உள்ளூர் செய்திகள்

அசுர வதம் - 30

பாணாசுரன் வதம்'கைய நாடு' என்ற நாட்டை ஆண்ட கசிய பிரஜாபதி என்பவரின் மகன்களில் ஒருவனான பாணாசுரன் பிரம்மனை வேண்டி தவமிருந்தான். மனமிரங்கிய பிரம்மன் அவன் முன் தோன்றிய போது, கன்னி ஒருவரால் மட்டுமே தனக்கு அழிவு ஏற்பட வேண்டும் என வரம் கேட்டான். பிரம்மனும் அதைத் தந்து மறைந்தார்.மென்மையான மனமும், உடலமைப்பு கொண்ட கன்னிப் பெண்ணால் தனக்கு அழிவு உண்டாகாது என நம்பிய பாணாசுரன், தன் அசுரக் குணத்தை வெளிப்படுத்தத் தொடங்கினான். காடுகளில் தவம் செய்யும் முனிவர்களை தாக்கினான். அசுரனுக்குப் பயந்த முனிவர்கள் தேவலோகத்திற்குச் சென்று இந்திரனிடம் சரணடைந்தனர்.முனிவர்களைப் பின் தொடர்ந்து தேவலோகம் சென்ற பாணாசுரன் அங்கிருந்த முனிவர்களை மட்டுமின்றி தேவர்களையும் கடுமையாகத் தாக்கினான். அதனைக் கண்டு கோபமடைந்த இந்திரன் படையுடன் சென்று பாணாசுரனுடன் போரிட்டான். வச்சிராயுதத்தால் அவனை அழிக்க முயன்றான். ஆனால் வச்சிராயுதம் பாணாசுரனை ஒன்றும் செய்யாமல் திரும்பி வந்தது. தப்பியோடிய இந்திரன் வைகுண்டத்தில் உள்ள திருமாலைச் சந்தித்து தன்னால் பாணாசுரனை அழிக்க முடியாததால் உதவும்படி கேட்டான். கன்னிப்பெண்ணால் மட்டுமே அவனை அழிக்க முடியும் என்பதால் பார்வதியிடம் உதவி கேள் என அனுப்பி வைத்தார். கைலாயம் சென்று உதவி கேட்க, பார்வதியும் தேவலோகத்தை மீட்டுத் தருவதாகச் சொன்னாள். இதை அறிந்த முனிவர்களும், தேவர்களும் பார்வதியை வேண்டி வேள்வி ஒன்றை நடத்தினர். அதன் முடிவில் சிவனும், பார்வதியுடன் காட்சியளித்து பாணாசுரனை அழிப்பதாக உறுதியளித்தனர். அதனைத் தொடந்து பார்வதி குமரிமுனையில் கன்னிப்பெண்ணாகப் பகவதி எனும் பெயரில் அவதரித்தார். அதனருகில் உள்ள சுசீந்திரம் எனுமிடத்தில் தாணுமாலயன் என்ற பெயரில் சிவன் தோன்றினார். அவரையே திருமணம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் பகவதியும் தவம் புரிந்தாள். பகவதியின் அழகில் மயங்கிய தாணுமாலயனும் திருமணத்திற்கு சம்மதித்தார். இதையறிந்த பெரியவர்கள் திருமணத்திற்கான நல்ல நாள் குறித்தனர். இதையறிந்த முனிவர்களும், தேவர்களும் கவலையடைந்தனர். கன்னிப் பெண் ஒருவரால் மட்டுமே அசுரனை அழிக்க முடியும் என்ற நிலையில் இருவரும் திருமணம் செய்தால் அசுரனைக் கொல்ல முடியாதே என ஆலோசனை செய்தனர். அப்போது அங்கு வந்த நாரதர் திருமணம் நடக்காமல் தான் பார்த்துக் கொள்வதாகத் தெரிவித்தார். அதன்படி நாரதர் சுசீந்திரம் சென்று தாணுமாலயனிடம், “தாங்கள் குறித்து வைத்திருக்கும் திருமண நாளன்று, சூரியன் உதிக்கும் முன்பே பகவதியைத் திருமணம் புரிய வேண்டும். இல்லாவிட்டால் உலகிற்கே ஆபத்து நேரும் என்றார்” என எச்சரித்தார். நாரதரின் அறிவுரையை ஏற்ற தாணுமாலயனும், அப்படியே செய்வதாக உறுதியளித்தார். திருமணத்திற்கு முதல் நாள் இரவு, தாணுமாலயன் ஊர்ப் பெரியவர்களுடன் சேர்ந்து சீர்வரிசைப் பொருட்களுடன் சுசீந்திரத்தில் இருந்து புறப்பட்டார். தாணுமாலயன் புறப்பட்ட செய்தி அறிந்த பகவதியும் மகிழ்ச்சியடைந்தார். திருமணம் நடந்து விட்டால் அசுரனைக் கொல்ல முடியாமல் போகுமே, நாரதரை நம்பி ஏமாந்தோமே என முனிவர்களும், தேவர்களும் வருத்தமடைந்தனர். தாணுமாலயன் விடிவதற்கு முன்பாகவே தான் கொண்டு வந்த சீர்வரிசைப் பொருட்களுடன் குமரிமுனைப் பகுதிக்கு வந்தார். அப்போது அங்கு வந்த நாரதர், சேவலாக மாறிக் கூவினார். அதனைக் கேட்ட தாணுமாலயன் பொழுது புலர்ந்து விட்டதே, தான் வர தாமதமாகி விட்டதே என எண்ணி வருந்தினார். பின்னர் அவர் சீர்வரிசைப் பொருட்களை அங்கேயே விட்டுவிட்டு, சுசீந்திரத்திற்குத் திரும்பினார். தாணுமாலயன் சுசீந்திரம் திரும்பிச் சென்ற செய்தியறிந்த பகவதி கோபமடைந்தார். தாணுமாலயன் கொண்டு வந்த சீர்வரிசைப் பொருட்களையும், உணவுப் பொருட்களையும் கண்டு கோபமடைந்தார். அந்த பொருட்களை எல்லாம் கடல் மணற்பரப்பில் வீசி எறிந்தார். அப்படியும் கோபம் தணியாமல் குறுக்கும் நெடுக்குமாக அலைந்தாள். அவள் உடல் முழுவதும் நெருப்புப் பிழம்பாக மாறியது. அந்த நேரத்தில் அங்கு வந்த பாணாசுரன் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி தெரிவித்தான். பகவதி முடியாது என மறுத்தாள்.ஆனால், பாணாசுரன் அவளருகே நெருங்கிச் சென்றான். அதைக் கண்ட பகவதி, கோபத்தின் உச்சிக்கேச் சென்றாள். அவளது உருவம் ஓங்கி வளர்ந்தது. தன் முன்பாக நின்ற பாணாசுரனை எட்டி உதைக்க கீழே சரிந்தான். காலடியில் விழுந்த பாணாசுரனின் நெஞ்சில் காலை வைத்து அழுத்தினாள். தன்னை விடுவித்துக் கொள்ள அவன் செய்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. அப்போதுதான் அவனுக்கு, பிரம்மனிடம் பெற்ற வரம் நினைவுக்கு வந்தது. தான் அழியப் போகிறோம் என புரிந்தது. தன் இரு கைகளாலும் பகவதியை வணங்கியபடி உயிரை விட்டான். அசுரனின் அழிவைக் கண்ட முனிவர்கள், தேவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். பின்னர், பகவதியை அமைதிப்படுத்தும் முயற்சியாக மலர்களைத் துாவி நன்றியை தெரிவித்தனர். கோபம் தணிந்த பகவதி அங்கேயே கன்னி பகவதி அம்மனாகக் கோயில் கொண்டார். மற்றொரு பாணாசுரன்பகவதியால் கொல்லப்பட்ட பாணாசுரனைப் போல இன்னொரு பாணாசுரனும் இருந்திருக்கிறான். அவன் வேறு யாருமல்ல. மகாபலி சக்கரவர்த்தியின் நுாறு மகன்களில் மூத்தவனான பாணாசுரன். சிவபக்தனான அவன் ஆயிரம் கைகள் கொண்டவன். நிரந்தரமாக வாழும் சிரஞ்சீவி வரம் பெற்றவன். தேவதச்சனான விஸ்வ கர்மாவால் நிறுவப்பட்ட சிவனின் ரசலிங்கத்தை வழிபாடு செய்த அவன் சிவ தாண்டவத்தின் போது தன் ஆயிரம் கைகளால் மிருதங்கத்தை இசைத்துச் சிவனிடம் வரம் பெற்று அவரது சிவகணங்களில் ஒருவராகும் பேறு பெற்றான். பாணாசுரனின் மகள் உஷா, பகவான் கிருஷ்ணரின் பேரனான அனிருத்தை தன் மாய சக்தியால் துவாரகையில் இருந்து தன் இருப்பிடத்திற்கு வரவழைத்தாள். நடந்ததை அறிந்த கிருஷ்ணர், அவனை உஷாவிடம் இருந்து விடுவிக்குமாறு கோரிக்கை வைத்தும் பலனில்லை. இதனால் ஏற்பட்ட சண்டையில், பாணாசுரனின் ஆயிரம் கைகளில் இரண்டு கைகளைத் தவிர்த்து மீதமுள்ள கைகளை வெட்டினார் கிருஷ்ணர். ஆனால் சிவனின் தலையீட்டால் அசுரனை மன்னித்தார் கிருஷ்ணர். இதன்பின் பாணாசுரனின் மகள் உஷாவிற்கும், கிருஷ்ணனின் பேரன் அனிருத்துடன் திருமணம் நடந்தது.-தொடரும்தேனி மு.சுப்பிரமணி99407 85925