தெய்வச் சேக்கிழார்
மே 31 - சேக்கிழார் குருபூஜை'தெய்வ' என்னும் அடைமொழியால் போற்றப்படுபவர் இருவர் மட்டுமே. ஒருவர் தெய்வப்புலவர் திருவள்ளுவர். மற்றொருவர் தெய்வச் சேக்கிழார். இதில் சேக்கிழார் எப்படிப்பட்டவர் தெரியுமா... அரசன் முதல் ஆண்டி வரை, உயர்ந்தவர் முதல் தாழ்ந்தவர் வரை யாராக இருந்தாலும் மனதில் அன்பு இருந்தால் அவர் சிவபெருமானின் அடியவர் என்பதை உணர்த்தியவர். தொண்டை நாட்டிலுள்ள குன்றத்துாரில் வேளாளர் மரபில் தோன்றியவர் சேக்கிழார். பெற்றோர் இட்ட பெயர் அருண்மொழித்தேவர். இரண்டாம் குலோத்துங்கன் என்னும் அநபாயச் சோழனிடம் சேக்கிழாரின் தந்தை அமைச்சராகப் பணியாற்றினார். அரசவைக்கு செல்லும் போதெல்லாம் மகனான சேக்கிழாரையும் அழைத்து செல்வார். இதனால் அரசியல் நடவடிக்கைகள் அத்துபடியானது. அத்துடன் ஒழுக்கம், படிப்பு, நாவன்மை, புத்திக்கூர்மை இருந்ததால் தந்தையைத் தொடர்ந்து சேக்கிழாரும் முதலமைச்சர் ஆனார். நாட்டை நல்வழியில் நடத்தினார். 'உத்தமச் சோழ பல்லவன்' என சிறப்பு பட்டம் பெற்றார். இந்த சமயத்தில் சமண காப்பியமான சீவகசிந்தாமணி நுாலில் ஈடுபாடு கொண்டார் மன்னர். இதனால் சமண சமயம் நாட்டில் புகுந்து விடுமோ என வருந்தினார் சேக்கிழார். சைவ நெறியின் பெருமையை மன்னருக்கு எடுத்துச் சொன்னார். மனம் மாறிய மன்னர், ' சைவநெறி பற்றி அறிய விரும்புகிறேன். சிவனடியார்களின் வரலாற்றை விரிவாக எழுதுங்கள்' என பொன், பொருளை வாரி வழங்கினார் மன்னர். ''அமைச்சர் பதவியில் இருந்து விலகினால் தான் அடியார் வரலாறை சிறப்பாக எழுத முடியும்'' என சிதம்பரத்திற்கு புறப்பட்டார். அங்கு நடராஜரை கண்டு கண்ணீர் சிந்தினார். நடராஜரின் வளைந்த புருவம், கொவ்வைக்கனி இதழில் சிந்தும் புன்னகை, கங்கை தவழும் சடைமுடி, பவள மேனியில் பூசிய வெண்ணீறு, இன்பம் நல்கும் துாக்கிய திருவடியைக் கண்டு மனம் குழைந்தார். சிவபெருமானோடு ஒன்றினார். தொண்டர் தம் வரலாற்றை எழுத அடியெடுத்து தர வேண்டினார். வேண்டுகோளை ஏற்ற சிவன், 'உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்' என அடியெடுத்துக் கொடுத்தார். அதையே முதல் வரியாக கொண்டு பெரியபுராணத்தை எழுத தொடங்கினார். இப்படி கிடைத்த பொக்கிஷமே 'திருத்தொண்டர் புராணம்' என்னும் பெரியபுராணம். இந்த தெய்வப்பணி ஆற்றிய சேக்கிழார் பெருமானின் குருபூஜை வைகாசி பூசத்தன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளில் அவரை வழிபட்டு குருவருளையும், திருவருளையும் பெறுவோம்.