உள்ளூர் செய்திகள்

கதை கேளு.. ராமாயண கதை கேளு... - 23

நாளைக்கே பட்டாபிஷேகம்தசரதன் அவசர அவசரமாக ராஜசபையைக் கூட்டினார். சபையோரிடம், ''என் மூத்த மகன் ராமனுக்கு முடிசூட்ட உத்தேசித்துள்ளேன். உங்களில் யாருக்காவது மாற்றுக் கருத்து இருந்தால் தயக்கமின்றி சொல்லுங்கள்''என்று கேட்டார்.அந்த யோசனைக்கு மாற்றாக எதையும் சிந்திக்க யாரும் தயாராக இல்லைதான். ஆனாலும் அந்த ராஜாங்கத்தில் ஜனநாயக பண்பாடு புறக்கணிக்கப்பட்டதில்லை. மன்னனின் முடிவுதான் என்றாலும் அதை சபை முன்வைத்து ஒப்புதல் பெறும் நாகரிகம் அங்கே மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த விபரத்தை ஜனகருக்கும், உதாஜித்துக்கும் தசரதன் தெரிவிக்காதது ஏன் என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படத்தான் செய்தது. குலகுரு வசிஷ்டரும் எதையோ தீர்க்கதரிசனமாக எதிர்பார்த்து மவுனம் சாதித்தார். தசரதனின் அவசரம்தான் யாருக்கும் புரியவில்லை. நாளைக்கே ராமனுக்குப் பட்டாபிஷேகம் நடத்த வேண்டும் என்ற அவரது விருப்பத்தில் அல்லது கட்டளையில் 'நாளை இல்லை என்றால் இனி இல்லை' என்பது போன்ற பதட்டம் படர்ந்திருந்தது.தசரதன் ராமனை அழைத்தார். கொஞ்சம் வெளிப்படையாகவே பேசினார்: ''ராமா... நாளைக்கு உனக்கு பட்டாபிஷேகம் செய்து வைப்பதாக இருக்கிறேன். பரதன் அவனுடைய மாமன் இல்லத்திற்குச் சென்றிருக்கும் இந்தத் தருணம் மிகச் சரியானது என்று எனக்குத் தோன்றுகிறது. ஏனென்றால் அங்கே யாராவது அவன் மனதைக் கலைத்து அவனே அரசாளத் தகுதியானவன் என போதித்துவிடக் கூடாது அல்லவா''ராமன் திடுக்கிட்டான். அவனால் பரதனை மட்டுமல்ல, யாரையுமே தனக்கு எதிரானவர்களாகக் கருதவே முடியவில்லை. ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் 'பரதனுடைய யோசனையையும் கேட்டு விடலாமே' என்று தந்தையிடம் சொல்லவும் அவன் தயாராக இல்லை. ஏனென்றால் அதையெல்லாம் யோசிக்காமல் அவர் இப்படி ஏற்பாடு செய்ய மாட்டார். அவருடைய செயல் எல்லாவற்றிற்கும் ஏதேனும் காரணம் இருக்கும் என்று அவர் மீதுள்ள மதிப்பால், மரியாதையால், மனதுக்குள் சமாதானம் சொல்லிக் கொண்டு சம்மதமாகத் தலை குனிந்து அவரை வணங்கினான். அந்த அரண்மனை மட்டுமல்ல, அயோத்தி முழுவதுமே செய்தி பரவி விட்டது. ஒரே நாள் அவகாசத்தில் செய்ய வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் அவரவர் தாமாகப் பொறுப்பேற்று செய்ய ஆரம்பித்து விட்டார்கள். ராம பட்டாபிஷேக செய்தி கைகேயியையும் எட்டியது. உவகையுடன் அந்த மகோன்னத சம்பவத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். இந்த சூழ்நிலையில்தான் மந்தரை அவளை சந்தித்தாள். ''ரொம்பவும் ஆனந்தமாக இருக்கிறாய் போலிருக்கிறதே''என்று விஷமமாகக் கேட்டாள் மந்தரை என்ற கூனி.''