ராமாயணத்தில் அறியாத பக்கங்கள் - 15
சாதித்துக் காட்டிய சதிகாரிமந்தரை அடுத்த ஆயுதத்தைப் பிரயோகித்தாள். 'ராமனுக்கு நாளைக்குப் பட்டாபிஷேகம் என்று தசரதர் இன்று ஏன் அறிவித்தார்? ஏன் இத்தனை அவசரம்? இந்த விஷயம் உன் மகன் பரதனுக்குத் தெரிவிக்கப்பட்டதா?' 'பரதன்தான் தன் மாமாவைப் பார்க்க கேகய தேசத்துக்குப் போயிருக்கிறானே. அவனுக்குச் சொல்லி அனுப்பினால் போயிற்று'என்றாள் கைகேயி. 'அடி பைத்தியமே... உன் கணவரின் வஞ்சகம் உனக்குப் புரியவில்லை. பரதனை நெடுந்துாரம் அனுப்பியபின் இங்கே ராமனுக்கு மகுடம் என அறிவித்தால் அதைத் தடுக்க அவனால் வரமுடியுமா''அப்படி சொல்லாதே மந்தரை. பரதனை என் கணவர் தன்னிச்சையாக அனுப்பி வைக்கவில்லை. என் சகோதரன் உதாஜித் விரும்பிக் கேட்டதால்தானே அனுப்பினார்''உன் வெள்ளை மனசுக்கு எல்லாம் சரியாகத் தான் தெரியும். அப்படியே இருக்கட்டும். அவன் வந்த பிறகு அவனது சம்மதம் கேட்டபின் அறிவிக்கலாமே''அவன் வேண்டாம் என்றா சொல்லப் போகிறான். ராமனை தெய்வமாக போற்றுபவன் அவன்''அதுதான் ராமனின் சாமர்த்தியம். சகோதரர்களை வசப்படுத்தி ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறான்''ராமனின் அன்பை கொச்சைப்படுத்தாதே. திருமணம் முடிவான போது தான் மட்டும் அந்த பந்தத்தில் ஈடுபட்டு விட்டானா அந்த ராமன்? அதே முகூர்த்தத்தில் தம்பியருக்கும் மணமுடித்து மகிழவில்லையா''உனக்கு புரிய வைக்கிறேன். அப்புறம் நீ சொல். ராமன் சிம்மாசனம் ஏறினால் அவனுடைய தாய் கோசலை செல்வாக்கும், பலமும் பெறுவாள். நீயும், பரதனும் இரண்டாம் பட்சமாக விடுவீர்கள். கோசலை அனுமதித்தால்தான் உன் தேவைகள் பூர்த்தியாகும். ஒரு பயங்கர விஷயத்தைச் சொல்கிறேன். இது உனக்கே தெரியும், உன் தந்தை கேகயனுக்கும், ராமனின் மாமனார் ஜனகருக்கும் நீண்ட கால பகை இருக்கிறது. நீ தசரதனின் மனைவி என்பதால் ஜனகன் பொறுமை காக்கிறான். ராமன் அயோத்தி மன்னராகி, கோசலையும் ராஜமாதாவாகி விட்டால், மருமகனின் படைபலத்துடன் ஜனகன், உன் தந்தை மீது போர் தொடுக்க மாட்டான் என்பது என்ன நிச்சயம்? இந்த தாக்குதலை உன் தந்தை தாங்குவாரா?''ஏன் இப்படி எதை எதையோ பிதற்றுகிறாய்''உன் எதிர்காலத்தை விளக்குகிறேன். எனக்கு பதில் சொல். உன் மகன் பரதன், என்றும் ராமனுக்கு அடிமையாக இருக்க வேண்டுமா? ராமனுக்குப் பிறகு அவனுடைய மகன் ஆட்சி செய்தால் அவனுக்கும் பரதன் பணிய வேண்டும். ராமனுடன் நெருக்கமாக இருக்கும் லட்சுமணனும் அவனைக் கொடுமைப்படுத்தலாம். இதையெல்லாம் உன்னால் சகிக்க முடியுமா? ஒரு தாயாக மகனுக்குச் செய்ய வேண்டிய கடமையைப் புறக்கணித்து விட்டு உன் சகக்கிழத்தி கோசலையின் மகனுக்காக வக்காலத்து வாங்குவது முறையா?' கெடுத்து ஒழிந்தனை உனக்கு அரும் புதல்வனை கிளர்நீர் உடுத்த பாரகம் உடையவன் ஒரு மகற்கு எனவே கொடுத்த பேர் அரசு அவன் குலக் கோமைந்தர் தமக்கும் அடுத்த தம்பிக்கும் ஆம் பிறர்க்கும் ஆகுமோ என்றாள்- கம்பர்கைகேயியின் தயக்கம் அவள் தன் கைகளை பிசைந்து கொண்டதில் புரிந்தது. மந்தரை உள்ளுக்குள் உற்சாகமானாள். 'கைகேயி என் வார்த்தைகளில் விழுந்து விடுவாள். இனி என் போதனை என்ற எறும்பு ஊராமலேயே இந்தக் கல் தானாகவே கரையும். கைகேயியின் பால் போன்ற வெள்ளை மனம் திரிந்தது. எதிர்காலம் அவளின் கண் முன்னே விரிந்தது. அதில் பரதன் தன் அண்ணன் ராமனின் சிம்மாசனத்திற்குக் கீழே பணிந்து நிற்கிறான். அவனுக்கு நான்கு படிகள் மேலே லட்சுமணன் அண்ணனுக்கு நெருக்கமாக நின்றவாறு கீழ் நோக்கி கேவலமாக பரதனைப் பார்க்கிறான். கைகேயி கோசலைக்குப் பணிவிடை செய்ய நேரிடுகிறது. தாதிப் பெண்கள் இருந்தாலும் கைகேயியை ஏவுகிறாள் கோசலை. லட்சுமணனைப் பெற்ற சுமித்திரையும் நிமிர்ந்து நிற்கிறாள். கீழ்ப் பார்வையால் கைகேயியைப் பார்க்கிறாள். 