உள்ளூர் செய்திகள்

காயத்ரி இருந்தால்...

தென்காசி பகுதியை ஆட்சி செய்த பாண்டிய மன்னர் ஒருவர் வயிற்று வலியால் அவதிப்பட்டார். வைத்தியர்கள் பலர் முயற்சி செய்தும் வலி தீரவில்லை. இமயத்தில் இருந்து வந்த ஜோதிடர் ஒருவர் மன்னரை காண அரண்மனைக்கு வந்தார். மன்னரைப் பார்த்ததும் அவருக்கு உண்மை புலப்பட்டது. ''மன்னரே... தங்களுக்கு மருந்து தேவையில்லை. பரிகாரம் செய்தாலே போதும்' என்றார். அதன்படியே தர்மதேவனின் உருவபொம்மை ஒன்றைச் செய்து அதன் கையில் கத்தி ஒன்றை செருகி வைத்தனர். ''இந்தக் கத்தியை விழ வைப்பவருக்கு அவரது எடைக்கு எடை பொற்காசுகள் தரப்படும் என அறிவிப்பு செய்யுங்கள். வயிற்று வலி தீரும்'' என்றார் ஜோதிடர். பலரும் முயற்சித்தனர். ஆனால் பொம்மை தன் மூன்று விரல்களை உயர்த்திக் காட்டியது. அவர்களும் புரியாமல் விழித்தனர். இந்நிலையில் ஏழை அந்தணர் ஒருவர் முயற்சித்தார். அந்த பொம்மை அப்போதும் மூன்று விரலை காட்டியது. ' என்னால் முடியாது' என மறுத்தார் அந்தணர். மறுபடியும் இரண்டு விரலை பொம்மை காட்டியது. அப்போதும் 'முடியவே முடியாது' என்றார். பின் ஒற்றை விரலை காட்டவே சம்மதம் தெரிவித்தார் அந்தணர். கத்தியை கீழே போட்டது பொம்மை. மன்னரின் வயிற்று வலி தீர்ந்தது. மகிழ்ச்சி அடைந்த மன்னர் பொம்மையுடன் நடந்த ரகசிய பேச்சு குறித்து கேட்டார். ''மன்னா! அன்றாடம் மூன்று வேளை செய்யும் காயத்ரி ஜபத்தின் பலனைக் கேட்டது. மறுத்தேன். பின்னர் இரண்டு வேளை பலனைக் கேட்டும் சம்மதிக்கவில்லை. கடைசியில் ஒரு வேளை செய்த காயத்ரி ஜப பலனையாவது தாரும் என்றது. சரி என்றேன். கத்தி கீழே விழுந்தது'' என்றார் அந்தணர். அவரைக் குருநாதராக ஏற்றுக் கொண்டார் மன்னர்.