மலை மந்திர் முருகனும் மஹாபெரியவரும்
டில்லி ஆர்.கே.புரத்திலுள்ள குன்றின் மீது 'மலை மந்திர்' கோயில் உள்ளது. காஞ்சி மஹாபெரியவருக்கும் இக்கோயிலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. டில்லி பக்தர்கள் 'சுவாமிநாத சுவாமி சமாஜம்' என்னும் அமைப்பை உருவாக்கி கோயில் கட்டத் தொடங்கினர். சிலை செய்வதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் பட்டுமலைக் குப்பத்தில் கல் எடுக்க முடிவு செய்தனர். ஆனால் காஞ்சி மஹாபெரியவர், “60 ஆண்டுக்கு முன்பு செந்திலாண்டவர் சிலை வடிக்க, தாமிர பரணி படுகையான திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள குறுக்குத்துறையில் கல் எடுக்கப்பட்டது. அதன் எஞ்சிய பாகம் இப்போதும் புதைந்து கிடக்கும். அதை பயன்படுத்துங்கள்” என்றார். அறுபது ஆண்டுகளில் ஆற்றுப்படுகை மண்மேடாகி விட்டதால் குறிப்பிட்ட கல்லை எடுப்பது சாத்தியமில்லை என அமைப்பினர் தயங்கினர். 'நெல்லையப்பர் கோயிலில் பணிபுரிந்த சுந்தர தீட்சிதரை அணுகுங்கள். செந்திலாண்டவன் சிலைக்காக கல் எடுத்த காலத்தில் அவர் அங்கு பணிபுரிந்தவர்” என வழிகாட்டினார் மஹாபெரியவர். தீட்சிதரை அவர்கள் சந்தித்த போது, ''உங்களுக்கு வழிகாட்டவே முருகன் இன்னும் என்னை உயிரோடு வைத்திருக்கிறார்'' என நெகிழ்ந்தார். சரியான இடத்தை அவர் சுட்டிக்காட்ட ஒரே நாளில் கல் கிடைத்தது. ஆனால் சிலை தயாரானதா என்றால் அதுதான் இல்லை.கல்லில் இருந்து ஆண் சிலை வடிப்பதற்கான ஓசை வராததால், தலைமை சிற்பி கணபதி மடத்திற்குச் சென்றார். 'சிலையைச் செதுக்க ஆரம்பி. முருகன் அருளால் தானே சரியாகி விடும்' என்றார் மஹாபெரியவர். அதன்படி சிலை வடித்து காட்டிய போது, ''சுவாமிமலை முருகனிடம் இருந்து வேறுபடுத்திக் காட்ட ருத்ராட்ச மாலையை கல்லிலேயே செதுக்கி விட்டாய் போலிருக்கே' எனக் கேட்டார் மஹாபெரியவர். பிரமித்துப் போனார் சிற்பி. சுவாமிமலை முருகனுக்கு ருத்ராட்ச மாலையை தனியாக அணிவிக்கின்றனர். இந்த நுணுக்கத்தை அறிந்துதான் சுவாமிகள் கேட்கிறார். அவரின் பார்வையில் இருந்து யாரும் தப்ப முடியாது என்பதை உணர்ந்து நெகிழ்ந்தார் சிற்பி. மஹாபெரியவர் சிலையை கைகளால் தடவிப் பார்த்ததோடு விபூதி அபிஷேகமும் செய்தார். இக்கோயில் கும்பாபிஷேகத்தன்று இதை கணபதி ஸ்தபதி பக்தர்களுடன் பகிர்ந்து கொண்டார்.காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பேத்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!அநந்த பூமா மமரோக ராஸிம்நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.