உள்ளூர் செய்திகள்

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 41

சத்யவான் சாவித்ரிசத்யவானின் ஆயுள் இன்னும் ஓராண்டு என நாரதர் கூறியதைக் கேட்டு சாவித்ரி கலக்கமுற்று, ''சுவாமி... தாங்கள் இதை சொல்வதன் நோக்கத்தை அறியலாமா'' என்று கேட்டாள்.''அவன் அற்ப ஆயுள்காரன். அவனை மணந்தால் கைம்பெண் ஆவாய்'' ''மற்றபடி அவரது குணநலனில் கோளாறு ஏதுமில்லை தானே''''குணத்தில் தங்கம். வைரம் பாய்ந்த நெஞ்சமும் கூட! கருணையாளன். அதனாலேயே குருடாகி விட்ட பெற்றோரை கனிவோடு காப்பாற்றி வருகிறான்''''மொத்தத்தில் பண்பாளர். ஆனால் ஆயுள் அதிகமில்லை. அப்படித்தானே''''அப்படியே. எத்தனை பண்போடு வாழ்ந்தென்ன பயன். ஆயுள் இல்லையே''''பரவாயில்லை மகரிஷி. மனதில் அவரை என் மணாளனாக வரித்து விட்டேன்''சாவித்ரி அவ்வாறு கூறியதும் அஸ்வபதி இடிந்து போனான்.''இது முட்டாள்தனமான முடிவு. அவனது மரணம் பற்றி அறிந்தும் அவனை விரும்புவது எந்த வகையில் சரி'' என்றும் கேட்டான்.''மனதால் ஒருவரை மணாளனாக வரித்தபின் மனதை மாற்றிக் கொள்வது பண்பல்ல. நன்றோ தீதோ ஒரு பார்வை; ஒரு காதல்; ஒரு உறவு. இதுவே என் முடிவு'' என்றாள். சாவித்ரியின் பேச்சு அஸ்வபதி, நாரதரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சாவித்ரி வாழ்வு என்பது நெடியது. அதில் எச்சரிக்கை அவசியமான ஒன்று. உன் பதில் கேட்க இனித்தாலும் நீ வாழும் போது கசந்து விடும். உன் புண்ணியமே உனக்கு முன்பே இந்த உண்மை தெரிய வர காரணம். எனவே சிந்தித்து செயல்படு'' என்றார் நாரதர்.''ஆம் மகளே... எந்த தந்தையும் தன் மகள் நன்கு வாழ வேண்டும் என்றே விரும்புவர். இந்த அற்ப ஆயுள் என்ற உண்மை தெரிந்த நிலையில் என்னால் எப்படி அவனுக்கு மணம் செய்து தர இயலும்'' என அஸ்வபதி வாதிட்டான்.''தந்தையே...இந்த உண்மை எனக்குத் தெரியவர முன்ஜென்ம புண்ணியம் காரணம் என்றீர்கள். அது நிச்சயம் கை விடாது. அவருடன் நெடுங்காலம் வாழ்வேன் என என் ஆழ்மனம் கூறுகிறது'' ''இல்லை என்னால் உனக்கு மணம் செய்விக்க முடியாது. என் பேச்சைக் கேள்''''என் மனதை மாற்றிக் கொள்ள இயலாது. வாழ்வு என்பது பவித்ரமானது. புலன் இன்பங்களால் மட்டும் ஆன ஒன்றல்ல. சிலகாலம் வாழ்ந்தாலும் சத்யவானுடன் வாழ்வதையே விரும்புகிறேன். அவனது நற்குணங்களை நான் இன்னொருவரிடம் எக்காலத்திலும் எதிர்பார்க்க முடியாது.நாடு இழந்த நிலையிலும் கானக வாழ்வு வாழ அவர் அஞ்சவில்லை. பெற்றோருக்கு உற்ற துணையாக விளங்குகிறார். அரச போகங்களை துறக்க துணிவு வேண்டும். இப்படி ஒருவரே எனக்கு பொருத்தமானவர் '' நாரதர் ஒரு கட்டத்தில் பரவசப்பட்டவராக, ''சாவித்ரி உன் மனஉறுதியை பாராட்டுகிறேன். சத்யவானையே மணப்பாயாக. விதியானது சத்யவானைக் கொண்டு செல்ல முனைந்தாலும் மதியால் மாற்ற முயற்சிக்கலாம். இந்த உலகில் விதியை மாற்றும் வலிமை பத்தினிக்கு உண்டு. அந்த வகையில் ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகளின் போது நோன்பிருக்க விசேஷ ஆற்றல் உண்டாகி உன் கண்களுக்கு தேவர்களும் புலப்படுவர். அவர்கள் கட்டுப்பட்டும் நடப்பர். எனது ஆலோசனையை ஏற்பாய் அல்லவா'' என்றார். ''நன்றி மகரிஷி. இந்த வழிகாட்டுதலை மறக்க மாட்டேன். அதை பின்பற்றுவேன்'' என்றாள் சாவித்ரி. தந்தை அஸ்வபதியும் மகளின் விருப்பத்தை நிறைவேற்றத் தயாரானான். மந்திரிகள், குருநாதர்கள், ராஜரிஷிகள் ஆகியோருடன் வனத்திற்குச் சென்று துய்மத்சேனனை சந்தித்த தன் நோக்கத்தை தெரிவித்தான். அதையறிந்த அவன் வியப்படைந்தான்.''