தெய்வீக கதைகள் -16
பொறுப்புள்ள சீடன்முற்காலத்தில் கல்வி கற்பவர்கள் குருநாதரின் இருப்பிடத்திற்கு சென்று தங்கி படிப்பார்கள். கல்வி மட்டுமின்றி வாள், வில் போன்ற வித்தைகளையும் குருநாதரிடம் கற்றுக் கொள்வர். இந்த கல்விமுறையை குருகுலக் கல்வி என்று சொல்வர். குருகுலத்தில் தங்கி குருநாதருக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்து குருவின் மனைவிக்கும் சீடர்கள் உதவி செய்ய வேண்டும். ஆஸ்ரமம் அமைத்து சீடர்களை நல்ல முறையில் குருநாதர்கள் பாதுகாத்தனர். அப்படி ஒரு குருகுலத்தில் ஆயோத தவுமியர் என்ற முனிவர் ஒருவர் இருந்தார். ஆருணி, உபமன்யு, வேதன் முதலான நல்ல மாணவர்கள் அவருக்கு சீடராக சேவை செய்து வந்தனர்.ஒருநாள் ஆருணியை அழைத்து, ''நம் வயலில் தண்ணீர் நிரம்பியதால் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு விட்டது. அதை அடைத்து விட்டு வா. இல்லாவிட்டால் பயிர்கள் சேதமாகி விடும்” என்றார் குருநாதர். ஆருணியும் உடனே புறப்பட்டான். வாய்க்காலில் நீர் நிரம்பியதோடு, எங்கும் தண்ணீர் சூழ்ந்து நிலைமை மோசமாகி கொண்டிருப்பதை அறிந்தான். என்ன செய்வது என தெரியாமல் தவித்தான். ஆஸ்ரமத்திற்கு திரும்பிச் சென்றால் குருநாதரின் கோபத்திற்கு ஆளாவோம் என பயந்தான்.'ஆணையை நிறைவேற்ற முடியாதவன்' என்ற பழிச்சொல் வருமே என வருத்தம் ஏற்பட்டது. தன் நிலையைக் கண்டு பயந்த ஆருணி, உடைப்பை அடைப்பதற்காக என்ன செய்யலாம் என தீவிரமாக யோசித்தான். எந்தப் பொருளை வைத்து தடுத்தாலும் நீரின் வேகத்திற்கு தாக்கு பிடிக்காது எனத் தோன்றியது. சில்லிட்ட தண்ணீர், சிலிர்ப்பான காற்றையும் பொருட்படுத்தாமல் நீரின் ஓட்டத்தைத் தடுக்க, தானே தடுப்பாக படுப்பது நல்லது என எண்ணினான். வேகமாக வந்து கொண்டிருக்கும் நீரோட்டத்தின் நடுவில் அணையாகப் படுத்ததும் நீரோட்டம் நின்றது. எவ்வளவு நேரம் அப்படி இருந்தான் என அவனுக்கே தெரியாது. சூரியன் மறைந்ததால் வானம் இருட்டத் தொடங்கியது. ஆருணி இன்னும் வராமல் இருக்கிறானே என்பதால் ஆயோத தவுமியர் மற்ற மாணவர்களுடன் சேர்ந்து ஆருணியைத் தேடி புறப்பட்டார். இருளில் வெளிச்சத்திற்காக தீப்பந்தம் ஏந்தியபடி சீடர்கள் குருநாதருடன் நடந்தனர். எங்கு தேடியும் ஆருணியைக் காணவில்லையே என குருநாதர் தவித்தார். “பாஞ்சால தேசத்தை சேர்ந்த ஆருணியே! எங்கிருக்கிறாய் அப்பா?” என உரக்க சப்தமிட்டார். குருவின் குரலைக் கேட்டதும் தண்ணீரின் நடுவே படுத்திருந்த ஆருணி தடுமாறியபடி எழுந்தான். “நான் இங்கு தான் இருக்கிறேன்'' என குரல் கொடுத்தான். தண்ணீருக்குள் இருந்து எழுந்ததும் குருநாதரை வணங்கினான். “வாய்க்காலை அடைப்பதற்கு எனக்கு வழியேதும் தெரியாததால், நானே அதன் குறுக்கே படுத்துக் கொண்டேன்'' என பணிவுடன் சொன்னான். வயலின் வரப்பில் இருந்து எழுந்து வந்ததால் அன்று முதல் ஆருணிக்கு 'உத்தாலகன்' என சிறப்புப் பெயர் ஏற்பட்டது. “என் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்த உனக்கு எப்போதும் நல்லதே நடக்கும். வேதம், தர்ம சாஸ்திரங்கள் உன் நாவில் எப்போதும் பிரகாசிக்கட்டும்” என தவுமியர் சீடனை வாழ்த்தினார்.ஆருணியை அவன் விரும்பிய நாட்டிற்கு எல்லாம் செல்வதற்கு அனுமதி அளித்தார். பின்னாளில் உத்தாலக ஆருணியும் சிறந்த தத்துவ ஞானியாக திகழ்ந்தார். சுவேத கேது, யாக்ஞவல்கியர் இவருடைய சீடர்களாக இருந்தனர். மகரிஷி ஆருணி பிரம்ம வித்தையை கற்பிக்கும் குருவாக திகழ்ந்ததாக பிரகதாரண்யக உபநிடதம், சாந்தோக்கிய உபநிடதம் குறிப்பிடுகிறது. குருநாதரின் சொல்லை தட்டாத சீடர்களின் வாழ்க்கை சிறக்கும். -பக்தி தொடரும்உமா பாலசுப்ரமணியன்umakbs@gmail.com