ராமாயணத்தில் அறியாத பக்கங்கள் - 29
சோதனையும் சுமந்திரன் வேதனையும்ராமனை மீண்டும் அயோத்திக்கு அழைத்துச் செல்ல முடியவில்லையே என்ற வருத்தம் மனதைத் தாக்க, வழியின்றி தேரைத் திருப்பினான் சுமந்திரன். அரண்மனையில் வசிஷ்டரை சந்தித்து விவரம் சொன்னான். தன்னைத் திரும்பப் போகச் சொல்லிவிட்டு இருளில் அவர்கள் மூவரும் நடந்தே சென்று மறைந்தார்கள் எனச் சொல்வதற்குள் துக்க மிகுதியால் மூச்சு திணறியது. இதை தசரதருக்கு எப்படி தெரிவிப்பது என சங்கடப்பட்ட அவனை தசரதன் அழைத்து நேரடியாகக் கேட்டார். வேறு வழியின்றி நடந்ததை தயங்கியபடி சொன்னான் சுமந்திரன். அதைக் கேட்டதும் அப்படியே சரிந்து விழுந்து உயிர் துறந்தார் தசரதன். சுமந்திரன் 'என் சொல்லைச் செவி மடுத்து சாவினைத் தழுவினாரே' என தாங்கொணாமல் அழுதான். அடுத்தபடியாக சுமந்திரனிடம், ராஜாங்கப் பராமரிப்பை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார் வசிஷ்டர். ஏற்கனவே ராமன் வனம் சென்று விட்டான், தசரதனும் மரித்து விட்டார், பரதனும், சத்ருக்னனும் கேகய நாட்டில் உள்ளனர். அதனால் முதலமைச்சன் என்ற முறையில், சுமந்திரனை அமர்த்தினார் வசிஷ்டர். பொறுப்பை ஏற்ற சுமந்திரன், விரைவில் பரதன் அயோத்தி திரும்புவான், அவனிடம் நாட்டை வசிஷ்டர் ஒப்படைப்பார் என நம்பினான். அதே போல பரதன் வந்ததும் குறிப்பால் வசிஷ்டருக்கு அதை உணர்த்தினான். அவரும் புரிந்து கொண்டு பரதனிடம் 'ராமன் வனத்தில் வாழ்கிறான், உன் தந்தை தசரதனும் மேலுலகம் சென்றான், இனி அயோத்தி சிம்மாசனத்தை நீயே அலங்கரிக்க வேண்டும்' என கோரினார். ஆனால் பரதனோ சீற்றமுடன் தாய் கைகேயியைப் பலவாறாகத் துாற்றினான். ராமனைக் காட்டுக்கு அனுப்பிய தசரதனின் உடலைத் தீயிட்டு எரித்து, தன் சினத்தைத் தணிக்க நினைத்த அவனை, இறுதிச் சடங்கு செய்யக் கூடாது என தசரதர் இட்ட கட்டளை தடுத்தது. அவன் வசிஷ்டரின் விண்ணப்பத்தை ஏற்க மறுத்தான். '' ராமன் அமர இயலாத அரியணையில் நான் அமர்வதா, என்ன கொடுமை! என்னைச் செங்கோல் பிடிக்கச் சொல்லும் ராஜகுருவே, தங்களுக்கு ஸ்ரீராமன் மீதான என் பாசம், அன்பு, மரியாதை இவற்றுக்கெல்லாம் அர்த்தம் தெரியாதிருக்கிறதே! என்னை அரசப் பொறுப்பை வகிக்குமாறு சொல்வதே தவறு. நான் அழைத்தால் அவர் வருவார்'' என்று கோபமாக சொல்லிவிட்டுக் கானகம் நோக்கிப் புறப்பட்டான். பரதன், சத்ருக்னன், தாயார்கள், நாட்டு மக்கள் அனைவரும் ஆரண்யம் ஏக, உடன் சென்றான் சுமந்திரன். ராமனைக் கொண்டு விட்ட இடம் எது என்பதைக் காண்பிப்பதற்காக மட்டுமன்றி, ராமன் அயோத்தி வர மாட்டானா என்ற ஆவலுடன் சென்றான் அவன். இதற்கிடையில் ராமன், சீதை, லட்சுமணனை கங்கையின் அக்கரைக்குக் கொண்டு சேர்த்த குகனைப் பற்றியும் சுமந்திரன் அறிந்திருந்தான். ஆகவே தென்கரையில் இருந்த குகன், பரதனையும் அவன் பரிவாரங்களையும் பார்த்து சந்தேகம் கொள்வதை சுமந்திரனால் ஊகிக்க முடிந்தது. அதோடு மரவுரி தரித்து வந்திருக்கும் பரதனையும் அவனுடைய நோக்கத்தையும் அவனால் புரிந்து கொள்ள முடியும் என்றும் சிந்தித்தான். ஆகவே குகனுடைய நற்பண்புகளைப் பற்றி பரதனிடம் விரிவாக எடுத்துச் சொன்னான். அதைக் கேட்டு தன் அண்ணன் நல்லோர் ஆதரவால் நலமுடன் வாழ்கிறான் என ஆறுதல் கொண்டான் பரதன். இங்கே வடகரைக்கு வந்து பல படகுகளைக் கொண்டுவரச் செய்து பரதனையும் பிறரையும் அக்கரைக்குக் கொண்டு சேர்த்தான் குகன். அண்ணன் மீது அளவற்ற பாசம் கொண்ட பரதனின் பண்பு கண்டு வியந்தான் குகன். பரத்வாஜ முனிவரின் ஆதரவில் சித்திரகூடத்தில் தங்கியிருந்த ராமனைக் கண்டதும் காலில் விழுந்து 'அயோத்தி மீள வேண்டும்' என்று கெஞ்சினான் பரதன். ஆனால் ராமனோ உறுதியுடன் மறுத்தான். தந்தையாரின் உத்தரவை நிறைவேற்றுவது தன் கடமை என ஆணித்தரமாக தெரிவித்தான். ''தந்தையார்தான் இறந்து விட்டாரே, அயோத்தியை நான் ஆளவேண்டும் என்ற அவரது ஆணையை புறக்கணித்து அரசுரிமையை அளிக்க முன் வருகிறேனே, இனியும் என்ன வேண்டும்?'' என பரதன் மன்றாடியும் ராமன் இணங்கவில்லை. முடிவில் ராமனின் பாதுகைகளைப் பெற்றுக் கொண்டு பரதன் திரும்ப வேண்டியிருந்தது. இந்த சோக சம்பவத்திற்கும் சுமந்திரன் சாட்சியாக அமைந்தான். ராவண வதம் முடிந்து ராமன் தான் நிர்ணயித்த நாளில் திரும்பாததால் தீப்புகத் தயாராக இருந்த பரதனைத் தடுக்க நந்தி கிராமத்துக்கு வந்தான் ராமன். அண்ணனின் அடி தொழுது மகிழ்ந்தான் பரதன். அங்கிருந்து ராமனை முறைப்படி அயோத்திக்கு அழைத்து வர, அமைச்சர்கள், படைத் தலைவர்கள், படையினருடனும், முதலமைச்சனான சுமந்திரன் வந்தான். மந்திரச் சுற்றத்துள்ளார் தம்மொடும் வயங்கு தானைத் தந்திரத் தலைவரொடும் தமரொடும் தரணி யாளும் சிந்துரக் களிறு போல்வார் எவரொடும் சேனையொடும் சந்திரதடந் தோள் வெற்றிச் சுமந்திரன் தோன்றினானால்-கம்பர்இதற்கு முந்திய சம்பவங்களை நினைத்துக் கொண்ட சுமந்திரன் நெஞ்சை நீவி விட்டுக் கொண்டான். இந்த முறையாவது ராமனின் நலன் விழையும் சம்பவத்தில் தான் ஈடுபடுவதில் அவனுக்கு மகிழ்ச்சி. அதோடு ராமன் பட்டாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை முதலமைச்சன் என்ற முறையில் நிர்வகிப்பதிலும் பெருமை கொண்டான். ஆனால் வால்மீகியாரின் உத்தர ராமாயணத்தின்படி (கம்பராமாயணத்தில் இப்பகுதி இடம் பெறவில்லை) மிகப் பெரிய சோகத்தை அரங்கேற்ற வேண்டிய துர்ப்பாக்கியம் சுமந்திரனுக்கு ஏற்பட்டது. ஒருநாள் ராமன், லட்சுமணனை அழைத்தான். ''எனக்காக நீ ஒரு பணி ஆற்ற வேண்டும்'' என்று ஆரம்பித்தான். அண்ணனின் முகத்தோற்றம் வாடியும், குரல் கம்மியும் இருப்பதைக் கண்ட லட்சுமணன் கலக்கத்துடன் திகைத்தான். ''லட்சுமணா! சீதையை கானகத்தில் முனிவர்களின் ஆசிரமத்தில் கொண்டுபோய் விட்டுவிட்டு வா'' என்று அவன் தொடர்ந்து சொன்னபோது அப்படியே நிலைகுலைந்தான் லட்சுமணன். ''ஆமாம், ஊர்ப்பழிக்கு நான் ஆளாக விரும்பவில்லை. சீதையின் கற்பில் ஒரு குடிமகன் சந்தேகம் கொண்டிருக்கிறான் என்றால் அதை அரசன் என்ற முறையில் என்னால் உதாசீனப்படுத்தி விட முடியாது. ஆகவே சீதையை நான் பிரிவதுதான் அந்தக் குடிமகனுக்கு நான் காட்டும் நியாயம்'' என்று கம்மிய குரலில் கூறிய ராமன், ''நீ சீதைக்குத் துணையாகச் செல். சுமந்திரர் தேரைச் செலுத்தட்டும்'' என்று முடித்தான். வேதனையுடன் சென்ற லட்சுமணன், ''நாளை காலை நாம் கானகம் செல்கிறோம், சுமந்திரரே'' என்றான். ''என்னது?'' அதிர்ந்தான் சுமந்திரன். ''மீண்டும் வனவாசமா?'' என்று பதறிக் கேட்டான். மறுபடியும் ராமன் கானகம் செல்ல வேறு யாராவது வரம் கேட்டு விட்டார்களோ என்ற கலக்கம் அவனுக்குள் மூண்டது. ''இம்முறை அண்ணியாரும், நாமும் மட்டும் போகிறோம். கங்கையின் அக்கரையில் அண்ணியாரை விட்டு விட்டு நாம் அயோத்தி திரும்புகிறோம்'' என்று உணர்ச்சியற்ற குரலில் சொன்னான் லட்சுமணன்.''இது என்ன விபரீதம்? சீதையை அங்கே தனித்து விட்டுவிட்டு வருவதா?''''ஆமாம். யாரோ அவரைப் பற்றி அவதுாறு சொல்லியிருக்கிறார்கள். அண்ணன் அந்த அவதுாறுக்கும் நீதி கற்பிக்க விரும்புகிறார். ஆனால் அன்னைக்கு உண்மை தெரியாது'' என்று சொல்லிக் கலங்கினான் லட்சுமணன்.சுமந்திரன் நீண்ட பெருமூச்சுடன் தேரைத் தயார் செய்து, மிகுந்த மனக்குமுறலுடன் சீதையைக் கானகத்தில் கொண்டு விட்டான். -தொடரும் பிரபு சங்கர்72999 68695