உள்ளூர் செய்திகள்

மதுரையை அலங்கரிக்கும் அரண்மனைகள்

மதுரை நகரத்தின் அரண்மனைகள் ஒவ்வொன்றுக்கும், ஒவ்வொரு வரலாறு இருக்கின்றது. கோவில்களுக்கு அடுத்தபடியாக, நகரத்தின் முக்கிய அம்சங்களாக மக்கள் விரும்பி சுற்றிப்பார்க்க ஏராளமான அரண்மனைகள் உள்ளன.திருமலை நாயக்கர் மகால்1636ல் திருமலை நாயக்கரால் இத்தாலியக் கட்டட வடிவமைப்பாளர் ஒருவரைக் கொண்டு கட்டப்பட்ட அரண்மனை திருமலை நாயக்கர் மகால். இந்த அரண்மனை சொர்க்கவிலாசம், ரங்கவிலாசம் என்று இரண்டு பகுதிகள் கொண்டதாக அமைக்கப்பட்டது. இந்தக் கட்டடத்தின் நான்கில் ஒரு பகுதியே இப்போது எஞ்சியிருக்கிறது. அரண்மனையில் சில பகுதிகள் திருமலை நாயக்கரின் பெயரன் சொக்கநாத நாயக்கன் காலத்திலேயே இடிக்கப்பட்டு அதன் பகுதிகள் திருச்சியில் அவன் கட்டிய அரண்மனைக்குக் கொண்டு செல்லப்பட்டன. தற்போது மாலை நேரங்களில் ஒலி, ஒளிக் காட்சி நடத்தப்படுகிறது.பத்துத்தூண்திருமலை நாயக்கர் மகாலின் வெளி விளிம்பு என்று கருதப்படும் பகுதியில், பத்து தூண்கள் நிறுவப்பட்டிருக்கின்றன. இந்தத் தெருவுக்கு, பத்துத்தூண் தெரு என்று பெயர். இங்கு நிற்கும் பத்து தூண்கள், பழைய நாளில் விளக்கேற்றுவதற்கும், கண்காணிப்பதற்கும் பயன்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.ராணி மங்கம்மாள் வசந்த மாளிகைமீனாட்சியால் பெண்ணாட்சிக்குப் பெயர் பெற்ற மதுரையை ஆண்ட பெண்ணரசிகள் ராணி மங்கம்மாளும் ராணி மீனாட்சியும். இவர்களில் மங்கம்மாள் மதுரையில் செய்த வேலைகள் நிறைய. மங்கம்மாள் தன்னுடைய வசந்த மாளிகையாகப் பயன்படுத்திய மாளிகைதான், தற்போது காந்தி நினைவகமாக (மியூசியம்) இருக்கிறது. காந்தி பயன்படுத்திய பொருள்களும் காந்தி கொல்லப்பட்டபோது அவர் மேலிருந்த ரத்தக் கறை படிந்த துணியும் இங்கே பாதுகாக்கப்படுகின்றன.ராணி மங்கம்மாள் அரண்மனைராணி மங்கம்மாள் மதுரையில் வசித்து வந்த அரண்மனை. இதில்தான் இறுதிக் காலத்தில் அவளது பெயரனால் அவள் சிறைவைக்கப்பட்டுச் செத்தாள். கீழச் சித்திரை வீதி, வடக்குச் சித்திரை வீதி சந்திப்பில், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மிக அருகில் அமைந்திருக்கும் இந்தக் கட்டடத்தில் தற்போது பொதுப்பணித் துறை அலுவலகம் ஒன்று இயங்கி வருகிறது. மிகச் சில நாட்களுக்கு முன்பாக இந்தக் கட்டடத்தின் ஒரு பகுதியையும், கூரையையும் இடித்து நாசமாக்கி விட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு மாநகராட்சியின் முன்னாள் கவுன்சிலரும் அவருடைய ஆட்களும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.மங்கம்மாள் சத்திரம்மதுரை ரயில் நிலையத்திற்கு எதிரில் அமைந்திருக்கும் இது மங்கம்மாவால் கட்டப்பட்ட சத்திரம். தற்போது மாநகராட்சியால் தங்கும் விடுதியாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.- ஆறுமுகத்தமிழன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !