உள்ளூர் செய்திகள்

ராமாயணத்தில் அறியாத பக்கங்கள் - 27

நட்புக்கு மரியாதைபஞ்சவடி நோக்கி ராம சகோதரர்களையும், சீதையையும் பாசத்துடன் அனுப்பி வைத்த ஜடாயு, நிர்ப்பந்தக் காலம் முழுவதையும் வனத்தில் எந்தக் குறையும் இல்லாமல் கழித்து விட்டு பாதுகாப்பாக அயோத்தி திரும்ப வேண்டும் எனக் கவலைப்பட்டார்.பிறகு ஒருநாள் வானில் அவர் சஞ்சரித்தபோது மிகப் பெரிய தேர் ஒன்று சற்றுத் தொலைவில் பறந்து செல்வதைக் கண்டார். அதில் இருவர் இருந்தனர். ஒருவன் மிகுந்த பலசாலியாகவும், முரட்டுத்தனம் மிக்கவனுமான ராவணன். இன்னொருவர்... அட, நம் சீதையல்லவா! ஐயோ அவள்தான் எப்படி துடிதுடித்துக் கொண்டிருக்கிறாள்! ஆமாம், ராவணன் அவளைக் கடத்திச் செல்கிறான்! ஆனால் அவன் அவளைத் தொடவில்லையே! கடத்தலிலும் கண்ணியம் காக்கிறானோ? ஆமாம், காமாந்தகனுக்குக் கண்ணியம் ஒரு கேடா! ஒரு பெண்ணின் விருப்பமில்லாமல் அவளைத் தொடமுடியாது என்ற சாபமல்லவா அவனுக்கு வேலி போட்டிருக்கிறது! தன்னுடைய துயர நிலையை உணர்ந்த சீதை யாராவது தன்னைக் காப்பாற்ற மாட்டார்களா என ஏங்கி அழுது புலம்புகிறாளே! என்ன கொடுமை இது! என் ஆவியனைய நண்பனான தசரதனின் மருமகள் இப்படி ஒரு அவல நிலையை அடைய வேண்டுமா? கூடாது. எப்படியாவது தடுத்தாக வேண்டும். உடனே ஜடாயு அந்தத் தேர் முன்னே போய் நின்று அதன் வேகத்தைக் குறைத்தார். ''ராவணா... அநியாயம் செய்கிறாய். சீதையை எங்கே கடத்திச் செல்கிறாய்? விட்டுவிடு'' என்று இடி முழக்கமாக ராவணனிடம் கடுமை காட்டினார். கூடவே சீதையைப் பார்த்து 'கவலைப்படாதே அம்மா! நான் உதவிக்கு இருக்கிறேன்' என்று கண்களால் ஆறுதல் அளித்தார்.சீதைக்கு மகிழ்ச்சியும், நம்பிக்கையும் துளிர் விட்டன. சில நாட்களுக்கு முன் தனக்கு அறிமுகமான ஜடாயு என்ற பறவை அரசன் இப்போது தன்னைக் காக்க வந்திருப்பதால் நிம்மதி கொண்டாள். ஆனால் கூர்மையான அலகு, கூரிய நகங்கள், விரிந்த சிறகுகள் இவற்றால் மட்டும் ராவணனை எதிர்க்க முடியுமா? இவன் பயங்கரமான ஆயுதங்களை வைத்திருக்கிறானே என்ற கவலையும் அவளுக்கு உண்டாயிற்று. ஜடாயுவை புறக்கணித்து, தேரை திசைத் திருப்பிச் செலுத்துமாறு தேரோட்டிக்கு ஆணையிட்டான் ராவணன். ''ராவணா! அழிவைத் தேடிக் கொள்ளாதோ. ராமனின் பராக்கிரமம் அறியாமல் தவறு செய்கிறாய். கற்புக்கரசியான இந்தப் பெண்ணை விட்டுவிடு. இல்லாவிட்டால் நீ உயிரை விட வேண்டியிருக்கும்'' என்று