உள்ளூர் செய்திகள்

அசுர வதம் - 14

அருணாசுரன் வதம்பிரஜாபதி தட்சனின் மகள்களான அதிதி, திதி, கத்ரு, வினதா, தனு, முனி, அரிட்டை, சுரசை, சுரபி, தாம்ரா, குரோதவசை, இரா, விஸ்வா என்னும் பதின்மூன்று பெண்களையும் காசியப முனிவர் திருமணம் செய்தார். இதில் காசியப முனிவர், திதி தம்பதிக்கு பிறந்தவர்களை தைத்தியர்கள் என்றழைப்பர். தைத்தியர்களில் சிலர் தேவலோகத்தில் அசுர ஆட்சியை ஏற்படுத்த விரும்பினர். அதற்காக பிரம்மாவை நோக்கி தவமிருந்து உடல்பலம், மாயாஜால சக்தி, பயங்கர ஆயுதம் என அனைத்தையும் பெற்றனர். அருணாசுரன் என்பவனும் தேவலோகத்தைக் கைப்பற்ற வேண்டும் என பிரம்மாவை நோக்கி தவமிருந்தான். பத்தாயிரம் ஆண்டுகளாக நீடித்த தவத்தைக் கண்டு இரங்கிய பிரம்மா, “என்ன வரம் வேண்டும்?” எனக் கேட்டார். “ மரணமற்ற வாழ்வைத் தர வேண்டும்” என்றான் அசுரன். அதைக் கேட்ட பிரம்மா, “மரணமற்ற வாழ்வு அளிக்க இயலாது. வேறு ஏதாவது கேள்; தருகிறேன்” என்றார். யாரும் பெறாத அரிய வரத்தைக் கேட்டு அதன் மூலம் மரணமற்ற நிலையை அடைய அவன் எண்ணினான். அதற்காக, “போரிலோ, ஆயுதங்களாலோ, ஆணாலோ, பெண்ணாலோ, இரண்டு அல்லது நான்கு கால் உயிரினங்களாலோ மரணம் நேரக்கூடாது. அத்துடன் தேவர்களை வெல்லும் வலிமையும் தனக்கு வேண்டும்” எனக் கேட்டான். பிரம்மாவும் தந்து விட்டு மறைந்தார். அதன் பிறகு அருணாசுரன் மற்ற அசுரர்களைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டான். அவர்களில் ஒரு அசுரன், “ போர் செய்யும் முன்பாக காயத்ரி மந்திரங்களை 35 நாட்களுக்குச் சொல்லித் பார்வதியை வழிபட்டால் போரில் நமக்கே வெற்றி கிடைக்கும்” என்றான். தானே முன்னின்று 35 நாட்கள் காயத்ரி மந்திர வழிபாடு செய்வதாக அருணாசுரன் தெரிவித்தான். இதையறிந்த தேவர்கள், “அருணாசுரனால் தேவலோகத்திற்கு அழிவு நெருங்கிக் கொண்டிருக்கிறது” என இந்திரனைச் சரணடைந்தனர். பிரம்மா, மகாவிஷ்ணுவிடம் ஆலோசனை செய்தும் இந்திரன் உள்ளிட்ட தேவர்களுக்கு நல்ல முடிவு கிடைக்கவில்லை. கடைசியாக சிவபெருமானைச் சரணடைந்த போது, “அசுரனின் காயத்ரி மந்திர வழிபாட்டை முதலில் தடுத்து நிறுத்துங்கள். பின்னர் பராசக்தியைச் சரணடையுங்கள்” என்றார். 'முதல் பணியாக அசுரனின் வழிபாட்டை நானே நேரில் சென்று நிறுத்துகிறேன்' என தேவகுருவான பிரகஸ்பதி பூலோகம் புறப்பட்டார். அவரைக் கண்ட அசுரன், “தேவகுருவே... என்னிடம் சமாதானம் பேசி போரை தடுக்கத்தானே வருகிறீர்கள்?” எனக் கேட்டான் அசுரன். “இல்லை. காயத்ரி மந்திரம் சொல்லி வழிபடும் உன்னைக் காணவே வந்தேன்” என்றார். “தேவகுருவான தாங்கள் தேடி வந்தது ஆச்சரியம் அளிக்கிறது” என புளகாங்கிதம் கொண்டான் அசுரன். “அழிவு நேராதபடி பிரம்மாவிடம் வரம் கேட்டுப் பெற்றது உன் அறிவுத் திறத்தைக் காட்டுகிறது. உன்னைப் பாராட்டுகிறேன்” என்றார். அதைக் கேட்ட அசுரன் செய்த ஆரவாரத்தில் மந்திரங்கள் மறந்தன. வந்த வேலை முடிந்ததால் அசுரனிடமிருந்து பிரகஸ்பதியும் விடைபெற்றார். மந்திரம் மறந்தால் என்ன... தேவர்களை எதிர்க்கும் வலிமையை வரமாகப் பெற்றிருப்பதால் எளிதில் வெற்றி கிடைக்கும். தன் அறிவுத் திறனை பிரகஸ்பதியே பாராட்டி விட்டார். இனி காயத்ரி மந்திர வழிபாடு தேவைப்படாது” எனக் கருதினான். அசுர நண்பர்களைச் சந்தித்து போருக்குத் தயாராகும்படி தெரிவித்தான். அவர்களும் தேவலோகம் நோக்கி அணிவகுத்துச் சென்றனர். இதற்கிடையில் இந்திரன் தலைமையில் தேவர்களும் காயத்ரி மந்திர வழிபாட்டைத் தொடங்கினர். மகிழ்ச்சியடைந்த பார்வதி அவர்களுக்கு காட்சியளித்தாள். அவளைச் சுற்றி பிரமரங்கள் (வண்டுகள்) ரீங்காரமிட்டன. வானவெளியே வண்டுமயமாக இருந்தது. வான்வெளி மறைந்து எங்கும் இருள் சூழ்ந்தது. அருணாசுரன் தலைமையிலான அசுரர் படையினர் வண்டுகளைக் கடந்து எப்படி செல்வது? என திகைத்தனர். வண்டுகள் அனைத்தும் அசுரர்களைச் சூழ்ந்தன. அவற்றின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் அசுரர்கள் மாண்டனர். இறுதியாக அருணாசுரன் மட்டும் தனித்து நின்றான். அப்போது பராசக்தியின் ஆணையால் அவனைச் சுற்றிலும் தேனீக்கள், குளவிகள், ஈக்கள், கரையான்கள், கொசுக்கள், சிலந்திகள், வண்டுகள் என நான்குக்கும் மேற்பட்ட கால்களைக் கொண்ட பல்லாயிரக்கணக்கில் அணிவகுத்து நின்றன. அப்போதுதான் தான் பெற்ற வரத்தை அவன் எண்ணிப் பார்த்தான். போராலோ, ஆயுதங்களாலோ, ஆணாலோ, பெண்ணாலோ, இரண்டு கால்கள் அல்லது நான்கு கால்கள் கொண்ட உயிரினங்களாலோ அழிவு வரக்கூடாது என வரம் பெற்றதால், தனக்கு எதிராகப் போரே நிகழவில்லை என்பதும், வண்டுக்கூட்டத்தால் தனக்கு முடிவு நேர்கிறது என்பதும் அவனுக்கு புரிந்தது. வண்டுகள் அசுரனின் உடலெங்கும் பலமாகக் கொட்டின. தாங்க முடியாமல் தரையில் சாய்ந்தான். கடைசியில் வண்டுகளுக்கு இரையானான். அதன்பின் அவை பார்வதியிடம் சென்று மறைந்தன. வண்டுகளின் உதவியுடன் அசுரனை வதம் புரிந்த பார்வதியை பிரமராம்பிகை (வண்டின அம்பிகை) என தேவர்கள் அனைவரும் கொண்டாடினர். -தொடரும்தேனி மு.சுப்பிரமணி99407 85925