பச்சைப்புடவைக்காரி - 13
துறவியின் துன்பம்என் அறைக்குள் நுழைந்த இளம் துறவியின் முகத்தில் இருந்த ஒளி என்னை எழுந்து நின்று வணங்க வைத்தது.அறிமுகம் முடிந்தவுடன் நான் வெடித்துவிட்டேன்.“நீங்கள் தூய்மையின் இருப்பிடம். எங்களுக்கெல்லாம் பிரச்னை என்றால் உங்களிடம் வருவோம். ஒரு பிரச்னைக்காக நீங்கள் என்னைப் பார்க்க வந்தேன் என சொல்லலாமா”“என்னை பச்சைப்புடவைக்காரிதான் வழிநடத்துகிறாள். என் முன் இரண்டு பாதைகள் பிரிகின்றன. அதில் எதை தேர்ந்தெடுப்பது எனக் குழப்பம். அதனால்தான்... ”“சொல்லுங்கள்”அவர் பெயர் அனந்தானந்தா. நாடெங்கும் கிளைகள் கொண்ட மடத்தைச் சேர்ந்தவர். மூன்று வயதில் அனாதையாகத் தெருவில் கிடந்தவரை ஆத்மானந்தா என்ற துறவிதான் வளர்த்து ஆளாக்கினார். வேதாந்தங்களைச் சொல்லிக் கொடுத்து துறவியாக்கினார். “இதில் என்ன பிரச்னை…''“இப்போதெல்லாம் என் குருநாதர் சடங்கு, சம்பிரதாயம் மீது கவனம் செலுத்துகிறார். நானும் அவரைப் போல் இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறார். ஒரு நாளில் எட்டு மணி நேரத்துக்கு மேல் வழிபாடு, யாகம் என பொழுது கழிகிறது. நான் பச்சைப்புடவைக்காரியை வணங்குபவன். தினமும் சில மணி நேரமாவது தியான நிலையில் இருக்க நினைப்பவன். “நான் தியானத்தில் அமர்ந்தால் அவர் கோபப்படுகிறார். எனக்கு ஏதோ ஒரு வேலையைத் தருகிறார். இல்லை... ஏதாவது பூஜை செய்யச் சொல்கிறார். ஒரு முறை, இரண்டு முறை என்றால் ஏதோ தற்செயல் என விட்டுவிடலாம். பல மாதங்களாகத் தொடர்ந்து நடக்கிறது.“இன்று என் உடலும் உயிரும் ஒட்டியிருப்பதற்குக் காரணமே என் குருதேவர்தான். அவருக்கு நான் தியானம் செய்வது பிடிக்கவில்லையென்றால் நான் தியானம் செய்ய மாட்டேன். உள்ளபடியே இப்போதெல்லாம் பச்சைப்புடவைக்காரியை நான் தியானிப்பதில்லை. அந்த நேரத்தில் என் குருதேவரின் சந்நிதியில் அமர்ந்து அவரது கட்டளைகளை நிறைவேற்றக் காத்திருக்கிறேன்.“குருநாதர் என் மீது சுடுசொற்களை அள்ளி வீசுகிறார். அதைத்தான் என்னால் தாங்க முடியவில்லை. என் குருதேவர் வெறுக்கும் அளவிற்கு என்ன செய்தேன் எனத் தெரியவில்லை. 'நீ வெளியே போய் ஒரு இயக்கத்தை, ஒரு மடத்தைத் தொடங்கு' என்று எங்கள் மடத்திலுள்ள மற்றொரு துறவி யோசனை சொன்னார். “குருதேவர் மனதிற்குப் பிடிக்காத ஏதோ ஒன்றைச் செய்துவிட்டேன். அது என்னவென்று தெரிந்து கொள்ளாமல், அதற்கான பிராயச்சித்தம் செய்யாமல் எப்படி வெளியே போவேன்? உள்ளே இருக்கலாம் என்றால் குருதேவர் சுடுசொற்களால் வதைக்கிறார். இருக்கவும் முடியாமல் வெளியேறவும் முடியாமல் தவிக்கிறேன்”நான் யோசித்தேன். இது பெரிய இடத்து விவகாரம். அனந்தானந்தாவிடம் இருக்கும் துாய்மையும் துறவு மனப்பான்மையும் என்னிடம் இல்லை. நான் எப்படி துறவிக்கு வழிகாட்ட முடியும்?வழி புலப்பட்டால் சொல்கிறேன் என்று சொல்லி தொடர்பு விவரங்களை வாங்கி விட்டு அனுப்பினேன். அன்று மாலை வீட்டிற்கு அருகிலுள்ள பூங்காவில் அமர்ந்திருந்தேன். மதியம் எதுவும் சாப்பிடவில்லை.“சாமி, கொய்யாப்பழம் வாங்குறீங்களா?”“ஆமாம்மா, இப்போ இது ஒண்ணுதான் குறைச்சல்”“உனக்குப் பசி தாங்காது. கூடவே மனதில் அகங்காரமும் வந்துவிட்டது. இந்தப் பழத்தைச் சாப்பிடாவிட்டால்…''பச்சைப்புடவைக்காரியின் கால்களில் விழுந்து வணங்கி பழத்தைப் பிரசாதமாகப் பெற்றேன். பச்சைப்புடவைக்காரி அமர்ந்தாள். நான் அருகில் அமர்ந்துகொண்டேன்.