உள்ளூர் செய்திகள்

மீண்டும் பச்சைப்புடவைக்காரி (10)

பிரச்னை வந்தால் அர்ச்சனை“பச்சைப்புடவைக்காரி தான் எல்லாம்னு அவ காலடில சரணடைஞ்சிட்டேன். அலுவலகம், வீடு, பணம், மனம் என எல்லா பக்கத்திலும் பிரச்னை. பல்லைக் கடிச்சிக்கிட்டு இருந்தேன். இன்னிக்குக் காலையில ஒருவர், தனது இரு சக்கர வாகனத்தை என் மீது மோதினான். கால் எலும்பு உடைஞ்சி போச்சு. ஒன்பது மணிலருந்து வலியால கதறிக்கிட்டு இருக்கேன்யா. தயவு செஞ்சி இனிமே பச்சைப்புடவைக்காரி கருணைக்கடல், நமக்கெல்லாம் அம்மா மாதிரின்னு எழுதாதீங்க. எல்லாம் பொய். பத்திக்கிட்டு வருது. அவ கொடுமைக்காரி. ராட்சசி” கண் கலங்கும் வரை வசை பாடினார் நண்பர். “எங்க இருக்கீங்க?”மறுபக்கத்திலிருந்து பதில் வருவதற்குள் யாரோ ஒருவர் என் போனைத் தட்டிப் பறித்தார். கோபத்துடன் நிமிர்ந்தேன். “நவாப்பழம் வாங்குறீங்களான்னு பத்து நிமிஷமா கேட்டுக்கிட்டு இருக்கேன். என்னைக் கவனிக்காம அப்படி என்ன சாமி பேச்சு வேண்டியிருக்கு?”கோபம் எகிறியது. பழக்காரி பச்சைப்புடவைக்காரியாக மாறி புன்னகைத்தாள். போன் விழுந்ததைக் கூட கவனிக்காமல் அன்னையின் காலில் விழுந்தேன்.“பிரச்னை வந்தால் அர்ச்சனை செய்யும் ரகம் அவன்.”“அர்ச்சனையா? உங்களை வாய்க்கு வந்தபடி வசை பாடுகிறான்.. அதை அர்ச்சனை என்று...''“எனக்கு எல்லாம் ஒன்று தான்.”“அவனைப் பார்த்து நாக்கைப் பிடுங்கறது மாதிரி நாலு கேள்வி.. .”“வேண்டாம். அவன் வலியில் துடிக்கிறான். இந்நிலையில் சந்தித்தால் இன்னும் திட்டுவான். நீ அழுவாய்.”“நான் என்ன செய்யட்டும், தாயே?”“நான் சொல்லும் போது பார்க்கப் போ. அப்போது உன்னை நானே பேச வைக்கிறேன்.”இரண்டு வாரம் கடந்தது. அன்று வெள்ளிக்கிழமை. இன்றாவது பச்சைப் புடவைக்காரியைப் பார்த்துப் பேச முடியுமா என மனதில் ஒரு ஏக்கம். அலுவலகத்தைப் பூட்டிக் கொண்டு கிளம்பியபோது அலைபேசி சிணுங்கியது.“என்ன சார்... எத்தனை நாளாச்சு! என்னைப் பார்க்க கூட வரலையே?”அதே பிரச்னை - அர்ச்சனைப் பிரமுகர் தான்.“இப்ப வீட்டுல தானே இருக்கீங்க? உடனே வரேன்.”“இப்ப வராதீங்க சார். பிசியோதெரபி ஆளு வர்ற நேரம். உங்களால எட்டு மணிக்கு வர முடியுமா?”“நிச்சயமா.”காரில் ஏற சாலையைக் கடந்தேன். இரு சக்கர வாகனம் ஒன்று வேகமாக வந்து அருகில் நின்றது.“இப்போதே அவன் வீட்டுக்குப் போ.”“நீங்கள்?”“என்னைப் பார்த்துப் பேச வேண்டும் என யாரோ ஆசைப்பட்டார்களே?”“தாயே!”“நானே தான். இன்னும் அரை மணிநேரத்தில் நீ அங்கு இருக்க வேண்டும்.”நண்பரின் வீட்டை அடையும் போது மணி ஏழேகால்.. வீட்டுக் கதவு திறந்திருந்தது. உள்ளே நுழைந்தேன். வரவேற்பு அறையை ஒட்டியிருந்த படுக்கையறையில் நண்பரின் குரல் கேட்டது. உள்ளே நுழைந்தேன்.ஒரு பெண் பிசியோதெரபிஸ்ட் நண்பரின் கால்களை மடக்கி நீட்டிப் பயிற்சி கொடுத்தபடி இருந்தாள்.வலி தாளாமல், “ஐயோ! அம்மா! வலி உயிர் போகுதே!” என கத்தினார் நண்பர். அவரது மனைவியின் கண்களில் கண்ணீர். பயிற்சி கொடுத்த பெண்ணின் முகத்தில் ஒரே புன்னகை. அப்போது தான் அவளைத் தீர்க்கமாகப் பார்த்தேன். நண்பரின் புலம்பலைக் காதில் வாங்காமல் பயிற்சியை லாவகமாகச் செய்தபடி நின்றாள். பல வருட அனுபவம் போலும்! என்னைப் பார்த்துச் சிரித்தாள். நண்பர் இன்னும் அதிகமாக அலறினார்.“ரொம்ப வலிக்குதுன்னா நிறுத்தட்டுமா? நாளைக்குப் பாத்துக்கலாம்.”