உள்ளூர் செய்திகள்

பச்சைப்புடவைக்காரி - 19

 தாயின் பிரச்னைஅந்த அரசு அலுவலகத்தில் வேலையை முடித்துக்கொண்டு வந்தபோது ஒரு பெண் வழிமறித்தாள்.“ஒரு உதவி...''“முடியாது. வழிய விடுங்க”“ஏனப்பா கோபம்? உனக்கு பிரச்னை என்றால் ஓடி வருகிறாய் அல்லவா? இப்போது எனக்கு ஒரு பிரச்னை என வந்தால்...''“தாயே” என காலில் விழுந்தேன்.“வார்த்தையால் கொல்லாதீர்கள் தாயே”“ஒரு பெண்ணின் கர்மக் கணக்கு சொதப்பலாக இருக்கிறது. இப்போது அவள் மனதில் அன்பு சுரக்க வேண்டும். அதனால் ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அவளுக்கு நெருக்கமானவர் யாராவது இறந்து விடுவார்கள்”“நான்... இதில்...''“அவள் கோபக்காரி. உதவி கேட்டால் சீறுவாள். எனக்காக எல்லாப் பேச்சையும் வாங்கிக் கொண்டு அவளை நன்மை செய்ய வைத்துவிடவேண்டும்”“அவள் யார்... எங்கே...''“உன்னிடம் உதவி தேடி வருவார்கள். அவர்கள் சார்பில் அந்தப் பெண்ணை நீ பார்க்க வேண்டும். விபரம் தன்னால் தெரிய வரும்”தாய் அங்கிருந்து மறைந்து விட்டாள்.மறுநாள் என்னைப் பார்க்க ஒரு தாயும் மகனும் வந்தனர். “ஐயா என் புருஷன் ஒரு கம்பெனியில டிரைவரா வேலை பாத்தாரு. போன மாசம் ஒரு விபத்துல இறந்துட்டாரு. சட்டப்படி இழப்பீடு கொடுத்திட்டாங்க. என் மகனுக்கு ஒரு வேலையும் தந்தாங்கன்னா''இதை ஏன் என்னிடம் கேட்கிறாள்? அந்த நிறுவனத்திடமே கேட்பது தானே?“என் புருஷன் குடிச்சிட்டு வண்டி ஓட்டினதாலதான் விபத்தே நடந்தததா சொல்றாங்க. ஒரு குடிகாரன் பிள்ளைக்கு என் கம்பெனில வேலை தரமாட்டேன்னு எம்.டி., அம்மா சொல்லிட்டாங்க. நீங்க ஏதாவது சிபாரிசு...'' நானா? எனக்கு யாரைத் தெரியும்? பச்சைப்புடவைக்காரி சொன்னது நினைவிற்கு வர, அந்த நிறுவனம் சம்பந்தமான விபரத்தை வாங்கி விட்டு அனுப்பினேன். நண்பர் மணியை அழைத்து விபரம் சொல்லி உதவ முடியுமா எனக் கேட்டேன்.“ஐயோ! அந்தம்மாவோட பேச முடியாது. ஒண்ணு செய்யறேன். அவங்க கிட்ட ஒரு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கித் தர்றேன்.”“அப்புறம்...'' “அப்புறம் நம்ம ஊர்ல சொல்ற மாதிரி, 'மகனே உன் சமர்த்து'”மதுரைக்கு வெளியில் இருந்த அந்த தனியார் கம்பெனிக்குள் நுழைய பல கட்டுப்பாடுகள். அலைபேசியை வாங்கிக் கொண்டனர். காரை துாரத்திலேயே நிறுத்தச் செய்தார்கள். விமானப் பயணம் போல் பாதுகாப்பு சோதனை நடந்தது. என்ன விஷயமாக தலைவியைப் பார்க்க வேண்டும் என எழுதித் தரச் சொன்னார்கள். தலைவியின் உதவியாளர் என்னை நேர்காணல் செய்து ஒரு மணி நேரம் காக்க வைத்த பிறகு அனுமதித்தார்.தலைவிக்கு நாற்பது வயது இருக்கும். வெறுப்பாக வணக்கம் சொன்னாள். “உங்களப் பத்தி கேள்விப்பட்டிருக்கேன். தொழில், எழுத்துல நல்ல பேர் வாங்கியிருக்கீங்க.”அப்பா! வேலையை எளிதாக முடிக்கலாம் என நினைத்தேன். “அப்படிப்பட்ட ஆளு ஒரு குடிகாரனோட குடும்பத்துக்காக சிபாரிசு செய்ய வந்தத ஏத்துக்க முடியல?”தலைவி குரலை உயர்த்தினாள். எனக்கு கோபம் வந்தாலும் காரியம்தான் பெரிது என அமைதி காத்தேன்.