எப்போதுமே ஏறுக்கு மாறாக...
ரேடியோவில் பாட்டுக்கேட்டுக் கொண்டிருந்தார் ஆசிரியர் ஒருவர். அங்கு வந்த மற்றொருவர் இந்த பாடலை பாடிய பாடகர் மதுவிற்கு அடிமையாமே என்றார். அதற்கு ஆசிரியர் எப்படியிருந்தால் என்ன... நமக்கு தேவை இனிய குரலின் பாட்டுத்தானே என்றார். சிறிது நேரத்தில் அங்கு வேறொருவர் வந்தார். அதே பாடலைக்கேட்ட அவர், குரல் அருமையாக உள்ளது. பாடலை ரசித்தீர்களா எனக்கேட்டார். அதற்கு ஆசிரியர் குடிகாரர் பாடிய பாடல் என்றார். இதையெல்லாம் கவனித்த அவரின் சீடன் தங்களிடம் வந்த இருவரிடமும் மாற்றி மாற்றி பேசுகிறீர்களே ஐயா எனக்கேட்டான். தராசின் முள்போல மனிதர்களின் மனமும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. நிமிடத்திற்கு நிமிடம் மாறுபட்டுக் கொண்டே இருக்கும். அதனால் தான் அவர்களிடம் அப்படி சொன்னேன் என்றார். ஐயா தங்களின் திறமையே திறமை என புகழ்ந்தான் சீடன். அதற்கு ஆசிரியரோ, கொடுத்த வேலையை போய் பார் என்றார். அவனது முகம் சுருங்கிவிட்டது. ஒருவருக்கு ஒருவர் ஏட்டிக்கு போட்டியாக நடப்பது மனிதர்களின் இயல்பு என்கிறது நீதிமொழி.