“அகங்காரம்...''“ஆமாம். என்னிடம் துாய்மையும் இல்லை துறவும் இல்லை, நான் எப்படி வழிகாட்டுவது என யோசித்தாயே?”“அது உண்மைதானே...''“உன்னிடம் துாய்மையும் துறவும் இல்லை என்பது உண்மைதான். ஆனால் நீயா வழிகாட்டுகிறாய்?”தவறு புரிந்தது. மீண்டும் வணங்கினேன். “இளம் துறவியை மடத்தை விட்டு வெளியேறச் சொல். அவனை ஒரு இயக்கத்தை ஆரம்பிக்கச் சொல். அன்பே ஆன்மிகம் என்பதுதான் அந்த இயக்கத்தின் மந்திரச் சொல்லாக இருக்க வேண்டும் என்று சொல்”திடுக்கிட்டேன். “குருதேவருக்கு எதிராகச் செயல்படுவது குரு துரோகம் அல்லவா? அது மட்டுமில்லை, தாயே! அந்தத் துறவியின் குருவிடம் பல சக்திகள் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். அவர் சினம் கொண்டு இளம் துறவிக்கு சாபமிட்டால்... பயமாக இருக்கிறது தாயே”“முட்டாள். இவ்வளவு நாள் எனக்கு அடிமையாக இருந்தும் என்னைப் பற்றி உனக்குத் தெரியவில்லையே! உனக்கு எப்படி அந்தத் துறவியின் குருவைப் பற்றித் தெரியும்?”நான் விழித்தேன்.“சில மாதங்களுக்கு முன்னால் அந்தத் துறவி இன்னொரு துறவியுடன் என்ன பேசிக்கொண்டிருந்தார் என்பதைப் பார்”காட்சி விரிந்த போது இமயமலைச் சாரலில் ஆத்மானந்தா ஒரு வயது முதிர்ந்த துறவியின்முன் பணிவுடன் அமர்ந்தபடி பேசிக் கொண்டிருந்தார்.“குருதேவா, முடிந்த வரை பார்த்து விட்டேன். இனியும் மக்களைப் பெரிய அளவில் அன்பின் வழிக்குத் திருப்ப முடியும் எனத் தோன்றவில்லை. அடுத்து என்ன செய்வது?”“மகனே! என் சீடனாக வந்தாய். நான் தொடங்கிய மடத்தில் இணைந்து சேவை செய்தாய். அதன்பின் சாக்குபோக்கு சொல்லி உன்னை துரத்தினேன். ஏன் தெரியுமா? வெளியே சென்று மக்களை அன்பு வழியில் நடத்த புதுவழியை கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காகத்தான். அதை கடந்த நாற்பது ஆண்டுகளாக நன்றாகச் செய்து வந்திருக்கிறாய். இப்போது உன் தலைமை காலாவதியாகி விட்டது. உன் சீடர்களில் சிறந்தவனைத் தேர்ந்தெடு. அவனை உன் மடத்திலிருந்து துரத்து. அவன் நம் அன்பின் இயக்கத்தைத் தொடர்ந்து நடத்துவான்”ஆத்மானந்தா கவலையில் ஆழ்ந்தார்.“ஏன் உன்னிடம் நல்ல சீடன் யாருமில்லையா?”“இருக்கிறான். அனந்தானந்தா என்பது அவன் பெயர். சிறுவயதிலிருந்தே நான்தான் வளர்த்தேன். என் மீது அபரிமிதமான மரியாதை வைத்திருக்கிறான். நான் வெளியே போ எனச் சொன்னாலும் போகமாட்டான்”“அவனுக்கு வேறு வழிகளில் அழுத்தம் கொடு. தியானம், ஆன்மிக வளர்ச்சிக்கு இடையூறுகளை உண்டாக்கு. சுடுசொற்களை வீசு. ஒருநாள் அதைத் தாங்கமுடியாமல் மடத்தைவிட்டு வெளியேறுவான். அன்பின் வழியில் மக்களை நடத்த இன்னொரு இயக்கம் பிறக்கும். அதைத்தான் பச்சைப்புடவைக்காரி விரும்புவாள்.“மடங்கள், இயக்கங்கள் காலப்போக்கில் வலுவிழந்துவிடும். இல்லாவிட்டால் வழி தவறி விடும். அதனால்தான் இப்படி புதிய இயக்கங்களைத் தொடங்க வேண்டியிருக்கிறது”“நாளை இளம் துறவி உன்னைத் தேடி வருவான். மடத்தை விட்டு வெளியேறி புதிய மடத்தைத் தொடங்குவதுதான் என் விருப்பம் என்று சொல்”“உங்கள் ஆணை தாயே”“உனக்கும் ஒரு இயக்கத்தைத் தொடங்க வேண்டும் என ஆசை இருக்கிறதோ?”“சத்தியமாக இல்லை தாயே. காலமெல்லாம் கையில் கிளி தாங்கிய கோலக்கிளிக்குக் கொத்தடிமையாக இருக்கவே ஆசை. மனதில் வேறு எந்த ஆசையும் வராமல் இருக்க வரம் கொடுங்கள்”தாயின் சிரிப்பு அண்டமெல்லாம் எதிரொலித்தது.-தொடரும்வரலொட்டி ரெங்கசாமிvaralotti@gmail.com