அரைகுறையால் ஆபத்து
தர்ம சிந்தனை கொண்ட மன்னர் ஒருவர் இருந்தார். அவரே தன் கையால் ஏழைகளுக்கு உணவு வழங்குவார். ஒருநாள் உணவு தயாரிக்கப்பட்டு அண்டாவில் வைக்கப்பட்டது. அப்போது ஆகாயத்தில் ஒரு கருடன் அலகில் பாம்பை கொத்தி துாக்கிச் சென்றது. அதனிடமிருந்து தப்பிக்க முயற்சித்த பாம்பின் வாயில் விஷம் வெளிப்பட, அது உணவில் விழுந்தது. இது யாருக்கும் தெரியாது. மன்னர் அந்த விஷ உணவை அந்தணர் ஒருவருக்குக் கொடுத்தார். அதை சாப்பிட்ட அந்தணர் அங்கேயே இறந்தார். அந்தணர் இறந்ததை அறிந்த மன்னர் 'நான் தான் காரணம்' என வருந்தினார். ஆனால் 'அந்தணர் இறந்ததற்கான பாவத்தை யார் தலையில் சுமத்துவது?' என்ற சங்கடம் தர்மதேவதைக்கு ஏற்பட்டது. 'நல்ல எண்ணத்தில்தான் மன்னர் அன்னதானம் செய்தார். அதனால் பாவத்தை அவர் மீது சுமத்துவது நியாயமில்லை. இந்த பாவத்தை வேறு யார் தலையிலாவது சுமத்த வேண்டும். அப்படிப்பட்ட ஒருவர் கிடைக்கும் வரையில் காத்திருப்போம்' என முடிவு செய்தது.சில நாட்களுக்குப் பின் வெளியூரில் இருந்து அந்தணர்கள் சிலர் மன்னரிடம் தானம் பெற வந்தனர். அவர்களுக்கு அரண்மனைக்கு செல்ல வழி தெரியவில்லை.வழியில் சுள்ளி பொறுக்கிய முதியவள் ஒருத்தியைக் கண்டனர். ''பாட்டி! நாங்கள் வெளியூரில் இருந்து வருகிறோம். மன்னரிடம் தானம் பெற விரும்புகிறோம். அரண்மனைக்கு எப்படி செல்வது?” எனக் கேட்டனர். வழிகாட்டிய அந்த முதியவள், அத்துடன் நிறுத்தாமல் மன்னரிடம் உணவு பெற்ற அந்தணர் இறந்து போனதை வைத்துக் கொண்டு, ''மன்னர் மிக நல்லவர்தான். ஆனால் தன்னிடம் தானம் பெற வருபவரைக் கொல்லவும் செய்வார்'' என்றாள். அதைக் கேட்ட அந்தணர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மன்னரிடம் செல்வதைத் தவிர்த்து விட்டு ஊருக்குத் திரும்பினர். அப்போது தர்மதேவதை, 'தேவை இல்லாமல் பேசி மன்னர் மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்திய முதியவளின் மீது மன்னரின் கொலைப் பாவத்தைச் சுமத்துவது' என முடிவு செய்தது. பாவச்சுமை அதிகரித்ததால் அந்த முதியவள் துன்பத்திற்கு ஆளானாள். அரைகுறையாக கேள்விப்பட்ட விஷயத்தைக்கொண்டு ஒருவர் மீது பழி சுமத்தினால் அந்த பாவம் நம்மை வந்து சேரும். ஒருவர் தவறே செய்திருந்தாலும் அதைப் பற்றி புறம் பேசினால் ஐம்பது சதவீத பாவம் ஏற்படும். எனவே மற்றவரை விமர்சிப்பதால் நம்மை அறியாமலேயே பாவம் சேரும். இதனால் பாவம் செய்யாதவருக்கும் துன்பம் வரும் என்ற உண்மையை உணர வேண்டும்.