சிறப்பான எதிர்காலம் அமைய...
அரசர் ஒருவர் பறவைகளின் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். அபூர்வமான பறவை ஒன்றின் வரைபடம் வேண்டும் என ஓவியர் ஒருவரிடம் கேட்டார். அவரும் வரைந்து தருவதாக கூறினார். நாட்கள், மாதங்கள், வருடங்கள் என உருண்டோடியது. ஐந்து வருடம் ஆகியும் வரைபடம் கைக்கு வரவில்லை. கோபமுற்ற அரசர், கலைக்கூடத்திற்கு சென்றார். அங்கு ஓவியரைப் பார்த்தவர், ''என்னை ஏமாற்ற பார்க்கிறாயா... ஒரு படம் வரைய இவ்வளவு காலமா..'' என சீறினார். உடனே ஒரு வெற்று திரைச்சீலையை ஸ்டாண்டில் மாட்டினார் ஓவியர். பதினைந்து நிமிடத்தில் ஒரு அபூர்வமான பறவையின் படம் தயாராகிவிட்டது. ஓவியத்தை கண்டு மெய்சிலிர்த்தவர், ஓவியரை பாராட்டினார். இருப்பினும் அவர் மீது இருந்த கோபம் குறையவில்லை. ''அழகான படத்தை பதினைந்தே நிமிடத்தில் வரைந்து விட்டீர்கள். இருந்தாலும் ஏன் ஐந்து வருடமாக என்னை காக்க வைத்தீர்கள்'' என கேட்டார். உடனே அறைக்குள் சென்ற ஓவியர் ஒரு பெட்டியை கொண்டு வந்தார். அதிலிருந்து பல வரைபடங்களை எடுத்தார். இறகுகள், இறக்கைகள், கால்கள், நகங்கள், கண்கள், அலகு என தனித்னியாக வரைபடங்கள் இருந்தன. அரசருக்கோ ஒன்றும் புரியவில்லை. ''அரசே... ஒவ்வொரு நாளும் ஒரு படங்களை வரைந்து கொண்டிருந்தேன். இன்றுதான் முழுவடிவம் பெற்றது'' என்றார். நம் வாழ்க்கையும் இப்படித்தான். நமக்கு கிடைக்கும் ஒவ்வொரு தருணங்களும் முக்கியமானவை. அவற்றை சரியாக பயன்படுத்தினால் சிறப்பான எதிர்காலம் அமையும். பெரிய செயல்களை உருவாக்க, வாழ்வின் ஒவ்வொரு சிறிய செயல்களும் உதவுகின்றன.