கீதை பாதை - 12
பாம்பும் கயிறும்'சத்தியம் ஒருபோதும் அழியாது. எப்போதும் நிலைத்திருக்கும்; ஆனால் பொய் உடனே அழிந்து விடும்' என்கிறார் பகவான் கிருஷ்ணர். ஞானத்தால் மட்டுமே இதை உணர முடியும் என்றும் கூறுகிறார்.மெய்யையும், பொய்யையும் நமக்கு புரிய வைக்க 'பாம்பும் கயிறும்' உவமைப்படுத்தப்படுகிறது. அதிகாலை நேரத்தில் ஒருவன் வீட்டிற்கு வந்த போது, வாசலில் ஒரு பாம்பு கிடந்தது. உண்மையில் அது ஒரு கயிறு தான். குழந்தைகள் விளையாடி விட்டு அங்கே விட்டுச் சென்றனர். விடிந்தும், விடியாத பொழுதில் அவன் பார்வைக்கு பாம்பு போல அது தோற்றமளித்தது. இங்கு கயிறு நிஜம். பாம்பு என்பது அதன் பொய் தோற்றம். நிஜமானதை (கயிறு) புரிந்து கொள்ளும் தருணம் வரை, நிஜமற்றதை (பாம்பு) எப்படி எதிர்கொள்வது என அந்த மனிதன் நினைத்துக் கொண்டிருந்தான். அதைக் கம்பால் அடிக்கலாம் அல்லது அங்கிருந்து அவன் ஓடி விடலாம் அல்லது ஒரு டார்ச்சின் மூலம் உண்மையைக் கண்டுபிடிக்கலாம்.நிஜமற்றதையே நம்பிக் கொண்டிருந்தால், நமது திறன்கள், முடிவெடுக்கும் திறன் எல்லாம் காணாமல் போய்விடும். உண்மையில் இருந்து தான் பொய் உருவெடுக்கிறது. கயிறு என்ற நிஜத்தில் இருந்து தான் பாம்பு என்ற நிஜமற்ற கற்பனை பிறக்கிறது. இரவில் துாக்கத்தில் ஒரு கெட்டகனவு காண்கிறோம். அதனால் நம் உடல் வியர்க்கிறது. கனவு என்பது நிஜமற்றது என்றாலும், நிஜமாகவே நம் உடல் வியர்த்து மாற்றம் ஏற்படுகிறது அல்லவா. இப்படித்தான் சத்தியமற்ற செயல்கள் நம்மை ஆட்டுவிக்கும்.'சத்தியமற்றது (பொய்) நிரந்தரமல்ல; அது இறந்த காலத்திலும் இல்லை, எதிர்காலத்திலும் இல்லை' என்கிறார் கிருஷ்ணர். உதாரணத்திற்கு சிற்றின்பம், சிறுவலி போன்றவை முன்பும் இருக்காது; பின்பும் இருக்காது. அவை அந்த நேரத்திற்கானது மட்டுமே. இப்படி சத்தியமற்றவை அந்த நேரத்தோடு போய்விடும், அது நிரந்தரம் அல்ல. சத்தியமே எப்போதும் நிரந்தரம். நம் உள்மனதே உண்மையானது. உள்மனதை உணர்ந்து, நிலையான சத்தியத்துடன் கடவுளிடம் சரணடைந்தால், சத்தியமற்றவை காணாமல் போய் விடும். -அடுத்த வாரம் முற்றும்கே.சிவபிரசாத், ஐ.ஏ.எஸ்.,- தமிழாக்கம்: ஜி.வி.ரமேஷ் குமார்