உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / விருந்தினர் பகுதி / உழவரின் ஆசையை நனவாக்கிய ‛உழமகள்

உழவரின் ஆசையை நனவாக்கிய ‛உழமகள்

இருபத்திரண்டு வயதில் இளம் தொழில்முனைவோராக வலம் வந்து பிரமிப்பூட்டுகிறார் 'உழமகள்' திவ்யபாரதி. திருப்பூர் மாவட்டம் பொன்னே கவுண்டன் புதுார் கிராமத்தைச் சேர்ந்தவர். அப்பா வேலுசாமி, அம்மா கவிதா இருவரும் விவசாயம் செய்கின்றனர். அக்கா வினோதா ஐ.டி.,யில் பணிபுரிகிறார். தன் அயராத உழைப்பால் உயர்ந்துள்ள உழமகளிடம் ஒரு உரையாடல்...

• ஆடைத்துறையில் நுழைந்தது குறித்து...

சிறுவயது முதலே ஆடைகள் மீது மோகம் இருந்தது. எனக்கான ஆடைகளை நானே தேர்வு செய்வேன். பத்தாம் வகுப்பு படிக்கும் போது மெஷின் வாங்கி தையல் கத்துக்கிட்டேன். எனக்கான ஆடைகள், பள்ளிச் சீருடைகளை நானே தைத்துக் கொள்வேன்.கல்லுாரியில் பேஷன் டெக்னாலஜி படித்தேன். அப்போது நிறைய 'இன்டர்ன்ஷிப்' சென்றிருக்கிறேன். கொரோனா லாக்டவுனில் நிறைய டிசைன்களை இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் மூலம் வெளிப்படுத்தி னேன். அதை பார்த்து என் தோழி தனக்கும் அது போன்ற டிசைன்களில் ஆடைகள் தயார் செய்து தரும்படி கேட்டுக் கொண்டார். அதுதான் முதன்முதலில் மற்றவர்களுக்காக நான் தைக்க ஆரம்பித்தது. பின் 'திவ்யா டிசைனர் க்ளாத்திங்' என்று இன்ஸ்டாவில் சின்னதாக ஒரு பிராண்டு ஆரம்பித்து லாக் டவுனில் சேலைகளை கவுனாக மாற்றி விற்பனை செய்து வந்தேன்.

• சொந்த தொழில் செய்யும் முடிவு குறித்து...

ஆடை வடிவமைப்புக்கான அறிவு, நுணுக்கம், அனுபவம் என்னிடம் நிறையவே இருந்தன. கேம்பஸ் இன்டர்வியூ மூலம் ஒரு கம்பெனியில் வேலையும் பெற்றேன். எனினும் சுதந்திரமாக எனது திறமைகளை வெளிப்படுத்த சொந்தமாக தொழில் தொடங்க முடிவு செய்து கிடைத்த வேலையை நிராகரித்துவிட்டேன். எனக்கான செலவுகளை நானே பார்த்துக் கொள்ளும் அளவுக்கு சம்பாதித்தால் போதும் என ஒரு தொழில் செய்ய முடிவு செய்து 'உழமகள்' என்ற பிராண்டில் சிறியதாக தொழில் ஆரம்பித்தேன். உழமகளின் முதுகெலும்பே என் அக்கா தான். அன்று அவர் தான் ரூ.5000 கொடுத்து தொழில் தொடங்க உதவினார்.

* 'உழமகள்' பெயர் காரணம்...

நான் விவசாய குடும்பத்தில் பிறந்தவள். அக்கம்பக்கத்தினர், உறவினர் எல்லோரும் அம்மாவிடம், 'உங்களுக்கு இரண்டு பொண்ணுகளா... பையனா இருந்தா பிஸினஸ் பண்ணிருப்பாங்க... நீங்க இருவரும் படிக்கல... உங்க பொண்ணுங்க மட்டும் படிக்கவா போகுதுங்க... எதுக்கு இவ்வளவு செலவு செய்து படிக்க வைக்கிறீங்க...' என்றெல்லாம் பேசி அவரை கஷ்டப்படுத்தி இருக்கின்றனர். அதனால் தான் நான் தொழில் தொடங்க அம்மா முழு ஆதரவு அளித்தார். அப்பாவும் அப்படியே ஆதரவு தந்தார். என்னுடைய விவசாய பின்புலம் தெரிய வேண்டும் என்பதற்காகவே 'உழமகள்' என பெயர் வைத்தேன்.

• ஆரம்ப காலங்களில் நீங்கள் சந்தித்த சவால்கள்...

