கேளுங்க சொல்கிறோம்!
** புத்திக்கு நன்மை, தீமை தெரிந்தும் மனம் கவர்ச்சியால் தீமையை மட்டுமே தேர்ந்தெடுக்கிறதே ஏன்?எஸ்.பி.பாலபாரதி, சென்னை.அருமையான கேள்வி. புத்தி வேறு மனம் வேறு என்பதைப் புரிந்து கொண்டதே பெரிய விஷயம். மனிதனின் சிந்தனை செயல்பாடுகளை மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என நான்காகப் பிரிப்பர். ஆசைப்பட மட்டுமே மனதிற்குத் தெரியும். அடுத்ததாக சித்தம் வேலையைத் துவங்கும். ஆசைப்பட்டது சரியா தவறா என அதுவே சீர் தூக்கி ஆராயும். மூன்றாவதாக புத்தி தீர்மானிக்கும். இது நல்லது, செய்யலாம் என்றோ இது தீயது, செய்யக்கூடாது என்று நிச்சயித்து மனதுக்கு தெரியப்படுத்தும். மனம், அகங்காரம் என்பதன் மூலம் செயல்படுத்தும். இது ஒரு அடிப்படை விஷயம். மனோபலம், புத்திபலம் என்ற நிலையில் தான் நல்லதும், தீதும் செயல்படுத்தப்படுகின்றன. அதாவது ஆசையால் மனம் பேதலிக்கும் போது, புத்தி அதை அடக்க வேண்டும். ஆனால் அந்த புத்தியே பலவீனப்படும் போது தான், மனம் தீமையைத் தேர்ந்தெடுக்கிறது. இதிலிருந்து மீள இறையருளைத் தவிர வேறு வழியில்லை. 'என் அறிவு பலவீனப்படும் போது இறைவன் அறிவைத் தூண்டி என்னைத் தவறு செய்யாமல் காப்பாற்ற வேண்டும்' என காயத்ரி மந்திரம் உணர்த்துகிறது. எனவே சுவாமியிடம் 'என் புத்தியில் இருந்து பலப்படுத்து' என்றும், 'மனதை புத்திக்கு கட்டுப்பட்டு தவறு செய்யாமல் பாதுகாப்பு கொடு' என்றும் வேண்டுவது அவசியம். பக்தியாலும், நல்ல நூல்களைப் படிப்பதாலும் அறிவு செம்மைப்பட்டு விட்டால் மனம் நல்வழியில் நம்மை அழைத்துச் செல்லும்.* கோவிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு சிறிது நேரம் உட்காருவது கட்டாயமா?பா.செல்வகுமார், அபிராமம்.கோவிலுக்குச் சென்று எல்லா சுவாமிகளையும் தரிசிக்கிறோம். ஒவ்வொரு சுவாமியிடத்திலும் விதவிதமான பிரச்னைகளைக் கூறி எவ்வளவோ வரங்களைக் கேட்கிறோம். இவை முடிந்து மனம் ஒரு நிலைக்கு வந்தால் தான், கோவிலுக்குச் சென்ற நிம்மதி கிடைக்கும். அதற்காக சிறிது நேரம் அங்கேயே உட்கார்ந்து, 'கண்களை மூடி நம் கஷ்டங்களையெல்லாம் எல்லா சுவாமியிடத்திலும் சொல்லி விட்டோம். இனி அவர் பார்த்துக் கொள்வார். நல்லதே நடக்கும்' என்று சிந்தித்து விட்டு வீடு திரும்பினால் ஒரு புத்துணர்ச்சியுடன் கிளம்பலாம்.கல்வி, செல்வம், வீரம் மூன்றும் குறைவின்றி பெற யாரை வழிபட வேண்டும்?ஜே.யே.கே.நியாஸ், மஞ்சக்குப்பம்.கல்விக்கு சரஸ்வதி, செல்வத்துக்கு லட்சுமி, வீரத்துக்கு துர்க்கை என மூவரையும் வழிபடுங்கள். நிம்மதியாக வாழுங்கள். * குழந்தைகளுக்கு எந்த வயதிலிருந்து ருத்ராட்சம் அணிவிக்கலாம்?எஸ்.புவனா, சென்னை.பொதுவாக ஜபம் செய்வது, ருத்ராட்சம் அணிவது, விரதமிருப்பது போன்ற எல்லாமே இவற்றைப்பற்றி புரிந்து கொண்டு செய்தால் தான் நல்லது. எனவே முதலில் இவற்றைப் பற்றிய விஷயங்களை குழந்தைகளுக்குப் புரிய வையுங்கள். அவர்களுக்கு இயல்பாக அதில் ஆர்வம் வர வேண்டும். எனினும் ஆறு வயதிலிருந்து ருத்ராட்சம் அணிவிக்கலாம்.