| ADDED : மே 12, 2024 04:30 AM
'கருப்பு நிற போட்டோ பிரேமில் மஞ்சள் நிற உருவத்தில் என் அம்மாவை கண்டேன். திடுக்கிட்டு எழுந்து பார்த்தால் காலை 6:00 மணி. என்னவோ எனக்கு உறுத்தலாக இருந்தது. அன்று காலை சில மணி நேரத்திலேயே எங்களை விட்டு அம்மா மறைந்துவிட்டார். நான் மூத்த மகளாக இருப்பதாலும், என் மீது அவர் அதிக பாசம் வைத்திருந்ததாலும்தான் என்னவோ என்னிடம் மட்டும் அவர் சொல்லிவிட்டு இந்த உலகை விட்டு சென்றுள்ளார்'' என கண்கலங்குகிறார் கனிமொழி, மதுரை அ.தி.மு.க., வேட்பாளர் டாக்டர் சரவணனின் மனைவி.மருத்துவமனை நிர்வாகி, குடும்ப தலைவி என பன்முகங்களை கொண்ட கனிமொழி, அவரது சகோதரிகள் அறிவுமலர், சுபாஷினியுடன் தாய் பிச்சைமணியை வீட்டு ராணியாக இன்றும் கவனித்து வருகிறார்கள். இவரது தந்தை சேதுராமன் விருப்பப்படி அமைக்கப்பட்ட பிச்சைமணி சிலையை, அவர் வாழ்ந்த மாதிரி பராமரித்து வருகிறார்கள்.''எங்கம்மா மதுரை அதலையைச் சேர்ந்தவர். கிராமத்திலேயே பிறந்து வளர்ந்தவர். அவரது பாட்டி 2 ஆண்டுகளாக கோமாவில் மருத்துவமனையில் இருந்தபோது உடன் இருந்து கவனித்ததால் டாக்டர் தொழில் மீது அவருக்கு மரியாதை ஏற்பட்டது. வீட்டிற்கு வந்ததும் அவரது தந்தையின் வெள்ளை சட்டையை மாட்டிக்கொண்டு டாக்டராக நடிப்பாராம். அவரே எங்களிடம் சொல்லியது'' என்றுகூறும் கனிமொழி, தனது தாயுடனான அன்பு, அரவணைப்பு குறித்து மனம் திறக்கிறார்.''எங்கப்பா சுகாதார ஆய்வாளராக இருந்தவர். பின்னர் ரியல் எஸ்டேட் தொழில் செய்தார். அடிக்கடி வெளியூர் செல்வதால் எங்களை பார்த்துக்கொண்டது அம்மாதான். எங்களைவிட்டு அம்மா எங்கேயும் தனியாக சென்றதில்லை (கண் கலங்குகிறார்). இன்றும் ஏதாவது ஒரு ரூபத்தில் 'நான் இருக்கிறேன்' என சொல்லிவிடுவார். எங்களது பிள்ளைகளுடன் அவர் பேசியது, நிகழ்ச்சியில் கலந்துகொண்டதை வீடியோவாக பதிவு செய்து வைத்துள்ளோம். அதை பார்த்து எங்களுக்கு நாங்களே ஆறுதல் கூறிக்கொள்வோம்.அம்மா இறந்த 30வது நாளுக்குள் அவருக்கு சிலை செய்ய அப்பா விருப்பப்பட்டு எங்களிடம் கேட்டார். பைபரில் உருவான சிலையை வீட்டின் நடுவே வைத்து தினமும் அவருக்கு பிடித்த மல்லிகையை தலைக்கு வைத்து சுமங்கலியாகவே பார்த்து வருகிறோம். நல்லதோ, கெட்டதோ எது நடந்தாலும் உடனே சென்று அவரது(சிலை) கையை பிடித்து சில நிமிடங்கள் மவுனமாக பேசுவேன். எனக்கு அவர் தைரியம் சொல்வதாக தோன்றும். அவர் மறைந்தாலும் என்றும் அவர் எங்க வீட்டு மகாராணிதான்'' என உருக்கமாக பேசுகிறார் கனிமொழி.