பேசித் தடுக்க முயன்றார் ஜடாயு. அலட்சியமாகச் சிரித்தான் ராவணன். ''ஏய்... அற்பப் பறவையே, என் பாதையை விட்டு விலகு. என் அம்பு உன் மார்பைத் துளைத்து உன்னை வீழ்த்து முன்னால் தப்பி விடு''''நீதான் அற்பன். பல வரங்களை நீ பெற்றிருக்கலாம். ஆனால் அதெல்லாம் இதோ இப்போதே, இந்தப் பெண்ணை கவர்ந்த போதே பலனற்றுப் போய்விட்டன. ஆகவே இவளை இப்போதே விட்டுவிடு''ராவணனோ, ''இதோ பார், இந்தப் பேரழகியை நான் விட்டுக் கொடுப்பதாக இல்லை. என்ன செய்ய முடியுமோ செய்துக்கொள். ஆனால் வீணாக என்னால்தான் வீழத்தான் போகிறாய்'' என்று கொக்கரித்தான். அதைக் கேட்டு சீதை பதறினாள். அவளின் உடலே நடுங்கியது. கண்களிலிருந்து நீர் பெருகியது. இரு கரம் கூப்பி ராவணனிடம் தன்னை விட்டு விடுமாறு கெஞ்சினாள். அதைப் பார்த்து ஜடாயு வேதனையுடன், ''வருந்தாதே சீதா. பனம்கொத்து போல உள்ள இவனுடைய பத்துத் தலைகளையும் நானே அறுத்தெறிந்து திசைக்கொன்றாக வீசிவிடுவேன்'' என்று முழு வலிமையைக் காட்டி ராவணனுடன் போரிட்டார். சினம் கொண்ட ராவணன் சரமாரியாக அம்புகளை எய்ய அவற்றையெல்லாம் சிறகால் வீசி உடைத்தார். தன் கால்களால் அவனது வில்லை முறித்தார். அவனுடைய வெண் கொற்றக் குடை, சாமரம், வீணைக்கொடி எல்லாவற்றையும் சின்னாபின்னாமாக்கினார். தன் அலகால் அவனுடைய குண்டலங்களைப் பறித்தார். அதே அலகால் அவனுடைய மார்பை மூடியிருந்த கவசத்தை உடைத்தார். தேர்ப்பாகனை அலகால் குத்தினார், கால் நகங்களால் பிறாண்டி கீழே தள்ளினார்.ராவணன் தன்னிடமிருந்த சூலாயுதத்தை எறிந்தான். ஜடாயு சற்றே ஒதுங்கிக்கொள்ள அது வெற்றிடத்தை நோக்கிச் சென்று பிறகு சுற்றி வந்து அவனிடமே ஒதுங்கியது. ஆனாலும் வெறித்தனமாக ஜடாயு மீதான அவனுடைய தாக்குதல் உக்கிரமாக இருந்தது. ஒரு கட்டத்தில் தன்னிடமிருந்த சந்திரஹாசம் என்ற வாளினால் ஜடாயுவின் சிறகுகளை வெட்டி வீழ்த்தினான். மூப்பு காரணமாகவும், வெறும் அலகு, கால் நகங்கள், சிறகுகளால் மட்டுமே அவனைத் தாக்க வேண்டிய இயலாமையாலும் நண்பனின் மருமகளைக் காக்க இயலாமல் போகுமோ என்ற அவநம்பிக்கையாலும் துவண்டு போய் அப்படியே பொத்தென்று விழுந்தார் ஜடாயு. உடனே ராவணன் தேரை இலங்கை நோக்கிச் செலுத்தினான். சீதையோ நிர்க்கதியானாள். தன்னைக் காக்க முழுமையாக முயன்றும் அவர் வீழ்த்தப்பட்டது கண்டு துவண்டு சரிந்தாள். கண்களில் நீர் பெருக, விம்மி விம்மி அழுதாள். இதற்கிடையில் பொன்மானாக