'எனக்கும் சேர்த்துப் பணிவிடை புரிவாயாக' என்கிறது அந்தப் பார்வை. அவமானத்தால் இப்போதே சிலிர்த்துப் போனாள் கைகேயி. இப்படியும் நடக்க வாய்ப்பிருக்கிறதா? ஏன் கூடாது? எல்லாம் மனித மனம்தானே? திடீரென உச்சத்துக்கு ஒருவர் போய்விட்டால், அவரிடம் பாசத்துக்கும், பரிவுக்கும், மூத்தோர் என்ற மரியாதைக்கும் இடம் இருக்குமா என்ன? ஆனால் அறிவிக்கப்பட்ட ஆணையை தசரதரால் திரும்பப் பெற முடியுமா? ராமனையும் மீறி இளையவனான பரதன் அரியாசனம் ஏற முடியுமா?அவளுடைய மன ஓட்டத்தைப் படித்த மந்தரை அந்தக் கேள்விக்கும் பதில் தந்தாள்.'உன்னால் முடியும் கைகேயி. உன் வசம் பிடி இருக்கிறது. ஆமாம், சம்பாசுரனை அழிக்க தசரதருக்கு நீ துணை செய்தாயே. அதனால் மகிழ்ந்த உன் கணவர் இரண்டு வரங்கள் கொடுத்தாரே? அதில் ஒன்றால் ராமனை நாட்டை விட்டு காட்டிற்கு விரட்டு. பதினான்கு ஆண்டுகள் அவன் காட்டில் அல்லல் படட்டும். இன்னொன்றால் உன் மகன் பரதனுக்கு முடிசூட்டு. ஜகம் புகழும் மகாராணியாகத் திகழ்வாய்'கைகேயி முற்றிலுமாக மனம் மாறினாள். மந்தரையைக் கொண்டாடினாள். 'என் அரச வம்சத்தின் ஆட்சிக் கொடி அறுந்து விடாதபடி காத்த மந்தரையே உனக்கு நன்றி. இப்போதே என் நாடகத்தை அரங்கேற்றுகிறேன்'என்று சூளுரைத்தாள். தசரதர் வந்த போது தலைவிரி கோலமாய் கண்ணீருடன் தசரதரின் நெஞ்சைச் சிதைத்து தன் எண்ணத்தை ஈடேற்றிக் கொண்டாள். ஆம்... ராமன் வனம் புகுந்தான். ஆனால் மந்தரை, கைகேயி இருவரும் எதிர்பாராத வகையில் பரதனின் நடவடிக்கைகள் அமைந்தன. அவன் பதவி ஏற்க மறுத்தான். மந்தரையின் போதனையால் தான் மட்டுமின்றி கோசலை, சுமத்திரையையும் கைம்பெண்ணாக்கினாள் கைகேயி.எப்படியாவது ராமனை அயோத்திக்கு அழைத்து வர வேண்டும் என்ற தீர்மானத்தில் பரதனும், சத்ருகனனும் காட்டுக்குச் சென்றனர். அயோத்தி மக்களும் பின்தொடர்ந்தனர். அவர்களில் ஒருத்தியாக மந்தரை வருவதைக் கண்ட சத்ருக்னன் 'அண்ணா, இத்தனை கொடுமைக்கும் காரணமான கூனியும் நம்முடன் வருகிறாள். அவளை தரையோடு தேய்த்து நசுக்கப் போகிறேன்' எனக் கோபப்பட்டான். உடனே பரதன், 'வேண்டாம். அண்ணன் ராமனுக்கு இதெல்லாம் பிடிக்காது'எனத் தடுத்தான்.அப்போது தப்பித்த மந்தரை உயிர் பிரியாமலேயே இறந்த சம்பவம் பின்னாளில் நடந்தது. ஆமாம், வனவாசம் முடிந்து ராமன் அயோத்தி திரும்பினான். அயோத்தியே கொண்டாட்டத்தில் மூழ்கித் திளைத்தது. அரண்மனைக்குள் நுழைந்த ராமன் முதலில் தரிசித்தது கைகேயியைத்தான். 'என் வனவாசம் பல நன்மைகளை விளைவித்தது அம்மா. உங்களுக்கு நன்றியை சமர்ப்பிக்கிறேன்' என்று தண்டனிட்டான். கண்ணீர் பெருக அப்படியே வாரி அணைத்தாள் கைகேயி. அடுத்து தாயார் கோசலையைச் சந்தித்த போது சற்று தொலைவில் தன்னை முழுமையாக மறைத்துக் கொள்ள முயன்ற மந்தரையைக் கண்டான். ஓடிச் சென்று, 'அம்மா, உங்களுக்கும் நன்றி. சிறு வயதில் தங்களின் முதுகில் உண்டிவில் கல்லை எறிந்ததற்குப் பழி வாங்கிட, சிற்றன்னை மூலம் காட்டுக்கு அனுப்பினீர்கள். ஆனால் நீங்கள் இயல்பான மனிதராக நடமாட வேண்டும் என்ற ஆதங்கத்தில்தான் அப்படி செய்தேன். என்னை மன்னியுங்கள்'என்றான். ராமனின் பெருந்தன்மையால் கூனி உடலளவில் குறுகினாலும் மனதளவில் நிமிர்ந்து நின்றாள்.-தொடரும்பிரபு சங்கர்72999 68695