முதலில் ஒரு வாரம் எந்த ஆர்டரும் வரவில்லை. பிறகு அக்காவின் தோழி ஒருவர் முதன்முதலில் ஆர்டர் கொடுத்தார். பின் ஒவ்வொரு ஆர்டராக வர ஆரம்பித்தது. கிராமத்தில் தொழில் தொடங்கியதால் டெய்லர்கள் கிடைத்தாலும் நான் விரும்பிய டிசைன்களை புரிந்துகொண்டு அதன்படி தைத்துக் கொடுக்க அவர்களால் இயலவில்லை. அவர்களுக்கு முதலில் அதற்கான பயிற்சியளித்தது, சரியான நேரத்திற்குள் ஆர்டர்களை டெலிவரி செய்வது போன்றவை சவாலாக இருந்தன.குர்த்தீஸ், வெஸ்டர்ன் கார் மன்ட்ஸ், சேலைகள், நைட் டிரஸ் என பலவிதமான ஆடைகளை தயார் செய்கிறோம். கடந்த 6 மாதமாக ஒரு பார்ட்னருடன் சேர்ந்து வேலை செய்கிறேன். அதனால் உழமகள் மும்மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. லட்சங்களில் தொழில் செய்ய முடிகிறது.அப்பாவுக்கு புதிய பொலிரோ ஜீப் வாங்க வேண்டும் என்று நீண்டநாள் ஆசை. எத்தனையோ வசதிகளுடன் புதிய கார்கள் இருந்தாலும் அவருக்கு பொலிரோ மீது தீராத காதல் உண்டு. எனவே நானும் அக்காவும் சேர்ந்து வாங்கி கொடுத்தோம். அப்பா ரொம்ப சந்தோஷப்பட்டாங்க.பொண்ணுங்களுக்கு எதுக்கு இவ்வளவு செலவு பண்றீங்கன்னு சொன்னவங்க கிட்ட எல்லாம் என்னுடைய பொண்ணுங்க வாங்கி கொடுத்தது... அவங்க தான் எனக்கு எல்லாமேன்னு ரொம்பபெருமையா சொன்னாங்க.

• நீங்கள் புதிதாக ஆரம்பித்த உழமகள் பார்ம்ஸ் குறித்து...

இன்று ஒரு விவசாயி விவசாயத்தை மட்டும் நம்பி வாழ முடியாத சூழல் உருவாகியுள்ளது. ஐ.டி., வேலை பார்ப்பவர்கள் விவசாயம் செய்ய ஆர்வம் காட்டினாலும் ஒரு விவசாயியோட வாரிசுகள் விவசாயம் செய்ய தயாராக இல்லை. காரணம் விவசாயம் செய்வதில் அவ்வளவு கஷ்டம் உள்ளது. நுாறு நாள் வேலை திட்டத்தால் விவசாய கூலி வேலை செய்ய ஆள் கிடைப்பதில்லை.மஞ்சள், கரும்பு, வாழை உள்ளிட்டவைகளை விளைவிக்க நினைத்தாலும் ஆள் பற்றாக்குறையால் பயிர் செய்ய முடியவில்லை.அதற்கான விலையும் கிடைப்பதில்லை.இந்நிலையில் 'பொண்ண பெத்தவங்க விவசாயம் எங்க செய்ய போறாங்க... நிலத்தை வித்துட்டு தான் போவாங்க' என பேசியவர்கள் முன் எங்களாலும் விவசாயம் செய்ய முடியும் என நிரூபிக்கவே 'உழமகள் பார்ம்ஸ்' ஆரம்பித்துள்ளோம். அதில் எங்களின் முதல் தயாரிப்பாக சுத்தமான தேங்காய் எண்ணெய் அறிமுகப் படுத்தியுள்ளோம். வருங்காலத்தில் நல்லெண்ணை, கடலை எண்ணெய், 'ஆர்கானிக்' மஞ்சள் பொடி, சோப்பு, உள்ளிட்டவைகளை தயார் செய்ய உள்ளோம்.

• எதிர்கால திட்டம் குறித்து...

தற்போது வரை வலைதளம் மூலம் மட்டுமே விற்பனை செய்து வருகிறோம். அமெரிக்கா, தான் சானியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வருகிறோம். அடுத்து நகரங்களில் 'உழமகள்' கடை ஆரம்பிக்க வேண்டும்.

• உங்களை போன்று தொழில் செய்ய விரும்பும் பெண்களுக்கு உங்கள் அறிவுரை....

மற்றவர்கள் சொல்வதற்காகவோ, அவர்கள் செய்வதற்காகவோ நாம் ஒன்றைச் செய்தால் மாட்டிக்குவோம். ஒரு விஷயத்தில் ஆர்வம் இருக்குமேயானால் அதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். நாம் விரும்பும் ஒன்றை விரும்பிய படி கொண்டுவர அதைப் பற்றிய அறிவும் புரிதலும் முக்கியம். ஆரம்பத்திலேயே வளர்ச்சியை எதிர்நோக்காமல் அதற்கான காலம் வரும் வரை சோர்ந்து போகாமல் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை