வாக்கை காப்பாற்றுங்க
சந்திர வம்சத்தைச் சேர்ந்த மன்னன் தர்ம குப்தன். வேட்டைக்கு சென்ற போது வழி தவறி தன்னுடன் வந்த வீரர்களை விட்டுப் பிரிந்தான். வேறு வழியின்றி ஒரு ஆலமரத்தின் மீதேறி அமர்ந்தான். அப்போது அங்கு சிங்கம் ஒன்று, கரடியை விரட்டி வந்தது. அந்த கரடி மரத்தின் மீதேறியது. அதைக் கண்டு மன்னன் நடுங்கினான். “மன்னா! பயப்படாதே. நானும் உன்னுடன் மரத்தில் இருக்கிறேன். நள்ளிரவு வரை, நீ என் மடியில் துாங்கு. அதன் பின், நான் உறங்குகிறேன். விடிந்ததும் கீழே நிற்கும் சிங்கம் ஏமாற்றத்துடன் ஓடி விடும். அதன் பின் இறங்குவோம்'' என்றது கரடி.கரடி விழித்திருக்க மன்னன் அதன் மடியில் தலை வைத்து துாங்கினான். நயவஞ்சகத்துடன் சிங்கம், ''கரடியே! மன்னனைக் கீழே தள்ளினால், பசியால் வாடும் நான் உணவாக்கி மகிழ்வேன். உனக்கும் என்னால் ஆபத்து நேராது” என்றது. கரடி அதற்கு சம்மதிக்கவில்லை. நள்ளிரவில் மன்னன் கண் விழித்ததும், கரடி துாங்க ஆரம்பித்தது. ஆனாலும் சிங்கம் தன் முயற்சியைக் கைவிடவில்லை.“மன்னா! நான் சொல்வதைக் கேள். கரடியைக் கீழே தள்ளி விடு. நான் பசியாறுவேன். அதன் பின் நீயும் பயமின்றி இறங்கலாம்” என்றது சிங்கம். சம்மதித்த மன்னன் கரடியைத் தள்ள முயற்சித்தான். ஆனால் கண் விழித்த கரடி சுதாரித்துக் கொண்டது. இறுக்கமாக ஒரு மரக்கிளையைப் பற்றியது. ''வாக்கை காப்பாற்றாத நீ பாவி! இந்த காட்டில் பைத்தியமாகத் திரிவாய்'' என சபித்தது கரடி. பின்னர் கீழே இறங்கிய கரடி ஒரு முனிவராக மாறியது. “சிங்கமே! என் பெயர் தியானகஸ்தர். தவசக்தியால் நினைத்த வடிவெடுக்கும் சக்தி எனக்கு உண்டு. என்னைப் போய் உணவாக்க முயற்சிக்கிறாயே. கவுதம முனிவரின் சாபத்தால், குபேரபுரியின் கந்தர்வனான நீயும் காட்டில் சிங்கமாக திரிகிறாய். சுயவடிவம் பெறுவாய்” என்ற உண்மையைச் சொல்லி விட்டு மறைந்தது. சிங்கமும் யட்சனாக மாறினான். தியானகஸ்தரும், யட்சனும் அங்கிருந்து மறைந்தனர். பொழுது விடிந்தது. தேடி வந்த வீரர்கள் மன்னன் தர்மகுப்தனைக் கண்டனர். அவன் பைத்தியமாக இருப்பதை உணர்ந்து ஜெய்மினி முனிவரின் உதவியை நாடினர். ''திருப்பதி மலையில் உள்ள சுவாமி புஷ்கரணி குளத்தில் நீராடி ஏழுமலையானைத் தரிசிக்க துன்பம் தீரும்” என்றார். தர்ம குப்தனும் நீராடி ஏழுமலையான் மகிமையால் சுய உணர்வு பெற்று கோயிலுக்கு திருப்பணிகள் செய்தான். ஆட்சியாளர்கள் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும்.