ஜெயித்துக் காட்டுவோம்! (24)
'வாழ்வில் உயர வேண்டும்' என்று தான் அனைவரும் ஆசைப்படுகிறோம். ஆனால் அதற்கான வழிமுறைகளில் தான் பலர் தடம் புரண்டு போகிறார்கள்.குறுகிய காலத்தில், குறுகிய வழியில், குபேரனாகி விட எண்ணுவது எவ்வளவு கீழ்த்தரமானது?உத்தமமான எண்ணங்கள் தான் உயர்வான வாழ்வின் உத்தரவாதங்கள் என்கிறார் திருவள்ளுவர்.வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்உள்ளத் தனையது உயர்வுகுறளின் கருத்தையே 'மனம் போல் வாழ்வு' என பெரியவர்கள் கூறுகின்றனர்.எண்ணங்கள் தான் சொற்கள் ஆகின்றன! சொற்கள் தான் பிறகு செயல் வடிவம் பெறுகின்றன!செயல்களின் தொகுப்புதான் ஒருவரின் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது.எனவே துாய்மையான, உயர்வான, நேர்மறையான எண்ணங்களை நம் மனதிற்குள் புக அனுமதிக்க வேண்டும்.உழைப்பு, நேர்மை, உண்மை, அன்பு, இரக்கம், மனிதநேயம், பரோபகாரம், தியாகம் முதலான துாய குணங்களின் சங்கமமாக நம் நெஞ்சம் துலங்க வேண்டும்.வாழ்ந்தவர் கோடி! மறைந்தவர் கோடி! மக்கள் மனதில் நிற்பவர் யார்? - என சிந்தித்தால் 'நற்குண நாயகர்களே' ஞாபகத்துக்கு வருகின்றனர்.பொறாமை, ஆணவம், பேராசை, கருமித்தனம், கோபம், வஞ்சகம், திருட்டு முதலான தீய எண்ணங்களை வளர்த்து கொண்டவர்களை, சமுதாயம் வாழும் போதும், வாழ்ந்த பின்பும் புறக்கணிக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.தன்னுடைய ஐந்து வயது மகனை அழைத்துக் கொண்டு மலைப்பகுதிக்கு சென்றார் தந்தை. மலை ஏறும் போது சிறிய கல் ஒன்று, சிறுவனின் காலில் பட வலி தாங்காது 'ஆ' என்று அலறினான் சிறுவன். அது மலைகள் சூழ்ந்த இடம் என்பதால் 'ஆ...ஆ...' என்று எதிரொலி கேட்டது.ஐந்து வயது பையனுக்கு அது புதிய அனுபவம். ஆதலால் என்னை போலவே யார் கத்துகிறார்கள் என தந்தையை கேட்டான்.சிரித்தபடியே அப்பா, அவனை பார்த்து 'நீ தினமும் பாடும் கடவுள் பாடலை இப்போது உரக்கச்சொல்' என்றார். அவனும் 'முருகா! முருகா! வருவாய் மயில் மீதினிலே' என பாட, மலை அதையும் எதிரொலித்தது.வியந்த சிறுவன்,'என்னப்பா இது ஆச்சர்யமாக இருக்கிறதே...'என்றான்.'இது தான் எதிரொலி' என அப்பா விளக்கியதோடு நிற்காமல் அறிவுரையும் சொன்னார்.'எதிரொலி போன்றது நம் வாழ்க்கை. நாம் என்னென்ன எண்ணங்களை கொண்டிருக்கிறோமோ அவற்றின் பிரதிபலிப்பாகவே வாழ்க்கை இருக்கும். அன்பும், நட்பும், அடுத்தவர்களுக்கு உதவி புரியும் நல்லெண்ணங்களையும் உன் மனதில் இப்போதிருந்தே வளர்த்து கொண்டால் உனக்கு நண்பர்களும் அவ்வாறே அமைவர். வாழ்க்கையும் சிறக்கும்'' என்றார்.ஆம்! எண்ணங்கள் நம் ஆழ்மனதில் துாவப்படுகின்ற விதைகள்.வேப்பம் விதைகளை விதைத்து, ஆப்பிள் பழத்திற்கு ஆசைப்படலாமா?'