“அப்பன் குடிச்சிட்டு வண்டி ஓட்டினான். அநியாயமாச் செத்தான். சட்டப்படி அவனுக்குச் சேரவேண்டிய தொகையை பைசா குறையாம கொடுத்துட்டோம். அதுக்கப்பறமும் அவங்க எதிர்பார்த்தா அது பேராசை இல்லையா?”“அவர் பையனுக்கு ஒரு வேலை...'' “என்ன சார் விளையாடறீங்களா? இது கவர்மெண்ட் கம்பெனி இல்ல, கருணை அடிப்படையில வேலை கொடுக்க. நான் தகுதி அடிபடையிலதான் வேலை கொடுப்பேன்”“அந்தப் பையன் படிப்புக்கும் தகுதிக்கும் ஏத்த மாதிரி…''“என்ன பெரிசா படிச்சான்? இன்ஜினியரிங் முடிச்சிருக்கான். தகுதின்னு பாத்தா பெரிய குடிகாரனுடைய மகன்”“அப்பா குடிச்சாருனா பையனும் குடிப்பானா...''“அது அவன் மரபணுவிலேயே இருக்கும். இப்போ இல்லாட்டியும் பத்து ஆண்டு கழிச்சிக் குடிக்கத்தான் செய்வான்”தொடர்ந்து அவமானப்பட்டுக் கொண்டேயிருந்தேன். போடி போக்கத்தவளே எனக் கத்திவிட்டு வெளியேற நினைத்தேன். பச்சைப்புடவைக்காரியின் வார்த்தை மனதில் நிழலாடியது. பலவீனமான குரலில், “தலைவன இழந்து தவிக்கிற குடும்பத்துக்கு கருணை காட்டுங்கன்னு கேக்கவே வந்தேன்''“உங்களுக்கு புத்தி குழம்பிப் போச்சா? கருணை காட்டற அளவுக்கு அந்தக் குடும்பத்துக்கு தகுதியில்ல சார்”என் கண்கள் பொங்கின. பச்சைப் புடவைக்காரி கொடுத்த வேலையை முடிக்க அவமானத்திலேயே சாக வேண்டியிருந்தாலும் கவலையில்லை என உறுதி மனதில் பிறந்தது. “அவங்களுக்குத் தகுதி இருக்கான்னு சோதிச்சிப் பாத்துட்டு கருணை காட்டினா அது கருணை ஆகாது மேடம். அது நீதி. தகுதியில்லாதவங்க கழுத்துல போடும் போதுதான் கருணைங்கற அந்த வைர அட்டிகை இன்னும் அதிகமா ஜொலிக்குது. இதப் புரிஞ்சிக்கிட்டா போதும்”நான் எழுந்து நின்றேன். என் வார்த்தைகள் தலைவியை உலுக்கி விட்டன எனப் புரிந்தது. “ஒரு நிமிஷம், சார். உட்காருங்க, ப்ளீஸ்''“ பத்தாயிரம் கோடி ரூபாய் கம்பெனிய நடத்தறீங்க. ஒவ்வொரு மாசமும் நிறைய ஆள வேலைக்கு எடுக்கறீங்க. கூட ஒரு ஆள எடுத்தா குறைஞ்சா போயிருவீங்க?. அந்தக் குடிகாரன் மகனக் கசக்கிப் பிழியற மாதிரி வேலை கொடுங்க. அதயும் தாங்கி நின்னான்னா நல்ல ஊழியன் கிடைச்ச மாதிரி ஆச்சு”“பாதியிலயே விட்டு போயிட்டான்னா...''“கவலைய விடுங்க. நீங்க செய்யவேண்டியதச் செஞ்சாச்சு. உங்க கர்மக்கணக்கு நேராயிரும். பல வருஷமா தேடுற மன நிம்மதி கெடச்சிரும்.”“நான் வேலை கொடுக்கறேன். மாசம் நாற்பதாயிரம் சம்பளம் தருவேன். ஆனா ஒரு நிபந்தனை”“சொல்லுங்க”“மாசம் ஒரு தரம் நீங்க என்னப் பாக்க வரணும். பச்சப்புடவைக்காரியோட அன்பப் பத்திப் பேசணும். அதுக்கு நீங்க என்ன பில் போட்டாலும் தந்துடறேன்”“அது மாதிரி பச்சைப்புடவைக்காரி நமக்கு பில் போட்டா இந்தப் பிரபஞ்சமே தாங்காது மேடம். உங்க நிபந்தனைய ஏத்துக்கறேன். உதவி செஞ்சதுக்கு ரொம்ப நன்றி”நிறுவன வாசலில் இருந்த ஒரு பெண் ஊழியை குறும்புச் சிரிப்புடன் கேட்டாள்.“சாதித்து விட்டாயே!”பச்சைப்புடவைக்காரியை விழுந்து வணங்கினேன்.“இது நீங்கள் அவளுக்குச் செய்த உதவி இல்லை, தாயே! எனக்குச் செய்தது. நான் அகம்பாவத்தால் ஆடக் கூடாது என்பதற்காகத்தானே என்னை அவளிடம் அப்படி பேச்சு கேட்க வைத்தீர்கள்?”சிரித்தபடி மறைந்தாள் அந்தச் சிங்காரி. -தொடரும்வரலொட்டி ரெங்கசாமிvaralotti@gmail.com