இனிய குரலில் நண்பரைக் கேட்டாள்.“வேண்டாம்மா! வலி ஜாஸ்தியா இருந்தா தான் சீக்கிரம் நடக்கமுடியும்னு டாக்டர் சொல்லிருக்காரு. நான் பாட்டுக்குக் கத்திக்கிட்டு இருக்கேன். நீ உன் வேலையப் பாரு.”சொல்லிவிட்டு என்னைப் பார்த்தார் நண்பர்.“உங்களை எட்டு மணிக்கு வரச் சொன்னதா ஞாபகம்.”“இந்தப் பக்கம் ஒரு வேலை இருந்தது. அதுதான்..”“அம்மா வலிக்குதே! வலி உயிர் போகுதே! இதுக்குப் பதிலா செத்துரலாம் போலயே!”“இன்னிக்கு இதோட போதுமா சார்?” அவள் மீண்டும் கேட்டாள். “நான் நிறுத்தச் சொன்னாலும் நிறுத்தாதம்மா. எட்டு மணி வரைக்கும் பண்ணு.” நண்பர் கத்தினார்.ஒரு வழியாகப் பயிற்சி முடிந்தது.“வாம்மா சக்தி, ஒரு காபி போட்டுத் தரேன்.” நண்பரின் மனைவி அப்பெண்ணை அன்புடன் அழைத்தாள்.“சக்திக்கு இன்னிக்கு நுாறு ரூபா சேத்துக்கொடு மாலதி. பாவம் ரொம்பக் கத்திக் கஷ்டப்படுத்திட்டேன்.'' நண்பரின் குரலில் இன்னும் அன்பு.சக்தி என்னைக் கடந்த போது எனக்கு மட்டும் கேட்கும்படியாக “ம் ஆரம்பமாகட்டும்” எனச் சொல்லி விட்டுச் சென்றாள். உடம்பு சிலிர்த்தது. உண்மை புலப்பட்டது. அங்கு நானும், நண்பரும் மட்டும் தான் இருந்தோம். நண்பர் என்னைப் பார்த்துச் சிரித்தார். நான் சீறினேன்.“மிஸ்டர் ராமச்சந்திரன்! பிசியோதெரபிங்கற பேர்ல இந்தப் பொண்ணு உங்களுக்கு எவ்வளவு வலியக் கொடுத்தா? உங்கள எப்படி கதற விட்டா? வலி, வலின்னு அலறினீங்க, இல்லையா? வலிச்சா நிறுத்திரட்டுமான்னு கூட கேட்டப்ப, 'நான் பாட்டுக்குக் கத்திக்கிட்டே இருக்கேன். நீங்க உங்க வேலையப் பாருங்க'ன்னு சொன்னீங்க? ஏன் சார்?”“என்ன சார் புரியாமப் பேசறீங்க? பிசியோதெரபி செஞ்சாத்தானே காலு குணமாகும். நான் சீக்கிரமா நடக்கலாம். பழையபடி வேலைய பாக்கலாம். எவ்வளவுக்கு எவ்வளவு வலி அதிகமா இருக்கோ அவ்வளவுக்கு நல்லதுன்னு டாக்டர் சொல்லியிருக்காரு”“டாக்டரும் பிசியோதெரபிஸ்டும் வலியக் கொடுத்தா அது உங்கள குணமாக்கறதுக்கு. ஆனா பச்சைப்புடவைக்காரி வலியக் கொடுத்தா அது பழி வாங்கறதுக்கு. நல்லா இருக்கு சார் நியாயம்!”நண்பர் நிமிர்ந்து என்னையே வெறித்துப் பார்த்தார். நான் விடுவதாக இல்லை. அன்று பச்சைப்புடவைக்காரியைப் பழித்து அழ வைத்தாய் அல்லவா! இன்று நீ அழும் வரை ஓய மாட்டேன். பிசியோதெரபிஸ்ட் வலியக் கொடுத்தா அவளுக்கு சூடான காபி. அது போக நுாறு ரூபாய் எக்ஸ்ட்ரா. பச்சைப்புடவைக்காரி வலியக் கொடுத்தா அவளுக்குக் கொடுமைக்காரி பட்டம். இது எந்த ஊரு நியாயம் சார்?”நண்பருக்கு கண்ணீர் அரும்பியது.“பிசியோதெரபிஸ்ட் கொடுக்கற வலி நோய மட்டும் தான் குணப்படுத்தும். பச்சைப்புடவைக்காரி கொடுக்கற வலி உன் பிறவி நோயவே குணப்படுத்திரும்யா. அந்த மகா மருத்துவச்சி கால்ல விழுந்து கதறாம திட்டிக்கிட்டு இருக்கியே.. நீ ஒரு மனுஷனா?”“உன் பிசியோதெரபிஸ்ட் சக்திய நம்பற அளவுக்கு அந்தப் பராசக்திய நம்ப மாட்டேங்கறியே!”நண்பர் அழ ஆரம்பித்தார். அவர் அருகில் அமர்ந்து அன்னையின் அன்பை விளக்க ஆரம்பித்தேன்.அந்த பிசியோதெரபிஸ்ட் போகும் போது என்னைப் பார்த்து புன்முறுவல் பூத்து என் பிறவி நோய்க்கு மருந்து கொடுத்து விட்டுப் புறப்பட்டாள்.நண்பரின் அழுகை நின்று விட்டது. என் அழுகை தொடங்கி விட்டது.இன்னும் வருவாள்தொடர்புக்கு: varalotti@gmail.comவரலொட்டி ரெங்கசாமி