நிச்சயமாக. என் ராமனுக்கு பட்டாபிஷேகம் என்றால் அதைவிட சந்தோஷம் வேறு என்ன இருக்கும்''கைகேயி உற்சாகமாகச் சொன்னாள். ''ஆனால், அந்தப் பதவி ராமனைவிட உன் மகன் பரதனுக்குத்தான் சரியாகப் பொருந்தும் என்பதை நீ யோசிக்கவே இல்லையா''கைகேயி கூர்ந்து பார்த்தாள். என்ன சொல்ல வருகிறாள் இவள்.''ஆமாம் கைகேயி. யோசித்துப் பார். உன் பாரம்பரியம் என்ன. உன் சக களத்தியரைவிட உன் அந்தஸ்து உயர்ந்தது. நாட்டை ஆளத் தகுதியுடையவன் உனக்குப் பிறந்த பிள்ளைதானே தவிர, ஒரு சிற்றரசனின் பேரன் அல்ல. தசரதன் புத்திர காமேஷ்டி யாகம் மேற்கொண்டதன் பலனாக உங்களுக்குக் குழந்தைகள் பிறந்தன. அவர்களில் மூத்தவனான ராமன் பிறந்தபோது தசரதன் அவனை முதலில் யார் மடியில் தவழவிட்டார். கோசலை மடியிலா, இல்லை உன் மடியில்தானே.. அதற்கு என்ன அர்த்தம். கோசலையை விட பாரம்பரியத்தில் உனக்குக் கூடுதல் பெருமை உண்டு என்பதுதானே''''இருக்கலாம்..''''தனக்குப் பிறகு நாடாளப் போகும் ராமனை, உன் மடியில் தசரதன் கிடத்தியதற்கு என்ன காரணம். உன் பராமரிப்பில் ராமன் வளருவானானால் ஒரு சக்கரவர்த்திக்குத் தேவையான அனைத்து இலக்கணங்களும் உன்னிடமிருந்து அவனிடம் போய்ச் சேரும்தானே. அப்போது நீ என்ன நினைத்தாய். ராமன் மூத்த குழந்தை, முதல் வாரிசு என்றுதானே. அது உன்னுடைய குழந்தையாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, தசரதனின் முதல் மகன் என்றுதானே''''உண்மைதான், சகோதரர்களில் மூத்தவன்தான் அடுத்த வாரிசு என்ற ராஜாங்க நடைமுறை எனக்கும் தெரியும்'' கைகேயி இயல்பாகச் சொன்னாள்.''முட்டாள் நீ. தசரதனையும், ராமனையும் மட்டுமே பார்க்கிறாய். உன்னையும், கோசலையையும் ஒப்பிட்டுப் பார்க்க மறுக்கிறாய். ராமனும் அரியணையும் பொருந்தாத பந்தம். பரதனுக்குதான் தர்பாரில் கோலோச்சும் உரிமை உண்டு. ஏனென்றால் தசரதனும், உன் தந்தையும்தான் சமமான ராஜ அந்தஸ்துடையவர்கள்...''கைகேயி மெல்ல யோசிக்கத் துவங்கினாள். கூனி மனசுக்குள் மகிழ்ந்தாள்.''