வந்த மாரீசனை வதம் செய்த ராமன், பர்ணசாலைக்கு லட்சுமணனுடன் திரும்பியதும் சீதை கடத்தப்பட்டது அறிந்து துயருற்றான். மானின் மாயத்தைச் சரியாக ஊகித்துத் தன்னைத் தடுத்த அன்புத் தம்பியின் எச்சரிக்கையை மீறிச் சென்றதால் ஏற்பட்ட மிகப் பெரிய நஷ்டம், சீதையை இழந்தது என்று அறிந்து மனம் குமைந்தான். அதே சமயம் தான் எவ்வளவோ மறுத்தும் கேளாமல் ராமனைத் தேடிச் செல்லுமாறு விரட்டியதால் அண்ணியார் தன்னையே இழந்தார்களே என லட்சுமணனும் அழுதான். ஆனால் அண்ணனை மனச்சோர்வு அடைய விடக்கூடாது என்ற சூழ்நிலைக் கட்டாயத்தில், அவனைத் தேற்றி சீதையைத் தேடும் முயற்சியில் ஈடுபட வைத்தான். சற்றுத் தொலைவில் ஒரு தேர் சென்ற தடம் தெரிந்தது. அது வானோக்கிச் செல்வதற்காக பூமியை உந்தி எழும்பிய அழுத்தமும் தெரிந்தது. இன்னும் சற்று தொலைவில் ராவணனின் வீணைக் கொடி, வில், சூலம், குண்டலங்கள், கவசம், அம்பறாத்துாணி இவற்றுடன் தேர்ப்பாகனும் மாண்டு கிடப்பதைக் கண்டனர். ஆக, சீதையை ராவணன்தான் கடத்தியிருக்கிறான். அந்த தீயசெயலில் அவன் ஈடுபட்டிருந்தபோது போரிட்டு அவனுக்கு பலத்த சேதம் உண்டாக்கியிருக்கிறார்கள். ஆனாலும் அவன் தப்பித்திருக்க வேண்டும். அவனை யார் தாக்கியிருப்பார்கள் என்ற சிந்தனையுடன் சென்ற அவர்கள் தீனமான குரலில் முனகியபடி ஜடாயு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி கொண்டனர். ஓடிப்போய் தாங்கிப் பிடித்தனர். அவர்களைக் கண்டதும் உயிர்ப்படைந்த ஜடாயு, ''என் செல்வங்களே, நான் இனியும் உயிர் தரிக்க மாட்டேன். இந்த இறுதிக் கட்டத்தில் உங்களைப் பார்த்து விட்டதில் மகிழ்ச்சி. என்னருகே வாருங்கள்'' என்றழைத்து, ராவணனின் மகுடங்களைத் தகர்த்தத் தன் அலகால் மாறி மாறி முத்தமிட்டார். பாக்கியத்தால் இன்று என் பயன் இல் பழி யாக்கைபோக்குகின்றேன் கண்ணுற்றேன் புண்ணியரே வம்மின் என்று தாக்கி அரக்கன் மகுடத் தலை தகர்த்தமூக்கினால் உச்சி முறையே மோக்கின்றான் -கம்பர்தசரதனுடனான நட்புக்கு மரியாதை செய்த நிறைவில் ஜடாயு உயிர் நீத்தார். அவரது தியாகம் மிகுந்த வீர சாகசங்களை அறிந்து நெகிழ்ந்த ராமன், ''தந்தைக்கு நிகரானவரே! எமக்காக ஆவி துறந்த உத்தமரே! உமக்கு இறுதிக் கடன் செய்வதன்றி வேறு கடமை என்ன இருக்கிறது'' என தழுதழுத்தான். அதேபோல லட்சுமணனுடன் இணைந்து ஜடாயுவுக்கு இறுதிச் சடங்குகள் செய்தான். -தொடரும்பிரபு சங்கர்72999 68695