பெரிதினும் பெரிது கேள்! நன்று கருது!' என்றெல்லாம் புதிய ஆத்திச்சூடியில் இளைஞர்களுக்கு அறிவுரை கூறுகிறார் தேசியக்கவி பாரதியார்.'1330 திருக்குறள்களில் உங்களை அதிகம் கவர்ந்தது எது?' என கேட்டதற்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், 'எனக்கு நன்னடத்தை கோட்பாட்டை நாளும் கற்பித்தவர் திருவள்ளுவர்.'உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றதுதள்ளினும் தள்ளாமை நீர்த்து'என்ற குறளே எனக்கு பிடித்தமான குறள் என்றார்.கலாம் அவர்களைக் கவர்ந்த திருக்குறளில் வள்ளுவர் கூறும் அறிவுரை என்ன?'எண்ணும் எண்ணம் உயர்வாக இருக்க வேண்டும். ஒரு வேளை நீ எண்ணும் மேலான எண்ணங்கள் கை கூடாமல் போனால் அப்படி நினைப்பதை ஒரு போதும் விட்டு விடாதே!'மேற்கண்ட திருக்குறள் கலாமை கவர்ந்ததற்கான காரணம் தெரியுமா?அவர் வாயிலாவே நாம் அதை அறிவோம்.'பொறியியல் பட்டதாரியான நான் விமானப்படை தேர்வு வாரியத்தின் நேரடித்தேர்வில் பங்கேற்றேன். போட்டிக்காக இருபத்து ஐந்து பேர் வந்திருந்தனர். ஆனால் பணிக்கான காலி இடங்கள் எட்டு. என்னால் அத்தேர்வில் ஒன்பதாவது இடத்தை தான் பிடிக்க முடிந்தது. 'பறக்க வேண்டும்' என்ற என்னுடைய நீண்டநாளைய ஆசை நிராசையாகி விட்டதால் நான் குழப்பம் அடைந்தேன்.கொஞ்சம் அமைதி பெறுவதற்காக ரிஷிகேஷ் புறப்பட்டேன். கங்கையில் நீராடி மனம் மகிழ்ந்தேன். பின் அங்கிருந்த சிவானந்த ஆசிரமத்தை நாடி சென்றேன். வெள்ளை வெளேர் வேட்டியும், மரத்தால் ஆன பாதுகையும் அணிந்து புத்தர் போல காட்சியளித்த சுவாமி சிவானந்தரை சந்தித்தேன்.இந்திய விமானப்படையில் சேர முடியாமல் போனதை வேதனையுடன் அவரிடம் கூறினேன். அவர் புன்னகை புரிந்தார். அதில் என்னுடைய துயரங்கள் அனைத்துமே அடித்துச் செல்லப்பட்டன.பின்னர் மெல்லிய குரலில் சிவானந்தர் கூறினார், 'துாய்மையாகவும், வலுவாகவும் இதயத்தில் தோன்றும் எண்ணங்களுக்கு அபார மின்சக்தி உண்டு. ஒவ்வொரு இரவும் மனமானது உறக்க நிலையில் ஆழ்ந்து விடும் போது, இந்த சக்தியானது வான்வெளியில் கலக்கிறது. அச்சக்தி பிரபஞ்ச இயக்கத்தில் வலுவடைந்து பின் அதிகாலையில் நம் உணர்வோடு சங்கமம் ஆகின்றது. எனவே மனத்தில் தோன்றிய வலுவான எண்ணம் நிச்சயமாக நிஜமாகும். யுகம் யுகமாக இது மெய்ப்பிக்கப்பட்ட ஒன்று. பரிபூரணமாக இதை நீ நம்பு!'சிவானந்தரின் சொற்களை 'சிக்'கெனப் பற்றி கொண்ட அப்துல்கலாம் முயற்சிகளில் வெற்றி பெற்று முழுநிலவாக ஜொலித்தார் என்பதை நாம் அனைவருமே அறிவோம் அல்லவா!எனவே உயர்வான, நல்ல எண்ணங்களையே உள்ளத்திற்குள் வளர செய்தால் நம் வாழ்வில் வளர்ச்சி நிச்சயம்!தொடரும்அலைபேசி: 98411 69590திருப்புகழ் மதிவண்ணன்