மந்திர தேச மகாபிரபுவே! உங்களுக்கு பெரிய மனசு. இல்லாவிட்டால் நாடு, கண்பார்வை, சகலமும் இழந்த என்னை பொருட்படுத்தி இத்தனை துாரம் வந்திருப்பீர்களா... மகிழ்ச்சி. உங்கள் மகள் சாவித்ரியை எண்ணி ஆச்சரியம் கொள்கிறேன். சத்யவான் கொடுத்து வைத்தவன்'' என துய்மத்சேனனும் சம்மதித்தான்.''சத்யவானின் விருப்பத்தை அறிய விரும்புகிறேன்'' என்றான் அஸ்வபதி.''எங்கள் விருப்பத்தையே தன் விருப்பமாக கொண்டிருப்பவன் அவன். ஆயினும் நீங்களே அவனிடம் நேரில் அறிந்து கொள்ளுங்கள்'' என சத்யவானை அழைத்தான் துய்மத்சேனன்.அப்போதுதான் கூடை நிறைய காய், கனிகள், தேனுடன் வந்து நின்றான் சத்யவான். ஒரு கையில் கோடரி. மறுகையில் பழக்கூடை என ஒரு தொழிலாளி போல தென்பட்டான். ஒரு ராஜகுமாரனின் அந்த தோற்றம் அஸ்வபதிக்கு ஆச்சரியம் தந்தது. பால் நிலா போல ஒளி முகம். அதில் அரும்பும் மீசை. கட்டுடல். கவர்ந்திழுக்கும் கண்கள் என சத்யவானின் தோற்றம் அஸ்வபதியை மயக்கியது. உடன் வந்த மந்திரிகள், ரிஷிகள் அவனைக் கண்டு மகிழ்ந்தனர். தப்பித் தவறியும் எவரும் அவன் ஒரு வருடமே இருப்பான் என்பதை வெளிப்படுத்தவில்லை. அவனிடம் விருப்பத்தைக் கேட்டனர். துய்மத்சேனன், ''செல்வனே! உன்னை மணக்க விரும்புகிறாள் மந்திர தேசத்து இளவரசி சாவித்ரி. உன் விருப்பத்தைச் சொல்''''தந்தையே! வனவாசியான எனக்கு எதற்கு திருமணம். நான் இப்போது இருக்கும் நிலையில் ஒரு இளவரசியை எப்படி பாதுகாக்க இயலும். சிங்கங்களின் கர்ஜனை, யானைகளின் பிளிறல் ஒலிக்கு நடுவில் வாழும் நமக்கு எதற்கு தந்தையே இதில் எல்லாம் விருப்பம்?''''புத்ர... நானும் கூறி விட்டேன். ஆனால் சாவித்ரி வனத்தில் உன்னை எங்கோ பார்த்து காதல் கொண்டு விட்டாள். அவள் தன் விருப்பத்தில் உறுதியாக உள்ளாள்''''தந்தையே! என்ன சொல்வதென தெரியவில்லை. இனி உங்கள் விருப்பமே. ஒரு கருத்தை மட்டும் கூறுகிறேன். திருமணத்திற்குப் பிறகு என்னையும் உங்களையும் அவர்களின் அரண்மனைக்கு அழைக்கக் கூடாது. இழந்த நாட்டை மீட்டு ஒரு அரசனாகவே நான் செல்வேன். அதுவரை சாவித்ரி காட்டில் தான் வசிக்க வேண்டும். சம்மதம் என்றால் எனக்கு தடை இல்லை'' என்றான் சத்யவான். அவனது சுயமரியாதை உணர்வு அஸ்வபதிக்கு பிடித்து போனது.''அரசே! தங்கள் புத்திரரின் உணர்வை மதிக்கிறேன். அவ்வாறே ஆகட்டும்'' என்றான் அஸ்வபதி.அதைக் கேட்டு அனைவரும் மகிழ்ந்தனர். கூடவே இத்தனை உறுதி படைத்தவன் ஒரு ஆண்டில் இறக்கப் போகிறானே என கவலையும் கொண்டனர். அதன்பின் நல்ல முகூர்த்த நாளில் சாவித்ரி சத்யவான் கரம் பற்றினாள். பின் கண்ணீருடன் அஸ்வபதி மகளைப் பிரிய நேர்ந்த போது சாவித்ரியும் கண்ணீர் சிந்தினாள். ''மகளே... எக்காரணம் கொண்டும் சத்யவானுக்கு வரப்போகும் ஆபத்து பற்றி தெரியக் கூடாது. எவ்வாறு அதை வெல்லப் போகிறாயோ... அதுவும் எனக்குத் தெரியவில்லை. என் 18 ஆண்டு கால தவத்தின் பயன் நீ! உன்னை அந்த பராசக்தி தான் காத்தருள வேண்டும்'' என்றான். ''தந்தையே... மகிழ்ச்சியுடன் புறப்படுங்கள். நான் சீரும் சிறப்புமாக வாழ்வேன் என உறுதியாக நம்புகிறேன். நாரதர் கூறிய ஏகாதசி, துவாதசி, திரயோதசி விரதம் தான் என் பலமே! நானா அந்த எமனா என்று ஒருகை பார்த்து விடுகிறேன்'' என மன உறுதியோடு பேசினாள் சாவித்ரி. -தொடரும்இந்திரா செளந்தர்ராஜன்98947 23450