உள்ளூர் செய்திகள்

பெருமிதம் பொங்க சிரித்தபடி நிற்பான்!

ஸ்ரீராம் பிறக்கும்போது சாதாரணக் குழந்தைதான். போகப்போகவே அவனுடைய பிரச்னைகள் தெரிய ஆரம்பித்தன. மனவளர்ச்சி பாதிப்பு, கூடவே மூளை முடக்குவாதத்தால் பாதிப்பு. இரு கால்களையும் உறுதியாக தரையில் பதித்து நடக்க முடியவில்லை. இப்போது அதே ஸ்ரீராம் அகில இந்திய அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான நீச்சல் போட்டியில் தங்கம், வெள்ளிப் பதக்கங்கள் பெற்றுள்ளார். இந்தோனேஷியாவில் நடைபெற்ற நீச்சல் போட்டியிலும் பதக்கம் வென்றுள்ளார். எப்படி இது சாத்தியமாயிற்று? ஸ்ரீராமின் அம்மா வனிதாவிடம் கேட்டபோது: ஸ்ரீராம் பிறந்தபோது மற்ற குழந்தைகளைப் போலவே இருந்தான். ஆனால் ஆறு மாதங்கள் ஆன பின்னரும்கூட தலை நிற்கவில்லை. குடும்ப டாக்டரிடம் சென்றபோது, அவர் சென்னையில் உள்ள மதுரம் நாராயணன் சென்டர் என்ற சிறப்புக் குழந்தைகளுக்கான மையத்துக்கு அனுப்பிவைத்தார். நானும் என் கணவர் ராஜசேகரனும் அங்கு இருந்த மற்ற குழந்தைகளைப் பார்த்தபோது, ஸ்ரீராம் போல இல்லை. வேறுமாதிரியாக இருந்தனர். அதனால் அங்கிருந்து திரும்பி வந்துவிட்டோம். அடுத்து சித்த மருத்துவர் ஒருவரைப் பார்த்தோம். ஓராண்டு ஏதேதோ சிகிச்சைகள்! ஆயுர்வேதம், வர்ம சிகிச்சை, அக்குபஞ்சர் இப்படியே ஐந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. ஒரு முன்னேற்றமுமில்லை. அவனது மன வளர்ச்சியை விடவும் கால்களை உறுதியாக நிற்க வைக்கமுடியவில்லை என்பதே பெரிய கவலையாக இருந்தது. பழையபடி மதுரம் நாராயணன் சென்டருக்கே வந்தோம். அங்கு அவனுக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அவனது எட்டாவது வயதில் எனக்கும் என் கணவருக்கும் ஒரு தெளிவு பிறந்தது. நாங்கள் இனிமேலாவது உண்மை நிலையை உணர்ந்துகொண்டு அவனுக்கு சரியான பயிற்சிகளை அளிக்கவேண்டும் என்று முடிவு செய்தோம். அதன் பிறகு வித்யாசாகர், ஸ்பேஸ்டிக் சொசைட்டி போன்ற சிறப்புப் பள்ளிகளுக்கு மாறினோம். அங்கு ஆசிரியர் ஆறுமுகம், ஸ்ரீராமுக்கு தமிழ்மொழி பிடித்திருக்கிறது என்பதைக் கண்டறிந்து, எழுத்துகளைத் தனியாகச் சொல்லித் தராமல், தமிழ் வார்த்தைகளை நேரடியாகப் பேசவும், எழுதவும் கற்றுத் தந்தார். தினமும் பேச்சுப் பயிற்சி, உடலுக்கு ஃபிசியோதெரபி என்று தொடர்ந்தோம். கால் உறுதியாக நிற்க தைலங்கள் தடவுவோம். கடற்கரை மணலில் பள்ளம் தோண்டி நிற்க வைப்போம். கால் துவண்டு நிற்க முடியாமல் இருந்த ஸ்ரீராம், வளைந்த கால்களுடன் மெல்ல அடியெடுத்து நடக்க ஆரம்பித்தபோது, எங்களுக்கு மகிழ்ச்சி தாளவில்லை. அப்போதுதான், அவனை வாட்டர் தெரபி என்றழைக்கப்படும் நீச்சல் தொடர்பான பயிற்சிகளில் ஈடுபடுத்தினால் முன்னேற்றம் இன்னும் நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள். அதனால் நீச்சல்குளத்திற்கு தினமும் அழைத்துச் செல்ல ஆரம்பித்தோம். சீக்கிரமாகவே நன்றாக நீச்சலடிக்க ஆரம்பித்துவிட்டான். தினமும் ஓர் அட்டவணை போட்டு, காலை ஐந்தரை முதல் இரவு பதினோரு மணி வரை வெவ்வேறு பயிற்சிகள். அவனுக்கு இருபது வயதானபோது, தமிழ்நாடு அளவில் சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளுக்கு இயக்குனராக இருக்கும் டாக்டர் பால் தேவசகாயத்திடம் ஸ்ரீராமை அழைத்துச் சென்றோம். இவன் நீச்சலடிப்பதைப் பார்த்த பிறகு, மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக்கில் இவன் பங்குபெற முயற்சிகள் மேற்கொள்ள உதவி செய்தார். 2013ல் கர்நாடகத்திலுள்ள மாண்டியாவில் நடந்த நீச்சல் போட்டியில் நான்காவதாக வந்து பரிசு பெற்றான். அடுத்த ஆண்டு டில்லியில் நடந்த போட்டியில் மூன்றாவது இடம், தமிழ்நாட்டில் தேனி, மும்பை, இப்படிப் பல இடங்களில் நடக்கும் நீச்சல் போட்டிகளில் தொடர்ந்து பரிசுகள் பெற்றான்.இவை தவிர, மாற்றுத் திறனாளிகளுக்கான கம்பு ஊன்றி நடக்கும் மாரத்தான் போட்டியிலும் பரிசு பெற்றான். பரிசுகளில் தங்கப் பதக்கம், வெள்ளி பதக்கம், வெண்கலப் பதக்கம் என்ற வேறுபாடெல்லாம் அவனுக்குத் தெரியாது. பரிசுகள் பெறும்போது போட்டோ, வீடியோ எடுப்பார்கள். பெருமிதம் பொங்க சிரித்தபடி நிற்பான். இப்போது எங்கள் ஸ்ரீராமுக்கு வயது 24! அவன் வாழ்க்கையில் எதையுமே செய்யமுடியாமல் பயனின்றிப் போய்விடுவானோ என்று நாங்கள் கவலைப் பட்டோம். ஆனால் எங்கள் விடாத முயற்சியும், பல நல்ல உள்ளங்களின் வழிகாட்டுதலும் ஒன்று சேர்ந்து, தன்னுடைய வேலைகளைத் தானாகவே செய்து கொண்டு போட்டிகளில் பரிசுபெறும் அளவுக்கு வளர்ந்திருக்கிறான்.” எனும்போதே அவரின் மகிழ்ச்சியை உணரமுடிந்தது. இந்த உலகில் பிறந்த யாரையுமே பயனற்றவர்கள் என ஒதுக்கிவிடக்கூடாது. பயிற்சிகள் மூலம் எவரும் சாதிக்கலாம் என்பதற்கு ஸ்ரீராம் ஓர் உதாரணம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !