ராமாயணம் கேட்க தயாரா...
பெருமாளை சேவிக்க சென்றார் ஒரு பெரியவர். சன்னதியில் அவ்வளவாக கூட்டம் இல்லை. தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்த அவர் அங்கிருந்த வீட்டில் பலகை தொங்குவதை பார்த்தார். அதில் பழம் சாப்பிட்டால் போதும் பிறவி அறுபடும் என எழுதப்பட்டிருந்தது. அவருக்கு ஆச்சரியம். அது என்ன பழம் என தெரிந்து கொள்ள ஆசை. பல நாட்களாக பிறவி அறுபடத்தானே கோயில் கோயிலாக சுற்றுகிறோம். இன்று விடை கிடைத்து விடும் என நினைத்து அங்கு சென்றார். சுவாமி என குரல் கொடுத்தார். உள்ளிருந்து ஒரு சிறுவன் ஓடி வந்தான். வாசலில் நின்ற அவரிடம், ஐயா என்ன வேண்டும் எனக் கேட்டான். பழம் வேண்டும் என்றார் அவர். அதற்கு தாங்கள் தினந்தோறும் இங்கு வந்து 1 மணி நேரம் என் தாத்தா சொல்லும் கதையை கேட்டால் பழம் கிடைக்கும் என்றான் சிறுவன். கேட்டது பழம் நீ என்னப்பா கதை கேட்க சொல்லுகிறாய் என்றார் பெரியவர். விவரமாக சொல்ல ஆரம்பித்தான் சிறுவன். வால்மீகி எழுதிய ராமாயணம் பலாப்பழம். கம்பர் எழுதிய ராமாயணம் தோட்டத்தில் தொங்கும் மாதுளம் பழம். என் தாத்தா பெரியவாச்சான் பிள்ளை தொகுத்த ராமாயணம் பூஜை அறையில் இருந்து நேராக சாப்பிடுபவர் வாய்க்குள் செல்லும் வாழைப்பழம் என்றான் சிறுவன். கிருஷ்ண பரமாத்மா அவதரித்த ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த பெரியவாச்சான் பிள்ளையின் பேரனா நீ? அவர் திவ்ய பிரபந்தங்களுக்கு தானே உரை எழுதியுள்ளார். எப்போது ராமாயணம் எழுதினார் என கேட்டார் பெரியவர். நீங்கள் கூறுவது சரிதான். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய பாடல்களில் வரும் ராமாயண செய்திகளை எல்லாம் ஒன்றாக தொகுத்து அதற்கு பாசுரப்படி ராமாயணம் என பெயர் சூட்டி இவ்வுலகிற்கு வழங்கியுள்ளார் பெரியவரே என்றான். இவ்வளவு நாள் இது தெரியாமல் போய்விட்டதே என நினைத்த அவர் பாசுரப்படி ராமாயணத்தை தினமும் கேட்க, படிக்க தயாரானார்.