்.இருபத்தைந்து ஆண்டுகளுக்குப்பிறகு, அந்த நாவல் தமிழில் வெளியானது. 'கூனன் தோப்பு' என்ற பெயரில் வெளியிடப்பட்ட அந்த நாவல், இன்றைக்கும் விரும்பி வாசிக்கப்படும் அருமையான படைப்பு. அதை எழுதியவர், சாகித்ய அகாதெமி விருது பெற்ற தோப்பில் முஹம்மது மீரான்.பல சிறப்பான தமிழ் நூல்களை எழுதிப் பெரிய விருதுகளையெல்லாம் வென்றிருக்கும் தோப்பில் முஹம்மது மீரான், ஆரம்பத்தில் தமிழில் எழுதத்தெரியாதவராக இருந்தார் என்றால் யார் நம்புவார்கள்?அப்படியானால், அவருடைய படைப்புகள் எப்படித் தமிழில் வந்தன?தொடக்கத்தில் அவர் மலையாளத்தில் கதைகளை எழுத, இன்னொருவர் தமிழில் மொழிபெயர்த்தார். பின்னர் அவர் சொல்லச்சொல்ல இன்னொருவர் தமிழில் கதைகளை எழுதினார். ஐம்பது வயதுக்குப்பிறகுதான், அவர் தமிழ் நூல்களை வாசிக்கத்தொடங்கினார், நேரடியாகத் தமிழில் எழுதத்தொடங்கினார்.ஒரு கடலோரக் கிராமத்தின் கதை, துறைமுகம், சாய்வு நாற்காலி, அன்புக்கு முதுமை இல்லை போன்ற பல சிறப்பான படைப்புகளைத் தந்திருக்கும் தோப்பில் முஹம்மது மீரான், பல மொழிபெயர்ப்பு நூல்களையும் வழங்கியிருக்கிறார். தமிழக, கேரள எல்லைப்புறத்தில் வாழும் இஸ்லாமியர்களின் வாழ்க்கையை நுணுக்கமாகக் கவனித்துப் பதிவுசெய்யும் சிறப்பான எழுத்துகள் இவருடையவை.- என். சொக்கன்