ஆனால் ராமனுக்கு பதிலாக பரதனை மன்னர் எப்படி ஏற்றுக்கொள்வார். ராமன் மீது அவருக்கு இருக்கும் பாசம் நாடறிந்ததாயிற்றே. அதைவிடு, பரதன்தான் எப்படி ஒப்புக்கொள்வான். ராமன்தானே அவனுடைய உதாரண புருஷன். அவனிருக்க தான் முடிசூட்டிக்கொள்ள அவன் ஒருக்காலும் சம்மதிக்க மாட்டான்''''இருவரையும் சம்மதிக்க வைக்க முடியும். தசரதனை சமாளிப்பது உன் பொறுப்பு. பரதனை நான் பார்த்துக் கொள்கிறேன்''''மன்னரை எப்படி சம்மதிக்க வைப்பது''''உன்னிடம் அஸ்திரம் இருக்கிறது. தசரதன் உனக்களித்த வரங்கள் இரண்டு உன் வசம். அதை பயன்படுத்து. சம்பரனுடன் யுத்தத்தில் தசரதன் ஈடுபட்டபோது சாரதியாக நீ பணிபுரிந்தாய். அதில் தசரதன் வெற்றி பெற ஒத்துழைத்தாய். அதற்கு வெகுமதியாக இரு வரங்களை அளித்தார். அதை இப்போது கேள். ஒரு வரம் ராமனை காட்டுக்கு விரட்டட்டும், இன்னொன்று பரதனுக்கு சிம்மாசனம் அளிக்கட்டும்''கைகேயியின் குழப்பம் அவளது முகத்தில் தெரிந்தது. ''தசரதன் இந்த ஏற்பாட்டுக்கு ஒப்புக்கொண்டாலும், பரதன் ஏற்றுக் கொள்வானா. ராமனிடம் சற்றே பாராமுகமாக இருந்தாலும் என்னைப் பெரிதும் கடிந்து கொள்வானே அவன்! இந்த திட்டத்தைக் கேட்டால் அவன் வெகுண்டெழ மாட்டானா. அவனுடைய கோபம் உனக்குத் தெரியாதா!''''பரதனை பார்த்துக் கொள்கிறேன்... நீ தசரதனை சமயம் பார்த்து வீழ்த்த வேண்டும்''கைகேயியின் மனசுக்குள் போராட்டம். ஏதோ விபரீதத்தை உணர்ந்தாள். இதன் விளைவு என்னவாகும். மந்தரை எந்த நோக்கத்திற்காகத் தன்னை அசைக்கப் பார்க்கிறாள். அவளின் ரத்தத்திலேயே ஊறிய ராஜதந்திரம் சிந்திக்க வைத்தது. அப்போதைக்கு தலையசைத்தாள். அந்த சமிக்ஞை போதுமானதாக இருந்தது மந்தரைக்கு. குழப்பம் ஏற்படுவது உறுதி. தந்தை, மகன், சகோதரர்களிடையே மோதல் உருவாகும். தன்னை அவமதித்த அயோத்தி அரண்மனைக்குத் தக்க தண்டனை கிடைத்து விடும். தன் திட்டப்படி அடுத்த கட்ட நடவடிக்கையில் மந்தரை இறங்கிய அதே சமயம், கைகேயி குழப்பத்துடன் நடை பயின்றாள். தன் மனம் சலனப்பட்டுவிடக் கூடாதே என்பதற்காக நந்தவன மலர்களையும், பசுமை பூத்த செடி, மரங்களையும் பார்த்து மனதை லேசாக்கிக்கொள்ள முயற்சித்தாள்.அப்போது அதே நந்தவனத்தில் அரண்மனையைச் சேர்ந்த சோதிட வல்லுநர் இருவர் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டாள். ராம பட்டாபிஷேகத்தைப் பற்றியும், கிரக அமைப்பு, நாள், நட்சத்திரம் எல்லாம் பற்றி அவர்கள் கவலை தொனியுடன் பேசியதைக் கேட்டு திடுக்கிட்டாள். 'குலகுரு வசிஷ்டருக்கு, நாளைய பட்டாபிஷேக ஏற்பாட்டில் உடன்பாடு இருந்திருக்குமா' என அவர்களுக்குள் கேட்டுக் கொண்டது அவளை கவலை கொள்ள வைத்தது. பிறகு ஒரு தீர்மானத்தோடு தன் மாளிகைக்குச் சென்றாள். தசரதன் மலர்ந்த முகத்துடன் ராம பட்டாபிஷேகம் என்ற இனிப்பான செய்தியைச் சொல்ல கைகேயியைத் தேடி வந்தார்.- தொடரும்பிரபு சங்கர்prabhuaanmigam@gmail.com