உள்ளூர் செய்திகள்

இரவினில் ஆட்டம்

ஹாதிராம் பாவாஜி என்னும் துறவி திருப்பதி மலையிலுள்ள காட்டில் தங்கியிருந்தார். அவரது பக்தியைக் கண்டு வியந்த ஏழுமலையான் அவரை சந்திக்க விரும்பினார். ஒருநாள் இரவு அர்த்தஜாம பூஜை முடிந்து நடையை சாத்தியதும் கிளம்பிய ஏழுமலையான் துறவியின் குடிலை அடைந்தார். சுவாமியைக் கண்டதும், 'பாலாஜி' எனக் கூவினார் பாவாஜி. ஏழுமலையானுக்கு பழங்கள் கொடுத்து உபசரித்தார். “எப்போதும் பக்தர் கூட்டம், பூஜை, புனஸ்காரம் என்றே பொழுது கழிகிறது. விளையாட்டாக பேசி மகிழவே இங்கு வந்தேன். இருவரும் சொக்கட்டான் விளையாடலாமா” எனக் கேட்டார். 'இதை விட வேறு பாக்கியம் என்ன வேண்டும்' என பகடைகளை எடுத்து கொடுத்தார் பாவாஜி. இருவரும் விளையாட பொழுது போனதே தெரியவில்லை. அதிகாலையில் கோயிலில் சுப்ரபாத சேவைக்காக பட்டாச்சாரியார்கள் தயாராயினர். “ஆகா! பொழுது புலர்ந்து விட்டதே. கோயிலுக்கு கிளம்புகிறேன். இன்றிரவு சந்திக்கலாம்” என மறைந்தார் ஏழுமலையான். பகலில் கோயிலில் இருப்பதும், இரவில் பாவாஜியின் குடிலுக்குச் செல்வதும் தொடர்கதையானது. ஒருநாள் பாவாஜியின் பக்தியை உலகறியச் செய்ய விரும்பிய ஏழுமலையான், தன் ரத்தின மாலையை குடிலில் விட்டுச் சென்றார். சுவாமியின் கழுத்தில் மாலை இல்லாததைக் கண்ட பட்டாச்சாரியார்கள் பதட்டம் அடைந்தனர். மன்னர் கிருஷ்ண தேவராயருக்கு செய்தி போனது. திருடனைக் கண்டுபிடிக்க உத்தரவிட்டார் மன்னர். குடிலில் கிடந்த ரத்தினமாலையை கண்ட பாவாஜி கோயிலில் ஒப்படைப்பதற்காக புறப்பட்டார். அவரைக் கண்ட காவலர்கள் மன்னரிடம் அழைத்துச் சென்றனர். தினமும் இரவு ஏழுமலையான் விளையாட வந்ததையும், வந்த இடத்தில் மாலையை விட்டுச் சென்றதையும் தெரிவித்தார். “ நாங்கள் வைக்கும் சோதனையில் வெற்றி பெற்றால் மட்டுமே உம்மை நம்புவோம். அதற்காக ஒரு கட்டு கரும்பு தரப்படும். இன்றிரவுக்குள் அதைக் காலி செய்ய வேண்டும்” என்றார் மன்னர். அதன்படி கரும்புக் கட்டுடன் பாவாஜி சிறையில் அடைத்தனர். அங்கு ஏழுமலையான் அருளால் யானை ஒன்று தோன்றி கரும்புகளை தின்றது. யானை இருப்பதைக் கண்ட காவலர்கள் ஆச்சரியப்பட்டனர். மன்னரும் பாவாஜியை விடுவித்தார்.